Published : 03 May 2019 08:48 AM
Last Updated : 03 May 2019 08:48 AM
தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்று சிலம்பாட்டம். இதன் உட்பிரிவுகளான மான்கொம்பு, சுருள்வாள் வீச்சுப் போட்டிகளில், ஆசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதித்துள்ளனர் கோவை மாணவர்கள்.
உலக சிலம்பம் சம்மேளனம் மற்றும் ஆசிய சிலம்பம் சம்மேளனம் இணைந்து நடத்திய 4-வது ஆசிய அளவிலான சிலம்பாட்டப் போட்டி, நாகர்கோவிலில் அண்மையில் நடைபெற்றது. இதில், இந்தியா, மலேசியா, நேபாளம், வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 500 வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இதில், இந்தியா சார்பில் கோவையிலிருந்து கலந்து கொண்ட இருவர், மான்கொம்பு, சுருள்வாள் வீச்சுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்று சாதித்துள்ளனர்.
`சுருள்வாள் வீச்சு’ கிருஷ்ணகுமார்
கோவை புலியகுளத்தைச் சேர்ந்தவர் டி.வெங்கடசுப்பிரமணியம். இவரது மனைவி எஸ்.ஸ்ரீதேவி, செல்வபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வணிகவியல் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இவர்களது மகன் வி.கிருஷ்ணகுமார்(16), புலியகுளம் ஏ.எல்.ஜி. மெட்ரிக் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். சுருள்வாள் வீச்சு, சிலம்பம் ஆகிய விளையாட்டுகளில் சாதித்து வருகிறார். அவரை சந்தித்தோம்.
“கடந்த ஏப்ரல் மாதம் நாகர்கோவிலில் நடைபெற்ற ஆசிய அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் சுருள்வாள் வீச்சுப் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றேன்.
அதேபோல, பிப்ரவரி மாதம் திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியிலும் சுருள்வாள் வீச்சு மற்றும் சிலம்பாட்டத்தில் தங்கம் வென்றேன். கடந்த 2016-ல் தெற்காசிய விளையாட்டு போட்டி இலங்கையில் நடைபெற்றது. அதில், சிலம்பாட்டப் போட்டியில் தங்கம், சுருள்வாள் வீச்சுப் போட்டியில் வெள்ளி, வேல்கம்பு வீச்சுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினேன்.
நான் 6-ம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே சிலம்பம், சுருள்வாள் வீச்சு, வேல்கம்பு வீச்சு கலைகளைக் கற்று வருகிறேன். பள்ளி அளவில் நடைபெற்ற 6 போட்டிகளில் 5 போட்டிகளில் பதக்கமும், மாநில அளவில் நடைபெற்ற போட்டியில் வெண்கலப் பதக்கமும் வென்றேன்.
2014-ல் கோவையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டியில், வெள்ளிப் பதக்கம் வென்றேன். அதுதான், நான் வென்ற முதல் பதக்கம். இது, அடுத்தடுத்தப் போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வெல்லும் உத்வேகத்தை ஏற்படுத்தியது. என் வாழ்வில் மறக்க முடியாத தருணம் அது. தொடர்ச்சியாக காலை மற்றும் மாலை நேரங்களில் பயிற்சி மேற்கொண்டு வருகிறேன்.
வரும் டிசம்பர் மாதம் உலக சிலம்பாட்டப் போட்டி மலேசியா நாட்டில் நடைபெறுகிறது. சிலம்ப ஆசான் பி.செல்வகுமார், பயிற்சியாளர்கள் எஸ்.சரண்ராஜ், எஸ்.ரஞ்சித்குமார் ஆகியோர், இந்தப் போட்டிக்காக என்னை தயார்படுத்தி வருகின்றனர்.
பல்வேறு ஆலோசனைகளையும், நுணுக்கங்களையும் கற்பிக்கின்றனர். இப்போட்டியில் தங்கம் வென்று, இந்தியாவுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதே எனது லட்சியம்” என்றார்.
`மான்கொம்பு’ நிவேதா
கோவை ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் பி.சீனிவாசன். மெக்கானிக். இவரது மனைவி எஸ்.முத்துலட்சுமி. குடும்பத் தலைவி. இவர்களது மகள் எஸ்.நிவேதா(19), பீளமேடு பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் பி.எஸ்சி. தாவரவியல் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
நடந்து முடிந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற இவர், மான்கொம்பு போட்டியில் சீனியர் பிரிவில் தங்கம், சிலம்பாட்டப் போட்டியில் வெண்கலம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். இதேபோல, கடந்த பிப்ரவரி மாதம் திருச்செங்கோட்டில் நடைபெற்ற தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில், மான்கொம்பு பிரிவில் தங்கப் பதக்கம் வென்று சாதித்துள்ளார்.
“நான் 9-ம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே புலியகுளத்தில் உள்ள சிலம்பாலயா விளையாட்டு மற்றும் பொதுநல அறக்கட்டளையில் பயிற்சி பெற்று வருகிறேன்.
பயிற்சி தொடங்கிய அதே ஆண்டில், கோவை கலைவாணி கல்லூரியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் பங்கேற்று, தங்கப் பதக்கம் வென்றேன். முதல் போட்டியிலேயே தங்கம் வென்றது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.
தொடர்ந்து, மாவட்ட அளவிலான போட்டிகளில் 7 பதக்கங்கள் வென்றேன்.
பின்னர், மாநில ஓபன் சிலம்பாட்டப் போட்டியில் பங்கேற்றபோது, பதக்கம் எதுவும் கிடைக்கவில்லை. ஆனாலும், அடுத்தடுத்த போட்டிகளில் பதக்கம் வென்றது ஊக்கமளித்தது. இந்த வெற்றிகளின் மூலம் இலவசமாக பட்டப் படிப்பு படிக்கும் வாய்ப்பை எங்கள் கல்லூரி நிர்வாகம் அளித்தது, குறிப்பிடத்தக்கது.
இதன் தொடர்ச்சியாக, வரும் டிசம்பர் மாதம் மலேசியாவில் நடைபெறும் உலக சிலம்பாட்டப் போட்டியில் பங்கேற்க உள்ளேன். அதில் பதக்கம் வெல்லும் முனைப்புடன் தீவிர பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறேன்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT