Published : 14 Apr 2019 04:57 PM
Last Updated : 14 Apr 2019 04:57 PM
50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அரசியலில் பல்வேறு தடைகளையும், போராட்டங்களையும், சந்தித்து தனது கொள்கைகளை நீர்த்துப் போகாமல் மார்க்சிஸ்ட் கம்யூனிட்ஸ்ட் கட்சி வெற்றிகரமாகப் பயணித்து வருகிறது.
தொழிலாளர், விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்கள், நடுத்தர மக்கள் உள்ளிட்டவர்களின் நலன்களைப் பிரதானமாக வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. எந்த இடத்திலும், எந்த மாநிலத்திலும் இவர்களின் நலன் பாதிக்கப்பட்டாலும் அங்கு குரல் கொடுத்து வருகிறது.
மார்க்ஸியம், லெனினியத்தின் கொள்கைகளை மாறாத் தன்மையுடன் பாதுகாத்து கடைபிடித்து வருகிற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வலதுசாரிகள் மத்தியில் எண்ணற்ற அவப்பெயர்களும், தூற்றுதல்களும் வந்தாலும் கொள்கையை இறுகப் பற்றி உறுதியாக இருந்து வருகிறது.
இந்தியாவில் கம்யூனிஸவாதிகள் உருவானது காங்கிரஸ் கட்சியில்தான். காங்கிரஸ் கட்சிக்குள் ஒரு பிரிவினர் சோசலிச காங்கிரஸ்வாதிகளாக இருந்தனர். 1934-ம் ஆண்டில் மீரட் சதி வழக்கில் தண்டனை பெற்றவர்கள் விடுவிக்கப்பட்ட பின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அகில இந்தியக் கட்சியாக செயல்படத் தொடங்கி 2-ம் உலகப் போருக்குப் பின் பிளவுபடாத இந்திய கம்யூனிஸ்ட் கட்சியாக எழுச்சி கண்டது.
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு தலைமையிலான காங்கிரஸ் கட்சி, அப்போதைய பிளவுபடாத சோவியத் யூனியன் ரஷ்யாவுடன் நெருக்கமாகவும், நட்பாகவும் இருந்தது. இதனால், காங்கிரஸ் கட்சிக்கு, இங்குள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவாக இருந்தது.
இந்தியா சோசலிசப் பாதைக்கு திரும்பி சோசலிச நாடாக மாறுகிறது, தரகு முதலாளித்துவ நாடாக இருக்கிறது என்று நம்பினர். ஆனால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குள் இருந்த பெரும்பகுதியினர், இந்தியா முழுமையாக சோசலிச நாடாக இல்லை இன்னும் முதலாளித்துவ சிந்தனையில்தான் இருக்கிறது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே சித்தாந்த ரீதியான முரண்கள் ஏற்பட்டு வந்தன.
இதற்கிடையே கேரளாவில் மட்டும் ஆட்சியில் இருந்த இஎம்எஸ் நம்பூதிரிபாட் தலைமையிலான அமைச்சரவையை 1957-ல் அப்போதைய காங்கிரஸ் அரசு கலைத்தது. இது மேலும் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் அதிருப்தியை ஏற்படுத்தியது.
கடந்த 1962-ம் ஆண்டு இந்தியா- சீனா இடையே போர் மூண்டபோது, அப்போதைய காங்கிரஸ் அரசுக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயல்பட்டது. ஆனால், அந்த கம்யூனிஸ்ட் கட்சிக்குள் இருந்த பெரும்பகுதியினர் இந்தியா தற்போதுள்ள நிலையில் சிறிய காரணங்களுக்காக சீனாவுடன் போர் வேண்டாம் என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால், இந்திய அரசுக்கு ஆதரவாகப் பேசிய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒருபிரிவினர் மீது பாராமுகம் காட்டிய காங்கிரஸ் அரசு சீனாவுடன் போர் வேண்டாம் எனப் பேசிய கட்சிக்குள் இருந்த மற்றவர்களைக் கைது செய்தது. இதனால் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் சித்தாந்த ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் பெரும் பிளவுகள் ஏற்பட்டன.
1964-ம் ஆண்டு, ஏப்ரல் 11-ம் தேதி நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் இருந்து மூத்த தலைவர் டாங்கே தலைமையில், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக நிலைப்பாட்டைக் கண்டித்து 32 உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அதன்பின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிடம் இருந்து தங்களைப் பிரித்துக் காட்டும் வகையில் மாற்றுக்கொள்கைகளை வைத்தனர்.
அதன்பின் கடந்த 1964-ம் ஆண்டு நவம்பர் 7-ம் தேதி கொல்கத்தாவில் நடந்த மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து பிரிந்து, தங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அதாவது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்) என்று அறிவித்தனர். பி.சுந்தரையா முதல் பொதுச்செயலாளாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பெரும்பகுதி உறுப்பினர்கள் இதில் இடம் பெற்றனர்.
அதன் பின், 1967-ம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சந்தித்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பலத்த அடி விழுந்து, 8 மாநிலங்களில் ஆட்சியை இழந்தது.
மக்களவையிலும் அதன் பலம் குறைந்தது. கேரளத்தில் மார்க்சிஸ்ட் கட்சி தலைமையிலான ஜனநாயக முன்னணி ஆட்சியைப் பிடித்தது. மேற்கு வங்கத் தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மையை இழந்தது. அங்கே வங்காள காங்கிரஸைச் சேர்ந்த அஜய் முகர்ஜியை முதல்வராகவும், மார்க்சிஸ்ட் தலைவர் ஜோதிபாசு துணை முதல்வராகவும் கொண்டு ஐக்கிய முன்னணி அரசு அமைந்தது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒருபுறம் வெற்றிகரமாகச் செயல்பட்டு, காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை எதிர்த்துப் போராடி வந்த நிலையில், 1968-ம் ஆண்டில் நக்சல்பாரி எனும் அதி தீவிரவாதம் பெரும் தலைவலியாக உருவெடுத்தது. ஒருபுறம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை, காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு ஆகியவற்றுக்கு எதிரான போராட்டத்தையும், அதேசமயம், நக்சல் பாரி அமைப்பையும் எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் சித்தாந்தப் போராட்டம் நடந்தது.
மேற்கு வங்கம், ஒடிசா, ஆந்திரா, தெலங்கானாவில் நக்சல்பாரி இயக்கம் தீவிரமாகப் பரவியது. ஆந்திராவில் டி.நாகி ரெட்டி, டி.வி.ராவ், கொள்ளவெங்கய்யா, சந்திரபுல ரெட்டி ஆகியோர் மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்து விலகி தனிஅமைப்பாக தீவிரமாகச் செயல்படத் தொடங்கினார்கள்.
1971-ம் ஆண்டில் மேற்குவங்க ஜனநாயக முன்னணி அரசாங்கம் மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசால் கவிழ்க்கப்பட்டு ஆளுநர் ஆட்சி கொண்டுவரப்பட்டது. 1972-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்து 1977 வரை ஆண்டது.
அதன்பின் 1977-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுமுன்னணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அது 32 ஆண்டுகள் ஆட்சி நடத்தியது. ஜோதிபாசு 23 ஆண்டுகள் முதல்வராகவும், புத்ததேவ் பட்டாச்சார்யா 10 ஆண்டுகள் முதல்வராகவும் இருந்தார்.
கேரளாவிலும், திரிபுராவிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலுவாகக் காலூன்றியது. கேரள மாநிலத்தில் இ.எம்.எஸ்.நம்பூதிரி பாட், இ.கே.நாயனார், வி.எஸ் அச்சுதானந்தன், வாசுதேவன் நாயர் வரை முதல்வர்கள் இருந்தனர். தற்போது பினராயி விஜயன் முதல்வராக இருக்கிறார்.
கடந்த 1957-ம் ஆண்டு கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியைப் பிடித்தது. அது 2 ஆண்டுகள் மட்டுமே இருந்தது. பின்னர் நேரு அரசால் கலைக்கப்பட்டது. இந்தியாவிலேயே முதன் முதலில் ஆட்சிக்கலைப்புக்கு உள்ளான அரசு அதுதான். அதன்பின் 1967-69, 1978-79, 1980-81, 1987-91, 1996-2001, 2006-2011, 2016 முதல் தற்போது வரை என பல்வேறு காலகட்டங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது.
வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் வலுவாக காலூன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1978 முதல் 1988 வரை ஆட்சியில் இருந்தது. நிருபன் சக்கரவர்த்தி முதல்வராக இருந்தார்.
பத்தாண்டுகள் ஆட்சியில் இருந்த பின் பதவி விலகிய நிருபன் சக்ரவர்த்தி சில செட் துணிகள் புத்தகப் பெட்டியுடன் கட்சி அலுவலகத்துக்குச் சென்றது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
அதன் பின், 1993-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டுவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் இருந்தது. தசரத் தேவ், மாணிக் சர்க்கார் முதல்வர்களாக இருந்தனர். 2018-ம் ஆண்டு பாஜகவிடம் வீழ்ந்து 25 ஆண்டு கால ஆட்சியைப் பறிகொடுத்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்.
தமிழகம், ஆந்திரா, கர்நாடக ஆகிய மாநிலங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இருந்தாலும், தேர்தலில் குறிப்பிட்ட சில இடங்களில் வெல்ல முடிந்ததே தவிர ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு வளர முடியவில்லை.
கேரளா, மேற்கு வங்கம், திரிபுரா அளவுக்கு தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேர்பிடித்து வளரவில்லை. சட்டப்பேரவை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போட்டியிட்ட 1967-ம் ஆண்டு தேர்தலில் 11 இடங்களை வென்றது. 1971-ம் ஆண்டு போட்டியிட்ட 37 இடங்களிலும் தோல்வியைத் தழுவியது. அதன்பின் 1977-ல் 12 இடங்களிலும், 1980-ம் ஆண்டில் 11 இடங்களிலும், 1984-ல் 4 இடங்களிலும் மார்க்சிஸ்ட் வென்றது.
அதன்பின் நடந்த தேர்தலில் திமுக, அதிமுக கூட்டணியில் மாறி, மாறி இடம் பெற்றுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் இருந்து வருகிறது. திராவிடர் கழகம், பின்னர் திமுக, கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்குப் போட்டியாக காங்கிரஸ் எதிர்ப்பில் வளர்ந்தது முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் ஒருகட்டத்துக்குமேல் கவர்ச்சி அரசியல், தனிநபர் சார்ந்த அரசியல் தழைத்தோங்கியதும் இடதுசாரி இயக்கங்கள் வளராததற்கு முக்கியக் காரணி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT