Published : 22 Apr 2019 12:00 AM
Last Updated : 22 Apr 2019 12:00 AM
பிளஸ் 2 தேர்வில் அறிவியல், கணிதப் பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால், இந்த ஆண்டு பொறியியல் கட் ஆஃப் குறையும் என்று கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழக சமச்சீர் பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் 31-ம் தேதி வரை நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி வெளியிடப்பட்டது. தேர்வு எழுதியதில் 91.3 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதேநேரம் நடப்பாண்டு பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தவர்கள் மற்றும் பாடவாரியாக சென்டம் பெற்றவர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளைவிட மிகவும் சரிந்துள்ளது. தேர்ச்சி பெற்றதில் கிட்டதட்ட 60 சதவீதம் பேர் 350-க்கும் குறைவாகவே மதிப்பெண் பெற்றுள்ளனர்.
குறிப்பாக கணிதம், இயற்பியல், விலங்கியல், பொருளியல் உட்பட உயர்கல்வி படிப்புகளில் சேருவதற்கு தேவையான முக்கிய பாடங்களில் பெரும்பாலான மாண வர்கள் குறைந்த மதிப்பெண்களே பெற்றுள்ளனர்.
பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு பிளஸ் 2 கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களின் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இதைக்கொண்டுதான் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான கட் ஆஃப் மதிப்பெண் நிர்ணயிக்கப்படுகிறது.
மொத்தம் 600 மதிப்பெண்கள்
கடந்த ஆண்டுவரை பிளஸ் 2 தேர்வில் ஒவ்வொரு பாடமும் 200 மதிப்பெண்ணுக்கு நடைபெற்றது. அதனால் கணித மதிப்பெண்ணுக்கு 50 சதவீதம், இயற்பியல் மற்றும் வேதியியலுக்கு தலா 25 சதவீதம் வெயிட்டேஜ் அளிக்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு முதல் பிளஸ் 2 வகுப்பில் எல்லா பாடங்களும் தலா 100 வீதம் மொத்தம் 600 மதிப்பெண்களுக்கே தேர்வு நடத்தப்பட்டது.
இதையடுத்து கணித மதிப்பெண்ணுக்கு 100 சதவீதம், இயற்பியல் மற்றும் வேதியியலுக்கு தலா 50 சதவீதமும் வெயிட்டேஜ் அளித்து பொறியியல் கட் ஆஃப் கணக்கிடப்பட வேண்டும். மேலும், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால் இந்த ஆண்டு பொறியியல் படிப்புகளுக்கான கட் ஆஃப் மதிப்பெண் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து கல்வியாளர் ஜெயபிரகாச காந்தி கூறும்போது, ‘‘கணிதம் மற்றும் அறிவியல் பிரிவுமாணவர்கள் ஜேஇஇ, நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கே இப்போது அதிக முக்கியத்துவம் தருகின்றனர். மேலும், தேர்வு முறைகளும், வினாத்தாள்களும் இந்த ஆண்டு கடினமாகவே வடிவமைக்கப்பட்டிருந்தன. இதனால் அதிக மதிப்பெண் மற்றும் பாடவாரியாக நூற்றுக்கு நூறு எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கும்.
இதனால் பொறியியல் படிப்புகளுக்கான கட் ஆஃப் மதிப்பெண் கடந்த ஆண்டைவிட சராசரியாக 4 வரை குறையும். குறிப்பாக இயந்திரவியல், கட்டிடவியல் உட்பட சில பாடங்களில் கட் ஆஃப் 6 வரை குறைய வாய்ப்புள்ளது. மேலும், கடந்த ஆண்டு பிளஸ் 2-வில் நல்ல மதிப்பெண் பெற்று சரியான கல்லூரி கிடைக்காதவர்கள் இந்த ஆண்டு மீண்டும் கலந்தாய்வில் பங்கேற்பார்கள்.
அவுட்சோர்சிங் மூலம்...
அதேநேரம் இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வை தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் அவுட்சோர்சிங் மூலம் நடத்த இருக்கிறது. அதை பாதுகாப்பாகவும், சிறப்பாகவும் நடத்த அரசு முன்வர வேண்டும்’’என்றார்.
அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் சந்திரமோகன் கூறும் போது,‘‘பிளஸ் 2 தேர்வில் பெரும்பாலான மாணவர்கள் 350 முதல் 400 வரையிலேயே மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். ஒட்டுமொத்தமாக அதிக மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை சரிந்தால் அதன் தொடர்ச்சியாக கட் ஆஃப் மதிப்பெண்ணும் குறையும். அதேநேரம் தரவரிசைப் பட்டியலில் நமக்கு முன்னர் எத்தனை பேர் உள்ளனர் என்பதை பொறுத்தே சரியான கல்லூரியை தேர்வு செய்ய முடியும். மேலும், மாணவர்கள் கல்லூரிகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்காமல் பிடித்த பாடங்களை தேர்வு செய்ய வேண்டும்’’என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT