Published : 04 Apr 2019 07:29 PM
Last Updated : 04 Apr 2019 07:29 PM
வீடிருப்பது தமிழ்நாட்டில், அந்த வீட்டோட வாசல்படி இருப்பதோ கேரளாவுக்குள். இப்படிப்பட்ட ஏரியா தேர்தலுக்கு தேர்தல் எப்படிப்பட்ட விநோதங்களைச் சந்திக்கும்? பொள்ளாச்சியிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கேரள எல்லையோரக் கிராமம் மீனாட்சிபுரம் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட வால்பாறை சட்டப்பேரவை தொகுதிக்குள் ஒரு பகுதியும், கேரளாவின் ஆலத்தூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட சித்தூர் சட்டப்பேரவை தொகுதிக்குள் ஒரு பகுதியும் வருகிறது.
1998 மற்றும் 2004 மக்களவைத் தேர்தல்களின் போது கம்யூனிஸ்ட்டுகள் தமிழகத்தில் காங்கிரஸ் -திமுகவுடன் கூட்டணி. மதவாத பாஜகவை அகற்றுவோம் என கோஷம் போட்டு தேர்தல் பிரச்சாரம் செய்தார்கள். அந்தத் தேர்தல்களில் கேரளத்தில் கம்யூனிஸ்ட்டுகளின் பிரதான எதிரியே காங்கிரஸ்தான். ‘இங்கே கட்டிக்குவோம்; அங்கே மோதிக்குவோம்!’என்கிற மாதிரி ஒரே வீதியில் ரெட்டை நிலைப்பாடு; இரண்டு விதமான பிரச்சாரம். இப்போதும் இங்கே திமுக-காங்கிரஸ்-கம்யூனிஸ்ட் கூட்டணி. அங்கே கம்யூனிஸ்ட்-காங்கிரஸ் எதிர்ப்பு. எப்படியிருக்கு இந்த வருடம் இந்த விநோத மோதல். மீனாட்சிபுரத்திற்கே சென்றேன்.
மீனாட்சிபுரத்தின் எல்லையில் கிழக்கு மேற்காகச் செல்லும் சாலை. மேற்கே நெல்லுமேடு வரை (சுமார் 5 கிலோ மீட்டர் தூரம்) சாலைக்கு இடதுபுறம் தமிழ்நாட்டின் திவான்சாபுதூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதி. இங்கே தமிழ்நாட்டிற்கான சுமார் 3000 வாக்குகள் இருப்பதாகச் சொன்னார்கள். சாலையிலிருந்து வலது புறம் கேரளத்தின் பெருமாட்டி பஞ்சாயத்து சுமார் 4 ஆயிரம் ஓட்டுகள் வரும் என்றார்கள். கேரளாவின் ஆலத்தூர் மக்களவைத் தொகுதி (ரிசர்வ்) வேட்பாளர்களாக காங்கிரஸில் ரம்யா ஹரிதாஸ், எல்டிஎப் அணியின் மார்க்சிஸ்ட்டில் ஏ.கே.பிஜூ. ஏற்கெனவே பிஜூ 2 முறை வென்ற தொகுதி.
பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி வேட்பாளர்களாக அதிமுகவில் சிட்டிங் எம்.பி. மகேந்திரன், திமுகவில் சண்முக சுந்தரம். மீனாட்சிபுரத்தின் எந்த இடத்திலும் மகேந்திரன், சண்முகசுந்தரத்திற்கு சின்ன விளம்பரம் கூட காணோம். ஆனால் கேரள வேட்பாளர்களுக்கு கொடி தோரணங்கள், சுவர் விளம்பரங்கள் சரிக்கு சரி போட்டியில் இருந்தது. அதில் வேடிக்கையான விஷயம் தமிழ்நாட்டுப் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளரின் படமும், பெயரும், கை சின்னமும் பொறித்த பிளக்ஸ் பேனர்கள் அமர்க்களப்பட்டன.
‘‘எங்களுக்குச் சொந்தமான கட்டிடம் இது. அதையே தேர்தல் அலுவலகம் ஆக்கிட்டோம். இந்த அலுவலகம் தமிழ்நாட்டில் இருந்தாலும் வாசப்படி கேரளாவிற்குள்தான் இருக்கு. அதையும் தாண்டி கேரளாவிற்குள்தான் பிளக்ஸ் பேனர் வச்சிருக்கோம். அதையும் கழற்றி விடச்சொல்லி அதிகாரிக சொல்லியிருக்காங்க!’’ என்றார் தமிழகப் பகுதியில் காணப்பட்ட கேரள காங்கிரஸ் தேர்தல் அலுவலகத்தில் அமர்ந்திருந்த கண்ணையன்.
இவர் கேரள பகுதி வார்டு காங்கிரஸ் செயலாளர். இவருக்கான வீடு தமிழகத்தில் இருந்தாலும் வயல், ஓட்டுரிமை எல்லாம் கேரளாவிற்குள்தான் இருக்கிறதாம். அதனால் ஓட்டு அங்கேதான். பிரச்சாரமும் அங்கேதான் என்கிறார்.
இதற்கு நேர் எதிரே (சாலைக்கு இடதுபுறம்) கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் அலுவலகம். அதில் இருந்தவர் ஏ.கே. அப்புக்குட்டன். சிபிஐ(எம்) லோக்கல் கமிட்டி மெம்பர். பெருமாட்டி விவசாயத்தொழிலாளர் சங்கச் செயலாளர். இப்பகுதி தேர்தல் பொறுப்பாளர்.
‘‘எங்களுக்கு இப்போ பிரச்சாரத்தில் யாதொரு பிரச்சனையும் இல்லை. ஒரு காலத்தில் தீவிர காங்கிரஸ் எதிர்ப்பு இருந்தது. காங்கிரஸிற்கும், கம்யூனிஸ்ட்டுகளை எதிர்க்க வேண்டிய கட்டாயம் இருந்தது. இப்ப அப்படியில்லை. பிரதான எதிரி பாஜக, மோடி. அதை ரெண்டு பேருமே செய்றோம். ஒரே வீதியில ரெண்டு ஸ்டேட்டும் இருந்ததால ரொம்ப குழப்பம் ஆரம்பத்துல இருந்தது. அதையெல்லாம் 20 வருஷத்துக்கு முந்தி ரெண்டு பக்க வாக்காளர் பட்டியலையும் வாங்கி செக் செய்து அந்தந்த பஞ்சாயத்துக்கு கொடுத்தோம். அங்கிருக்கிற ஆபீஸருக உங்களுக்கு ஓட்டு இந்தப் பக்கம் விருப்பமா, அந்தப் பக்கம் விருப்பமான்னு ஒப்பீனியன் கேட்டு பெயர் அடித்தல் திருத்தல் செஞ்சாங்க. அப்படி ரெண்டு பக்கமும் இருந்த 200 -300 ஓட்டுகள் இப்ப 25- 30 ஆக குறைஞ்சிருக்கு. இன்னமும் அதை சரிசெய்ய வேணும். இப்ப தமிழ்நாட்டுல 18-ம்தேதியும், கேரளத்துல 23-ம் தேதியும் தேர்தல் நடக்கிறதால அங்கே ஓட்டுப் போட்டவங்க இங்கே ஓட்டுப் போடவும் வாய்ப்பு இருக்கு.
மத்தபடி போன தேர்தல்ல எல்லாம் தமிழ்நாட்டுப் பகுதியில ஓட்டுக்கு பணப் பட்டுவாடா செஞ்சாங்க. அதைப் பார்த்துட்டு இங்கே இருக்கிற கூலிக்கார மக்களும் கேட்டாங்க. நாங்க அதெல்லாம் அங்கே நடக்கும். இங்கே நடக்காது. நாமளே பாவப்பட்ட கட்சி. உங்ககிட்ட ஒண்ணு ரெண்டு டொனேஷன் வாங்கித்தான் தேர்தல் செலவே பண்ணறோம்னு சொன்னதும் புரிஞ்சுக்கிட்டாங்க. காங்கிரஸ் சைடிலும் அப்படி எங்கேயும் ஓட்டுக்கு பணப் பட்டுவாடா செய்யல. தமிழ்நாடுதான் இந்த விஷயத்துல ரொம்ப மோசம்!’’
‘‘தமிழ்நாட்டுல காங்கிரஸோட கூட்டணி வச்சிருக்கிற உங்க கட்சிக்காரங்க, இங்கே பிரச்சாரத்துக்கு வரும்போது எப்படி பிரச்சாரம் பண்றாங்க?’’எனக் கேட்டேன்.
‘அது ஒரு பாதகமில்லை. ஒரே நாள்ல, ஒரு வார இடைவெளியில ரெண்டு நாட்டுலயும் தேர்தல் நடந்தா எங்க பகுதிக்கு நாங்களும், அந்தப் பகுதிக்கு அவங்களும் பிரச்சாரம் பண்ணிக்குவாங்க. இந்தப் பக்கம் அவங்க திரும்பிக்கூட பார்க்க மாட்டாங்க. நாங்களும் அவங்களை பெரிசா எடுத்துக்க மாட்டோம். இப்ப அங்கே நிற்கிறது திமுகவும், அதிமுகவும்தானே. அதனால மீனாட்சிபுரத்துல பெரிசா காங்கிரஸும், கம்யூனிஸ்ட்டும் தமிழ்நாட்டு பிரச்சாரத்துல இருக்க மாட்டாங்க!’’என்றார் ரொம்ப கூலாக.
எல்லையில் எதிர்ப்படும் முரண் பிரச்சாரம், தமிழக பகுதியில் நடக்கும் வாக்குக்குப் பணம் கலாச்சாரம் பற்றி மீனாட்சிபுரம் கேரள காங்கிரஸ் தலைவர் ஜேசிபி சிவகுமாரிடம் கேட்டபோதுதான் கொதித்து விட்டார். ‘‘அதையேன் கேட்கிறீங்க. போன சட்டப்பேரவை தேர்தலுக்கு ஜெயலலிதா இருந்தாங்க. அவங்ககிட்ட சீன் காட்டணும்னே சித்தூர் தொகுதியில அதிமுக வேட்பாளர் ஒருத்தரை நிறுத்திட்டாங்க. ஓட்டுக்குப் பணமும் கொடுத்துட்டாங்க. அதனால எங்களுக்கு விழ வேண்டிய சுமார் 7 ஆயிரம் ஓட்டு அதிமுகவிற்குப் போயிருச்சு.
20 வருஷமா இங்கே காங்கிரஸ் எம்.எல்.ஏவா இருந்தவர் அச்சுதன். அவரையே இது காலி பண்ணிடுச்சு. மார்க்சிஸ்ட் வேட்பாளர் ஜெயிச்சுட்டாரு. இது பார்லிமென்ட் தேர்தல். ஜெயலலிதாவும் இல்லை. அதனால அவங்க இருக்கிற இடமே காணோம். இல்லைன்னா அவங்க பண்ற அலப்பரை தாங்க முடியாது. இனி வரட்டும்னு இருக்கிறோம்!’’என கடுமையான தொனியிலேயே குரலை இறுக்கமாக்கிப் பேசியவரை இடைமறித்து, ''கம்யூனிஸ்ட், காங்கிரஸ் பிரச்சாரம் எல்லையில் முரண்பாடாக இல்லையா?'' என்று கேட்டேன்.
‘‘எதுக்கு முரண்பாடா இருக்கு. மத்தியில நடக்கிறது பிஜேபி ஆட்சி. அதை அறவே அகற்றணும். இங்கே சிட்டிங் எம்.பி.யா இருக்கிறவர் மார்க்சிஸ்ட். அவர் 2 தடவை எம்.பி.யா இருந்துட்டார். அவர் தொகுதிக்குள்ளே வரவே இல்லை. போதாதற்கு அவங்க கட்சியில 2 தடவைக்கு மேல எம்.பி., எம்.எல்.ஏ பதவிக்கு நிற்கக்கூடாதுங்கிறது விதிமுறை. இது ரிசர்வ் தொகுதி. வேற ஆளு இல்லைன்னு மூணாவது தடவையா அவரையே நிறுத்தியிருக்காங்க.
எங்க வேட்பாளர் பாடகி. பிரபலமானவர். ஆறு மொழி தெரியும். ராகுல் காந்தியிடம் தொடர்ந்து பாராட்டு பெற்றவர். பழங்குடி வகுப்பைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகள். அவங்களுக்கு அன்றாட செலவுக்கே மக்கள் கிட்ட வசூல் செஞ்சுதான் தேர்தலைச் சந்திக்கிறோம். இதுக்கு மேல அவர் வெற்றிக்கு என்ன வேணும். ஒரே வீதியில ரெண்டு மாநிலம் இருந்தாலும் அதுல தமிழ்நாட்டு கூட்டணி இங்கே எல்லாம் செல்லாது!’’என்றார் ஆணித்தரமாக.
சரி, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் இரு கட்சிகளுமே பாஜக எதிர்ப்பு பிரச்சாரம் என்கிறார்களே. அப்படி இந்தத் தொகுதியில் அக்கட்சிக்கு யார் வேட்பாளர்? எத்தனை ஓட்டுகள் வாங்கி விடுவார்? என இருதரப்பிலும் கேட்டேன். ‘‘பிஜேபி பெரிசா ஓட்டு வாங்காது. அஞ்சாயிரம், ஆறாயிரம் ஓட்டு வாங்கினா அதிசயம்!’’ என்றவர்கள் யாருக்குமே பாஜக வேட்பாளர் பெயர் தெரியவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT