Last Updated : 30 Apr, 2019 08:48 AM

 

Published : 30 Apr 2019 08:48 AM
Last Updated : 30 Apr 2019 08:48 AM

தடகள வீரருக்கு உதவிய முன்னாள் மாணவர்கள்!

தேசிய அளவிலான தடகளப் போட்டிக்குத் தயாராகி வரும் ஏழை மாணவருக்கு உதவியுள்ளனர் அரசுப் பள்ளி முன்னாள் மாணவர்கள்.

கோவை ஒத்தக்கால் மண்டபம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு பயிலும்  மாணவர் மு.அரவிந்தராஜ். மாவட்ட, மண்டல, மாநில அளவிலான 1,500 மீட்டர், 3,000 மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் பதக்கங்களைக் குவித்து வருகிறார். இந்நிலையில், கடந்த பிப்ரவரி 24-ம் தேதி நாமக்கல்லில் நடைபெற்ற மாநில அளவிலான ஊரக விளையாட்டுப் போட்டியில் 1,500 மீட்டர் ஓட்டத்தில் அவர் முதல் இடம் பிடித்தார். இதன் தொடர்ச்சியாக வரும் மே 3, 4, 5-ம் தேதிகளில் டேராடூனில் நடைபெற உள்ள,  தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க வாய்ப்புக் கிடைத்துள்ளது.

எனினும், ஏழ்மையான குடும்பச் சூழல் காரணமாக அரவிந்தராஜ் தவித்துவருவது குறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழின் ‘கொங்கே முழங்கு’ சிறப்பு பக்கத்தில் கடந்த 26-ம் தேதி கட்டுரை வெளியானது.

இதையடுத்து, ஆனந்தராஜுக்கு உதவ ஒத்தக்கால்மண்டபம் அரசு மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் முன்வந்துள்ளனர். பள்ளி சார்பில் போக்குவரத்து செலவை அளித்துள்ளனர்.

இதுதொடர்பாக அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் கூறும்போது, “விளையாட்டில் திறமையுள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் பலருக்கு சரியாக ஊக்குவிப்பு, வழிகாட்டுதல்கள் இல்லாததால், அவர்கள் இலக்கை அடைய முடிவதில்லை. எனவே, அரவிந்தராஜுக்கு தேவையான விளையாட்டு ஷூவை வாங்கிக்கொடுத்துள்ளோம். மேலும், சீருடைகள் வாங்கவும், அரவிந்தராஜுக்குத் தேவையான பயிற்சி அளிக்கவும், சத்தான உணவு வழங்கவும்  முன்னாள் மாணவர்கள் முன்வந்துள்ளனர். இதேபோல, தாங்கள் பயின்ற அரசுப் பள்ளியில் உள்ள திறமையான மாணவர்களை அடையாளம் கண்டு, தங்களால் இயன்ற உதவியை வழங்க முன்னாள் மாணவர்கள் முன்வந்தால், பலரும் பயன்பெறுவார்கள்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x