Last Updated : 17 May, 2019 12:00 AM

 

Published : 17 May 2019 12:00 AM
Last Updated : 17 May 2019 12:00 AM

எருமையூர் கல்குவாரியில் இருந்து சென்னைக்கு 10 மில்லியன் லிட்டர் குடிநீர் ஜூலை முதல் விநியோகம்: குழாய்கள் மூலம் 22 கல்குவாரிகளை இணைக்கும் பணி மும்முரம்

சென்னையில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டைச் சமாளிக்க செம்பரம்பாக்கம் ஏரி அருகே உள்ள எருமையூர் கல்குவாரியில் இருந்து ஜூலை முதல் வாரத்தில் இருந்து தினமும் 10 மில்லியன் லிட்டர் (ஒரு கோடி லிட்டர்) தண்ணீர் எடுக்கப்படவுள்ளது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய 4 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11,257 மில்லியன் கனஅடி. இவற்றில் செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் வறண்டுவிட்டன. மீதமுள்ள 2 ஏரிகளிலும் 175 மில்லியன் கனஅடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. தற்போது கடல்நீரை குடிநீராக்கும் 2 நிலையங்கள், வீராணம் ஏரி, விவசாயக் கிணறுகள், சிக்கராயபுரம் கல்குவாரி ஆகியவைதான் சென்னையின் குடிநீர் தேவையை சமாளித்து வருகின்றன. இந்நிலையில், மேலும் பல கல்குவாரிகளில் இருந்து சென்னைக்கு குடிநீர் எடுத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை குடிநீர்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: செம்பரம்பாக்கம் அருகே சிக்கராயபுரம் கல்குவாரியில் இருந்து தற்போது தினமும் 30 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுத்து சென்னைக்கு அனுப்புகிறோம். இப்பணி 2017-ம் ஆண்டு தொடங்கியது. கடந்த ஆண்டு தண்ணீர் எடுக்கவில்லை. இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து எடுத்துக் கொண்டிருக்கிறோம்.

இதற்கு அடுத்தபடியாக செம்பரம்பாக்கத்தில் இருந்து 11.5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எருமையூர் கல்குவாரியில் இருந்து ஏரி வரை தண்ணீர் கொண்டு வருவதற்காக குழாய் (350 மி.மீட்டர் விட்டம்) பதிக்கும் பணிகள் ரூ.19 கோடியில் நடைபெற்று வருகின்றன. இப்பணி ஜூன் மாதம் முடிவடைந்து, ஜூலை முதல் வாரத்தில் இருந்து தினமும் 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு சென்னைக்கு விநியோகிக்கப்படும். இக்குவாரியில் சுமார் 400 மில்லியன் லிட்டர் தண்ணீர் இருக்கிறது. இதிலிருந்து 60 நாட்கள் வரை தண்ணீர் எடுக்கலாம்.

செம்பரம்பாக்கம் அருகே கைவிடப்பட்ட கல்குவாரிகள் 25 உள்ளன. இவை, மலையம்பாக்கம், சிக்கராயபுரம், கொல்லஞ்சேரி ஆகிய 3 கிராமங்களைச் சுற்றி 107 ஹெக்டேர் பரப்பளவில் பொதுப்பணித் துறை, கூட்டுறவுத் துறை, கனிமவளத் துறை மற்றும் தனியாருக்குச் சொந்தமான குவாரிகள் ஆகும்.

இதில் ஒரு குவாரி, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ரயில் பாதை தோண்டும்போது கிடைத்த மணலைக் கொட்டி மூடப்பட்டு விட்டது. மற்ற 24 குவாரிகளில் தேங்கியிருக்கும் தண்ணீர் பயன்பாட்டுக்கு உகந்ததா என்று ஆய்வு செய்யப்பட்டது.

அதில், திருநீர்மலை குவாரியில் தேங்கியுள்ள தண்ணீரில் தோல்கழிவுகள் அதிகமாக இருப்பதால் அதைப் பயன்படுத்த முடியாது என்று தெரியவந்தது. பம்மல்குவாரி, அந்த நகராட்சியின் பயன்பாட்டுக்காக கொடுக்கப்பட்டுவிட்டது.

மீதமுள்ள 22 குவாரிகளை இணைக்கும் பணிகள் சுமார் ரூ.1 கோடியில் தொடங்கியுள்ளன. அதன்படி, ஒரு குவாரியில் தண்ணீர் எடுக்கும்போது நீர்மட்டம் குறையக் குறைய அந்த இடத்தில் பெரிய துளையிட்டு அங்கு 250 மில்லி மீட்டர் விட்டம் கொண்ட குழாய்கள் சொருகப்படும். இவ்வாறு ஒவ்வொரு குவாரியிலும் 10 முதல் 15 மீட்டர் இடைவெளியில் 5 இடங்களில் குவாரியின் அடிப்பகுதி வரை துளையிட்டு குழாய்கள் சொருகப்படும்.

ஒரு குவாரிக்கும் மற்றொரு குவாரிக்கும் இடையே துளையிடும்போது பாறையில் விரிசல் ஏற்பட்டால் அதை உடைத்து சிறியகால்வாய்போல உருவாக்குவோம். இவ்வாறு 22 குவாரிகளையும் இணைத்துவிட்டால், மொத்தம் 300 மில்லியன் கனஅடிதண்ணீர் கிடைக்கும். இது, செம்பரம்பாக்கம் ஏரி கொள்ளளவில் (3,365 மில்லியன் கனஅடி)10-ல் ஒரு பங்காகும். செம்பரம்பாக்கத்தில் இருந்து போரூருக்கு தந்தி என்றமழைநீர் கால்வாய் செல்கிறது. அவ்வப்போது மழை பெய்யும்போது இந்த கால்வாயில் செல்லும் தண்ணீர் கசிந்து குவாரிகளுக்கு வருகிறது. குவாரி தண்ணீரைக் கொண்டு சென்னைக் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x