Published : 04 May 2019 09:28 PM
Last Updated : 04 May 2019 09:28 PM

அதிமுக ஆட்சிக்கு தமீமுன் அன்சாரி துணை இருப்பார், கருணாஸ் மீதுதான் சந்தேகம்: தனியரசு எம்.எல்.ஏ பேட்டி

அதிமுக அரசுக்கு ஆதரவாக தமீமுன் அன்சாரி துணை இருப்பார் என்பதால்தான் திமுகவை ஆதரித்தும் அதிமுக தலைமை நடவடிக்கை எடுக்கவில்லை, ஆனால் கருணாஸ் விஷயத்தில் அப்படி சொல்ல முடியாது என தனியரசு எம்.எல்.ஏ பேட்டி அளித்தார்.

2016 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சின்னத்தில் நின்று வெற்றிப்பெற்ற தனியரசு, கருணாஸ், தமீமுன் அன்சாரி ஆகியோர் அதிமுக தலைமையுடன் பலமுறை மாறுபட்டு உள்ளனர். தமீமுன் அன்சாரி அதிமுகவுக்கு எதிர்ப்பாக திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.

ஆனால் 3 அமமுக எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கைக்கு பரிந்துரைத்த அதிமுக கொறடா தமீமுன் அன்சாரியை விட்டுவிட்டார், அதுகுறித்தும், அதிமுக வெற்றி வாய்ப்பு, கருணாஸ் குறித்தும் மூவர் அணியின் ஒருவரான தனியரசு எம்.எல்.ஏ இந்து தமிழ் திசைக்கு அளித்த பேட்டி:

3 அமமுக ஆதரவு எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை வருகிறது, உங்கள் மூவர் அணி மீது ஏன் வரவில்லை?

இயல்பாகவே தோழமைக்கட்சிகளை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளவேண்டும் என ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் விரும்புவதில்லை. அந்த எண்ணம் அவர்களுக்கு உள்ளது எனக்கு வியப்பாக இருந்தது.

முதலில் அமமுக 3 பேர் அடுத்து நீங்கள் 3 பேராக இருக்கலாம் அல்லவா? கொறடா ராஜேந்திரனும் லேசாக சொல்லியிருக்கிறாரே?

இருக்கலாம், ஒரு எல்லை மீறும்போது அவர்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள அதிமுக தலைமை முயற்சிக்ககூடும், ஆனால் தற்போது அவர்கள் நடவடிக்கை எடுத்து தங்களுக்கான அதிகாரத்தை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும் என்கிற நிலையில் இல்லை என்று நினைக்கிறேன்.

உங்கள் பாணி வேறு, கருணாஸ் இடையில் முரண்பட்டு பின்னர் சமாதானமானார், ஆனால் தமீமுன் அன்சாரி நேரடியாக திமுகவை ஆதரித்தாரே? அவர்மீது ஏன் நடவடிக்கை வரவில்லை?

அவர் மக்களவைத்தேர்தலில்  அதிமுக பாஜகவுடன் இணைந்து கூட்டணி வைத்துள்ளதை அவர் அதிமுக கூட்டணியில் இணைந்து பயனிக்க முடியாத நிலை உள்ளது. இதை அதிமுக தலைமையும் உணர்ந்திருக்கிறார்கள். திமுக மேடையில் ஏறினாலும் கூட இந்த அரசுக்கு எதிராக அவர் எதையும் பேசவில்லை.

அதன்பிறகும்கூட அவர் பேசியுள்ளார், நான் இந்த அரசுக்கு எதிராக பேசமாட்டேன், வாக்களிக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். அவர் தற்சமயம் 4 தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக பேச செல்லவில்லையே, நீங்கள் அதையும் கவனிக்கவேண்டும்.

சட்டப்பேரவைத்தலைவருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் எப்படி வாக்களிப்பீர்கள், மற்ற இருவரும் எப்படி வாக்களிப்பார்கள்?

இரட்டை இலையில் வென்ற அடிப்படையில் தனியரசு இருப்பார், நான் பேரவைத்தலைவருக்கு ஆதரவாகத்தான் வாக்களிப்பேன், ஆனால் தமீமுன் அன்சாரி பேரவை தலைவருக்கு எதிராக வாக்களிப்பார் என்று நம்பவில்லை, ஆனால் கருணாஸ் என்ன முடிவு எடுப்பார் என்று என்னால் யோசிக்க முடியவில்லை.

தமீமுன் அன்சாரி அரசுக்கு எதிராக வாக்களிக்கமாட்டார் என்ற நம்பிக்கை உண்டு, ஆனால் கருணாஸ் எப்படி இருப்பார் என்று எனக்கு தெரியாது. அன்சாரி அரசுக்கு ஆதரவாக இருப்பார் என்பதால்தான் அவர்மீது அதிமுக தலைமையோ, கொறடாவோ நடவடிக்கை எடுக்கவில்லை.

இப்போதுள்ள நிலையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்ததால் சட்டப்பேரவைத்தலைவர் நடவடிக்கை எடுக்க அதிகாரமில்லை என்கிறார்களே?

அப்படி ஒரு கருத்துச் சொல்கிறார்கள், ஆனால் அவர் 3 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அவர்கள் அளிக்கும் விளக்கத்தைப் பொருத்து நடவடிக்கை எடுக்க உரிமை உண்டு.

உரிமை பற்றி கேட்கவில்லை, அதிகாரம் உண்டா என்று கேட்கிறேன்?

உண்டு என்கிறேன். பேரவைத்தலைவருக்கு முழு அதிகாரம் உண்டு என்கிறேன். அவர் மூன்று பேர் மீது மட்டுமல்ல 5 பேர்மீது நடவடிக்கை எடுத்தாலும் அதை தவறு என்று எதிர்த்து கூறும் தகுதியும் யாருக்கும் இல்லை.

நீதிமன்றங்களும் பேர்வைத்தலைவர் முடிவை எதிர்த்து தீர்ப்பளிக்கவில்லை, இந்தியாவிலும் அப்படி எந்த தீர்ப்பும் இல்லை.

தீர்மானம் கொடுத்தால் அதன் பின்னர் தார்மீக ரீதியாக அதிகாரம் இல்லை என்கிறார்களே?

அதை நானும் கேள்விப்பட்டேன், அது எங்கு நடைமுறைக்கு வரும் என்றால் என் மீது நடவடிக்கைக்கு நோட்டீஸ் அளிக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள் அப்போது நான் நம்பிக்கை இல்லை என்று தீர்மானம் கொண்டுவந்தால் அப்போது வேண்டுமானால் நடவடிக்கை எடுக்க தயக்கம் வரும், அதுகூட தார்மீக அடிப்படையில்தான், சட்டம் இல்லை.

அதுதான் கருணாஸ் விவகாரத்தில் அது நடந்தது. பின்னர் பேசி சமாதானம் ஆனார்கள். அவர்மீது நடவடிக்கையும் கைவிடப்பட்டது. அவரும் கடிதத்தை திரும்பப்பெற்றார். அரசை ஐந்தாண்டு ஆதரிப்பேன் என்றார். திமுக கொடுத்துள்ள தீர்மானம் 3 பேர் மீதான பேரவைத்தலைவரின் உத்தரவை எந்த வகையிலும் தடுக்காது.

3 பேர் விவகாரத்தில் நடவடிக்கை எடுத்தால் திமுகவுக்கும் சாதகம்தானே? 21 பேர் தேவை என்கிற நிலையில் 19 பேர் வென்றால் போதும் என்கிற நிலை திமுகவுக்கு லாபம்தானே?

நம்பிக்கை இல்லா தீர்மானம் வந்தால் இவர்கள் எதிர்த்து வாக்களிப்பார்கள் என்கிறபோது அந்த எண்ணிக்கையை குறைக்கவேண்டும் என்றுத்தான் நினைப்பார்கள். நீங்கள் சொல்வதும் நடக்கும், மறுபுறம் அதிமுக கூடுதல் எம்.எல்.ஏக்கள் வென்றால் அவர்களுக்கும் லாபம்தானே.

22 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக கணிசமாக வெல்லுமா?

கணிசமாக வெல்வார்கள் என்கிற நம்பிக்கை மலையளவு என்றில்லாவிட்டாலும், நூலளவு மட்டுமே உள்ளது. பெரும்பான்மைக்கு போதுமான அளவு வெற்றிபெறுவார்கள் என்கிற நம்பிக்கை பெரிய அளவில் இல்லை, கடுகளவு உள்ளது.

ஏன் அப்படி சொல்கிறீர்கள்?

ஏனென்றால் மக்களவை தேர்தலை ஒட்டி உள்ள சூழல் உள்ளதால் அந்த எண்ணிக்கை குறைகிறது, ஆனால் கடுமையான தோல்வி என்பது அதிமுகவுக்கு இல்லை ஆட்சியை தொடரும் அளவுக்கு வெல்வார்கள் என்றுத்தான் நினைக்கிறேன்.

இவ்வாறு தனியரசு தெரிவித்தார்.  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x