Published : 06 May 2019 08:40 AM
Last Updated : 06 May 2019 08:40 AM
புற்றிடங் கொண்ட புராதனனைப் பூங்கோயின் மேய பிரானை யார்க்கும் பற்றிட மாய பரம்பொருளைப் பார்ப்பதி பாகனைப் பங்க யத்தாள் அர்ச்சனை செய்ய அருள்புரிந்த அண்ணலை மண்மிசை வீழ்ந்தி றைஞ்சி நற்றமிழ் நாவலர் கோன்உடம்பால் நன்மையின் தன்மையை மெய்ம்மை பெற்றார்” என்று புற்றிலும் உறையும் ஈசனைப் போற்றி வணங்குகிறார் பெரியபுராணத்தில் சேக்கிழார் பெருமான்.
திருவாரூர் தியாகராஜர் கோயிலில் இறைவனுக்கு வன்மீகநாதர் என்றும் புற்றிடங்
கொண்டார் என்றும் பெயருண்டு. அதாவது இங்கு அமைந்திருக்கும் லிங்கம், புற்றிலிருந்து சுயம்புவாகத் தோன்றியதாகக் கருதப்படுகிறது. இதனால் அப்பர் சுவாமிகள் சிவபெருமானைப் புற்றிடங்கொண்டார் என்று அழைக்கிறார். இதேபோல, கோவையிலும் ஒரு புற்றிடங்கொண்டீசர் அருள்பாலிக்கிறார். கோவை உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில், பொள்ளாச்சி சாலையில் அமைந்துள்ளது அருள்மிகு பூங்கோதை நாயகியம்மை உடனமர் புற்றிடங்கொண்டீசர் கோயில்.
சுமார் 850 ஆண்டுகள் பழமையான இக்கோயில், பிற்காலச் சோழர்காலத்துக் கோயிலாகும். மயானமும், புற்றுகளும் இருந்த இப்பகுதியில், கொங்கு மண்டலத்தை ஆட்சி செய்த சோழர்களில் ஒருவர் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளார். திருவாரூரில் எழுந்தருளிய புற்றிடங்கொண்டீசரின் திருநாமத்தையே இங்குள்ள இறைவனுக்கும் சூட்டி வழிபட்டதாகவும், அப்போதே அம்பிகையும் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
1995-ல் கும்பாபிஷேகம்...
காலச்சூழலில் இக்கோயில் சிதலமடைந்து விட்டது. இதையடுத்து, இப்பகுதியைச் சேர்ந்த சிவனடியார்கள் ஒன்று சேர்ந்து, நிறைநிலை வழிபாட்டு மன்றத்தை உருவாக்கி, கோயில் திருப்பணியில் ஈடுபட்டனர். ஏறத்தாழ 25 ஆண்டுகளுக்கு முன் ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம், கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், கொடி மரம், விநாயகர், சுப்பிரமணியர் ஆகியோருக்கு தனித்தனி சன்னதிகள் அமைக்கப்பட்டன. 1995-ல் கும்பாபிஷேகமும் நடத்தப்பட்டுள்ளது.
மூலவர் புற்றிடங்கொண்டீசர் கிழக்கு நோக்கு வீற்றுள்ளார். சுவாமிக்கு இடதுபுறம் அன்னை பராசக்தி ‘பூங்கோதை நாயகி’ என்ற பெயரில் எழுந்தருளியுள்ளார். நான்கு திருக்கரங்களுடன், கிழக்கு நோக்கிய வண்ணம் நின்ற திருக்கோலத்தில் வீற்றிருக்கிறார் அன்னை. இரு திருக்கரங்களில் தாமரை ஏந்தியபடியும், மற்ற இரு கரங்களில் அபய ஹஸ்த முத்திரையுடனும் காட்சி தருகிறார்.
அம்மன் சன்னதிக்கு தெற்கே இச்சா சக்தியும், மேற்கே கிரியா சக்தியும், வடக்கே ஞானசக்தியும் எழுந்தருளியுள்ளனர். ஆடல் வல்லானாகிய நடராஜர் இங்கு ஆனந்த தாண்டேசுவரராக இருந்து அருள்பாலிக்கிறார். மேலும், மூத்த பிள்ளையார், சுப்பிரமணியர், காலபைரவர், 63 நாயன்மார்கள், குருபகவான், அண்ணாமலையார், நான்முகன், துர்கை, சண்டிகேஸ்வரர் சன்னதிகள் இருந்தாலும், நவக்கிரகங்களுக்கு மட்டும் இக்கோயிலில் சன்னதி கிடையாது.
தினமும் அதிகாலை 5.30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, நடை திறப்பு, அபிஷேகம் நடைபெறுகிறது. பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையுடன் நடை சாத்தப்படுகிறது. மீண்டும் மதியம் 3 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. மாலையில் முருகப் பெருமான், காலபைரவருக்கு அபிஷேகம் நடத்தப்படுகிறது. இரவு 8 மணிக்கு பள்ளியறை வழிபாடு நடத்தப்பட்டு, 8.40 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. வியாழக்கிழமைகளில் குருவுக்கும், வெள்ளிக்கிழமை துர்கைக்கும் அபிஷேகம் செய்யப்படுகிறது.பிரதோஷம், பவுர்ணமியில் சிறப்பு பூஜைகளும், அனைத்து பவுர்ணமிகளிலும் அன்னாபிஷேகமும் நடத்தப்படுகிறது. திருவாதிரையில் ஆடல்வல்லானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. கார்த்திகை, சங்கடஹர சதுர்த்தி,தேய்பிறை அஷ்டமி நாட்களிலும் சிறப்பு பூஜைகள் உண்டு. ஆடி மாதவெள்ளிக் கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
அபிராமி அந்தாதி பாராயணம், கடைசி வெள்ளிக்கிழமைகளில் விளக்கு வழிபாடு உண்டு.
ஒவ்வோர் ஆண்டும் 10 நாட்களுக்கு சித்திரைப் பெருந்திருவிழா விமரிசையாக நடைபெறுகிறது. திருக்கல்யாணம், தேரோட்டம், தெப்பத்தேர் உற்சவம், 10 நாளும் சுவாமிக்கு உற்சவம், மண்டகப்படி, திருவீதி உலா உள்ளிட்டவை களைகட்டும். விழா நாட்களில் ஏராளமான பக்தர்கள் திரண்டு வருவார்கள்.
இந்த திருத்தலத்தில் உள்ள யாக சாலை மண்டபத்தில் தினமும் மாலை 3 மணிக்கு, இரு கலசங்களில் சுவாமியையும், அம்மனையும் எழுந்தருளச் செய்து, சிறப்பு வேள்வி பூஜை நடக்கிறது. தொடர்ந்து அந்தக் கலசங்களில் உள்ள புனித நீரைக் கொண்டு சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது.
பின்னர் உற்சவ மூர்த்திகள் இருவரும் கோயிலின் மகா மண்டபத்தில் தென்மேற்குப் புறத்தில் உள்ள ஊஞ்சலில் எழுந்தருளுகின்றனர். தொடர்ந்து 1008 மலர்களைக் கொண்டு உற்சவ மூர்த்திக்கு தமிழில் அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர். மேலும், இந்த திருத்தலத்தில் 60 வயது, 70 வயது, 80 வயது பூர்த்தியானவர்களுக்கு சிறப்பு பூஜை நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. கோயிலின் பின்புறத்தில் புற்று அமைந்துள்ளது.
“புற்றின் மீது மாடு பால் சொரிய, அதை புலி பார்த்துக் கொண்டிருப்பது போன்ற காட்சி இக்கோயிலில் செதுக்கப்பட்டுள்ளது. சோழ அரசர்களால் இக்கோயிலில் திருப்பணி நடந்துள்ளது இது சாட்சியாய் அமைந்துள்ளது. வெள்ளலூரில் தேனீஸ்வரர், குறிச்சியில் வாலீஸ்வரர்போல ஒத்தக்கால்மண்டபத்தில் புற்றிடங்கொண்டீசர் வீற்றுள்ளார். ஆண்டு தோறும் மாசி மகாசிவராத்திரியில் 4 கால பூஜைகள் நடத்தப்பட்டு, சிவனடி யார்களுக்கு சமயதீட்சை, சிவ தீட்சை வழங்கப்படுகிறது” என்கிறார் கோயில் அர்ச்சகர் பொன்.முத்து.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT