Published : 15 Apr 2019 05:24 PM
Last Updated : 15 Apr 2019 05:24 PM
ராமநாதபுரம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார் முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன். நீண்டகாலம் அதிமுகவில் இருந்த அவர், அக்கட்சியில் இருந்து வெளியேறி பாஜகவில் இணைந்தார். தற்போது ராமநாதபுரம் பாஜக வேட்பாளராக களம் காண்கிறார். நாளை மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடையும் நிலையில் இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் அவர் ஈடுபட்டு வருகிறார். அனல் பறக்கும் பிரச்சாரத்துக்கு நடுவே 'இந்து தமிழ் திசை' இணையதளத்துக்கு அவர் அளித்த பேட்டி...
பிரதமர் மோடியின் பிரச்சாரத்துக்குப் பிறகு ராமநாதபுரம் தேர்தல் களம் எப்படி இருக்கிறது?
பெரிய தலைவர்கள் பிரச்சாரம் செய்யும்போது பொதுவாக கட்சித் தொண்டர்களிடம் உற்சாகம் ஏற்படும். மக்களின் கவனமும் அந்தக் கட்சி மீது குவியும். பிரதமர் மோடியின் பிரச்சாரத்துக்குப் பிறகு இதே நிலை ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்த பிறகு பெரிய அளவில் மக்களுக்கு பாஜக மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. எங்கள் தொண்டர்கள் உற்சாகத்துடன் பணியாற்றி வருகின்றனர். வெற்றி என்ற இலக்குடன் நாங்கள் வேகமாகப் பயணிக்கிறோம். களத்தில் முதலிடத்தில் உள்ளோம்.
நான் செல்லும் இடம் எல்லாம் மக்கள் வரவேற்பு அதிகமாக உள்ளது. அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தர வாக்குறுதி அளித்துள்ளேன். பல தேர்தல்களைப் பார்த்துள்ளேன். மக்களிடம் வரவேற்பு எப்படி இருந்தால் வெற்றி கிடைக்கும் என்பதை முன்கூட்டியே ஊகிக்க முடியும். அந்த வகையில் ராமநாதபுரம் மக்கள் விரும்பும் வேட்பாளரான நான் வெற்றி பெறுவது உறுதி.
நெல்லையைச் சேர்ந்த நீங்கள் ராமநாதபுரத்தில் போட்டியிடும நிலையில் வெளியூர் வேட்பாளர் என்ற வாதம் உள்ளதே?
நான் நெல்லையைச் சேர்ந்தவன் என்றாலும், ராமநாதபுரம் எனக்குப் புதிதல்ல. இங்கு கிராமம் கிராமமாகச் சுற்றியவன். அதிமுகவில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையில் பொறுப்பு வகித்தபோதே இந்த தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கியில் பல கிராமங்களுக்குச் சென்றவன். இந்தப் பகுதி மக்களுக்கு நான் ஏற்கெனவே அறிமுகமானவன்.
ஆனால், எதிரணியின் வேட்பாளர் சென்னையில் இருக்கிறாரா அல்லது சவுதியில் இருக்கிறாரா என்பதே மக்களுக்குத் தெரியாது. நான் அப்படி அல்ல. மக்களுடன் மக்களாக இருந்து பணியாற்றுவேன்.
ராமநாதபுரத்தில் அதிமுக நேரடியாகப் போட்டியிடாத நிலையில் அந்த வாக்குகளில் குறிப்பிட்ட சதவீதம் அமமுகவுக்குச் சென்று விடாதா?
நிச்சயமாக இல்லை. தேர்தல் போட்டியில் அவர்கள் இல்லை. மேலும், நாடாளுமன்றத் தேர்தல் என்றால் மத்தியில் யார் ஆட்சியமைக்க வாய்ப்புள்ளது? யாரால் திட்டங்களைக் கொண்டு வர முடியும்? என்பதே மக்களின் எண்ணமாக இருக்கும். அதனால் அதிமுக ஆதரவாளர்கள் மட்டுமின்றி பொதுமக்களின் தேர்வாகவும் நானாகவே இருப்பேன். எங்கள் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் நான் வெற்றி பெறுவது உறுதி.
ராமநாதபுரத்தில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காமல் ராஜ கண்ணப்பன் அதிமுகவில் இருந்து வெளியேறியதால் அதிமுக கூட்டணிக்குப் பாதிப்பை ஏற்படுத்தாதா?
ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட பகுதகிளில் ஆதரவு இருக்கும். அவர்கள் நேரடியாகப் போட்டியிடும் போது அவர்கள் ஆதரவு முக்கியப் பங்காற்றும். ஆனால், இங்கு அப்படியில்லை. ராஜ கண்ணப்பன் போட்டியிடவில்லை. அதிமுகவுக்கு எதிராக வாக்களிக்கும் மனநிலையில் யாரும் இல்லை. தேர்தல் களத்திற்குப் போகும்போது என்னால் இதனை உணர முடிகிறது. அனைத்து தரப்பு மக்களும் என்னை வரவேற்கின்றனர். நான் செல்லும் இடங்களில் எல்லாம் ஆதரவு தருகின்றனர்.
ராமநாதரபுரத்தை மதரீதியாக பாஜக பிளவுபடுத்துவதாக எதிர்க்கட்சிகள் கூறும் புகார் குறித்து?
நாங்கள் எங்குமே சாதி, மதரீதியாக யாரையும் பிளவுபடுத்தவில்லை. அந்த அடிப்படையில் வாக்குகள் கேட்பதும் இல்லை. அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதே பாஜகவின் எண்ணம். இதற்காகவே நாங்கள் பணியாற்றுகிறோம். வளர்ச்சித் திட்டங்களை முன் வைத்தே நாங்கள் மக்களை அணுகுகிறோம்.
ராமநாதபுரம் மக்களுக்கு நீங்கள் தரும் வாக்குறுதி?
ராமநாதபுரம் தொகுதியைச் சுற்றி வந்ததில் இங்கு குடிநீர் பிரச்சினை முக்கியமாக இருக்கிறது. குடிநீருக்காக மக்கள் கஷ்டப்படும் நிலையில் அதற்கான திட்டங்களைச் செயல்படுத்துவோம். புதிய கூட்டுக்குடிநீர் திட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும். கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டங்களை முழுமையாகச் செயல்படுத்துவோம். அத்துடன் நதிகள் இணைப்புக்கு பாஜகவின் தேர்தல் அறிக்கையிலேயே முக்கியத்துவம் தந்துள்ளோம்.
கோதாவரி - காவிரி - குண்டாறு இணைப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டால் இந்தப் பகுதியின் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படும். அதற்கான முயற்சிகளை நான் நிச்சயமாக மேற்கொள்வேன்.
ராமநாதபுரம் 40 கிலோ மீட்டர் தொலைவுக்கு கடற்கரையைக் கொண்ட பகுதி. அதிகமான மீனவர்கள் வசிக்கும் தொகுதி. மீனவர்கள் விஷயத்தில் மத்திய அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. இலங்கை கடற்படையிடம் சிக்கிய 1,900 மீனவர்களை கடந்த 5 ஆண்டுகளில் மத்திய பாஜக அரசு மீட்டுள்ளது. தூக்கு மேடை வரை சென்ற மீனவர்களையும் மீட்டுள்ளோம். சமீபத்தில் கூட 11 தமிழக மீனவர்கள் மீட்கப்பட்டாரகள்.
இதுமட்டுமின்றி மீனவளத்துறைக்காக தனி அமைச்சகம், மீனவர்களுக்கு கடன் திட்டம், காப்பீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
இவ்வாறு நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT