Published : 18 Apr 2019 05:54 PM
Last Updated : 18 Apr 2019 05:54 PM
ஆம்பூர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவின் போது அதிமுக - அமமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து காவல் துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். வாக்குப்பதிவு அரை மணி நேரம் தடைபட்டது.
ஆம்பூர் சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று (ஏப்.18) நடைப்பெற்றது. இடைத்தேர்தலுக்காக 242 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் பதற்றமான வாக்குசாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தன.
ஆம்பூர் பி-கஸ்பா பகுதியில் மட்டும் 2 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு வாக்குச்சாவடிக்கு மாலை 3.50 மணியளவில் அமுமக சார்பில் போட்டியிடும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் எம்எல்ஏ பாலசுப்பிரமணி வந்தார்.
அப்போது அங்கிருந்த அதிமுகவினர் சிலர் பாலசுப்பிரமணியத்தை செல்போனில் படம் பிடித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமமுக நிர்வாகிகள் அதிமுக நிர்வாகிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதில் ஆத்திரமடைந்த அதிமுகவினர் முன்னாள் எம்எல்ஏ பாலசுப்பிரமணி வந்த கார் பக்கவாட்டு கண்ணாடியை அடித்து நொறுக்கி தகராறில் ஈடுபட்டனர். அங்கு வாக்களிக்கக் காத்திருந்த வாக்காளர்கள் அலறியடித்து ஓட்டமெடுத்தனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆம்பூர் டிஎஸ்பி சச்சிதானந்தம் தலையிலான காவலர்கள் அதிரடிப்படையினர் விரைந்து வந்து அவர்களை சமரசம் செய்ட முயற்சித்தனர்.
இதையேற்காத அதிமுக - அமமுக கட்சியினர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். உடனே போலீஸார் தடியடி நடத்தினர்.
இதில் ஆம்பூரை சேர்ந்த இருவர் காயமடைந்தனர். இதையடுத்து அவர்வள் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
உடனே வாக்குபதிவும் நிறுத்தப்பட்டது. அமமுக வேட்பாளர் பாலசுப்பிரமணி அங்கிருந்து கிளம்பி சென்றார். போலீஸார் தடியடி நடத்தி சிறிது நேரத்தில் கூட்டத்தை கலைத்தனர். அதன் பிறகு அரை மணி நேரம் கழித்து வாக்குப்பதிவு நடைப்பெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT