Published : 26 May 2019 03:31 PM
Last Updated : 26 May 2019 03:31 PM
தென்மேற்குப் பருவமழை ஜூன் 6-ம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்னும் தாமதமாகும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தென்மேற்குப் பருவமழை கடந்த 19-ம் தேதியே அந்தமான் தீவுகளில் தொடங்கிவிட்டதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் வழக்கமாக ஜூன் 1-ம் தேதி தொடங்கும் பருவமழை இந்த ஆண்டு தாமதமாக 6-ம் தேதி தொடங்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இந்த சூழலில் இன்னும் தாமதமாக ஜூன் 2-வது வாரத்தின் கடைசியில் அதாவது 8-ம் தேதி முதல் 10-ம் தேதிக்கு இடையில் தென்மேற்குப் பருவமழை தொடங்க வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் முகநூல் பதிவில் எழுதி வரும் பிரதீப் ஜான் இந்து தமிழ் திசை இணையதளத்துக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
''தென்மேற்குப் பருவமழை இந்த ஆண்டு தாமதமாகத் தொடங்கும். வழக்கமாக ஜூன் 1-ம் தேதி தொடங்கிவிடும். ஆனால், இந்த ஆண்டு ஜூன் 6-ம் தேதி தொடங்கும் என்று கூறப்பட்டாலும், அது இன்னும் தாமதமாகி ஜூன் 2-வது வாரத்தின் இறுதியில் அதாவது 8-ம் தேதி முதல் 10-ம் தேதிக்கு இடையில்தான் தொடங்க வாய்ப்புள்ளது.
அதுவரை தமிழகத்தின் உள்மாவட்டங்கள், கேரளா, கர்நாடகத்தில் வெப்பச்சலனத்தால் இடியுடன் கூடிய மழை நீடிக்கும்.
கேரளாவில் தொடங்கும் தென்மேற்குப் பருமழையால் தமிழகத்தின் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்திருக்கும் மாவட்டங்கள் மட்டுமே மழையைப் பெறும்.
குறிப்பாக வால்பாறை, நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, ஆகிய மாவட்டங்களுக்கு தென்மேற்குப் பருவமழையால் நல்ல மழை கிடைக்கும். இந்த மழையால் அப்பகுதியில் இருக்கும் அணைகளில் நீர் இருப்பு உயர்வதற்கு வாய்ப்பு உள்ளது.
இந்த முறை வெப்பச்சலனத்தால் பொள்ளாச்சி பகுதியில் இடியுடன் கூடிய மழை சரியாகப் பெய்யாவிட்டாலும் தென் மேற்குப் பருவமழையால் ஓரளவுக்கு மழையை எதிர்பார்க்காலம்.
தென்மேற்குப் பருவமழை தொடங்கும் வரை தமிழகத்தின் உள்மாவட்டங்களில் வெப்பச்சலன மழையை எதிர்பார்க்கலாம். இந்த வெப்பச்சலன மழை இடியுடன் கூடிய மழையைக் கொடுக்கும்.
குறிப்பாக சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, திருப்பூர், நாமக்கல், நீலகிரி, வேலூர் மாவட்டத்தின் மேற்குப் பகுதி, திருவண்ணாமலை, பெங்களூரு, மைசூரு ஆகியவற்றிலும் வெப்பச்சலனத்தால் மழை இருக்கும்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை பகுதிகளில் நாள்தோறும் மலை நேரங்களில் மழையை எதிர்பார்க்கலாம்.
வெப்பச்சலனத்தால், கேரளாவில் எர்ணாகுளம், ஆழப்புழா,கோட்டயம், வயநாடு, திருச்சூர் ஆகிய மாவட்டங்களில் மழை இருக்கும்.
ஆந்திராவில் சித்தூர், அனந்தபூர் மாவட்டங்களிலும் வெப்பச்சலன மழை இருக்கும். பெங்களூரு, மைசூருவிலும் வெப்பச்சலன மழை இருந்தாலும், தென்மேற்குப் பருவமழை தொடங்கி பின் மழை நின்றுவிடும். ஆனால், பெங்களூருவில் குளிர்ந்த காலநிலை நிலவும்.
ஜூன் 2-வது வாரத்துக்குப் பின் கர்நாடக மற்றும் கேரள மாநிலத்தின் கடற்கரை மற்றும் மலைப்பகுதிகளில் தென் மேற்குப் பருவமழை தீவிரமடைந்து, நல்ல மழையைக் கொடுக்கும். அதுவரை அந்தப் பகுதிகளிலும் வெப்பச்சலன மழை இருக்கும்.
சென்னையைப் பொறுத்தவரை ஜூன் மாதம் வரையில் வெயில் தொடரும். குறிப்பாக வடதமிழக மாவட்டங்கள், சென்னையின் புறநகர் பகுதிகளில் அதிகபட்சமாக 40 டிகிரிக்கும் அதிகமாக வெயில் இனிவரும் நாட்களில் இருக்கும். திருத்தணி, வேலூர் பகுதியில் அதிகபட்சமாக 44 டிகிரி வரை வெயில் இருக்கக்கூடும். குறிப்பாக வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்கள், சென்னை, சென்னை புறநகர், கடலூர், விழுப்புரம், அரியலூர் திருச்சி, தஞ்சை, சேலம், நாமக்கல், கரூர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, விருதுநகர், தூத்துக்குடி உள்பகுதிகளில் வெயில் இருக்கும்''.
இவ்வாறு பிரதீப் ஜான் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT