Published : 08 May 2019 08:28 AM
Last Updated : 08 May 2019 08:28 AM

இன்று உலக தலசீமியா நோய் தினம்: விழிப்புணர்வே தடுக்கும் மருந்து!

இந்தியாவில் ஆண்டுக்கு சராசரியாக 10 ஆயிரம்  குழந்தைகள் தலசீமியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. அது என்ன தலசீமியா? தமிழில் இதை `ரத்த அழிவுச் சோகை’ என்று கூறலாம். இது ஒரு கொடிய மரபணு நோய். ஹீமோகுளோபின் புரதக் கட்டமைப்பில் ஏற்படும் குறைபாடுகள்,  உடலில் உள்ள ரத்த சிவப்பணுக்களை அழிக்கின்றன. இதனால் இந்த நோய் பாதித்த குழந்தைகள் 2 வயதிலேயே ரத்த சோகையால் மரணமடைகின்றன.

முதல் தலைமுறையில் ஒரு குழந்தை, தன் பெற்றோரிடமிருந்து குறைபாடுடைய ஹீமோகுளோபின் மரபணுவைப் பெறுவதால் ஏற்படும் பாதிப்பைவிட,  அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு, அதாவது அக்குழந்தையின் பரம்பரை சந்ததிகளுக்கு இந்நோயின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

பெற்றோர்களில் இருவருக்கும், மரபுவழியாகத்  தொடரும் மரபணுக்கள் இருப்பின் அது  அவர்களது குழந்தைகளுக்கு 25 சதவிகிதம் வரை செல்கிறது.  இதனால், இந்நோயின் பாதிப்பு அவர்களது குழந்தை களுக்கும் தொடர்கிறது. கருமுட்டையில் ஆரம்ப நிலையிலேயே இந்தப் பிரச்சினை உருவாகிறது என்பதால், தங்களுடைய  குழந்தைகளுக்கு இந்நோயின் அபாயம் இருக்கிறதா இல்லையா என்பது தெரியாமலேயே போய்விடுகிறது.

தலசீமியாவை பொறுத்தவரை,  அந்நோய் குறித்த விழிப்புணர்வே, அதைத் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால்,  தம்பதியினரிடம் அது மிகக் குறைவாகவே இருந்து வருகிறது.  தலசீமியாவால் பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகள் `தலசீமியா மேஜர்’ என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு குறிப்பிட்ட இடைவெளிகளில் ரத்த மாற்றம் அவசியம் தேவைப்படுகிறது. மேலும்,  ஹீமோகுளோபின் குறைப்பாட்டை குணப்படுத்துவதற்கான ஒரே  மருத்துவ அணுகுமுறையாக, எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை திகழ்கிறது.

இதுகுறித்து கோவை நோவா ஐ.வி.ஐ. ஃபெர்ட்டிலிட்டி மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர்  டாக்டர் மனீஷ் பேங்கர் கூறும்போது, “நவீன மருத்துவ வளர்ச்சி காரணமாக, மரபுவழி நோய்களைச் சுமக்கும் அபாயத்தில் இருக்கும் தம்பதிகளுக்கு `ப்ரீ-இம்ப்ளான்டேஷன் ஜெனடிக் டயக்னோசிஸ் டெஸ்டிங்’ பெரும் வரமாக அமைந்திருக்கிறது.  மரபுவழியாக குறைபாடுள்ள ஜீன், அவர்களது குழந்தைகளுக்கு செல்வதை தடுக்க இந்த பரிசோதனை முறை பெரிதும் உதவுகிறது. இந்த பி.ஜி.டி. சோதனை,  ஐ.வி.எஃப். மருத்துவ நடைமுறைகளுக்குப் பிறகு நடைபெறும். இது,  கருவில் இருக்கும் குறிப்பிட்ட நோய்கள் மற்றும் அசாதாரண நிலைகளைக் கண்டறிந்து, அவற்றை சரிவர கையாள்வதற்கு மிகவும் பயனுள்ள முறையாகும்.

ஒரு அசாதாரண கருவானது,  கருச்சிதைவுக்கு வழிவகுக்கும். குழந்தை கர்ப்பத்தில் இறந்து போகவும் கூடும். அல்லது பிறக்கும்போது இறக்க நேரிடும். பிஜிடி ஆய்வு, கருப்பையில் கருமுட்டையை வைப்பதற்கு முன்பாகவே, குரோமோசோம்களின் பாலன்ஸ் மற்றும்  கருமுட்டையில் மரபுவழியாக இருக்கும் மரபணுக் குறைப்பாட்டை கண்டுபிடிக்க பெரிதும் பயன்படுகிறது. எனவே,  இந்த முறையானது ஆரோக்கியமான முறையில் கர்ப்பம் தரிக்கவும், ஆரோக்கியமுள்ள குழந்தையைப் பெற்றெடுப்பதற்கான வாய்ப்பையும் மேம்படுத்த உதவுகிறது.

நன்கொடையளிப்பவர்களிடமிருந்து பெறப்படும் எலும்பு மஜ்ஜை, சிகிச்சை பெறுபவருக்கு பொருந்துகிறதா என்பதை  கண்டறிய உதவும் `ஹியூமன் லியூக்கோசைட் ஆண்ட்டிஜென் டைபிங்’ கருத்தரிப்பின்போது  நோய் பாதிப்பில்லாமல் கருத்தரிக்கவும்  உதவுகிறது. பிஜிடி-ஹெச்எல்ஏ-க்கான ஐவிஎஃப் என்பது, மருத்துவ முறையில் சிறந்த வாய்ப்பாக இருக்கிறது.

ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க விரும்பும் ஒவ்வொரு தம்பதியின் கனவுகளை,  அதிநவீன மருத்துவத் தொழில்நுட்பங்கள் மூலம் நிறைவேற்றி வருகிறோம். மேலும்,  எதிர்காலத்தில் குழந்தைகளுக்கு வருவதற்கு வாய்ப்புள்ள நோய்களையும் கண்டறிந்து, அதை தடுப்பதிலும் டாக்டர்கள் முயன்று வருகின்றனர். இதுகுறித்த விழிப்புணர்வு மக்களிடம் ஏற்படுவது மிகவும் அவசியம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x