Published : 27 Apr 2019 06:10 PM
Last Updated : 27 Apr 2019 06:10 PM
குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் கொல்லிமலையில் மட்டும் 7 குழந்தைகள் விற்கப்பட்டுள்ளனர். அத்துடன் பிறப்புச் சான்றிதழ்களில் குறிப்பிட்டுள்ள 20 குழந்தைகள் சம்பந்தப்பட்ட பெற்றோரிடம் இல்லை எனவும் கூறப்படுகிறது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற பெண் செவிலியர் உதவியாளர் அமுதவள்ளி. இவர் பேசிய ஆடியோ ஒன்று வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது. பல லட்ச ரூபாய் மதிப்பில் குழந்தைகளை அமுதவள்ளி விலைபேசி விற்பனை செய்து வந்தது, இந்த ஆடியோ மூலம் வெட்ட வெளிச்சத்திற்கு வந்தது.
இதையடுத்து அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன் மற்றும் இவர்களுக்கு உடந்தையாக செயல்பட்டு வந்த கொல்லிமலை செங்கரை பவர்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் உள்ளிட்ட மூவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு உத்திரவின்படி, ராசிபுரம் போலீஸார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
அமுதவள்ளியிடம் செல்போனில் பேசிய நபர் தன்னை தர்மபுரியைச் சேரந்த சதீஸ்குமார் என, அறிமுகப்படுத்தியுள்ளார். அவர் யார் என்பது குறித்தும் தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அமுதவள்ளியிடம் செல்போனில் தொடர்ச்சியாக பேசிய நபர்களையும், தனிப்படை போலீஸார் தங்களின் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்துள்ளனர்.
இதனிடையே அமுதவள்ளியின் சட்டவிரோத குழந்தை விற்பனை தொழிலுக்கு உடந்தையாக செயல்பட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன், கொல்லிமலையில் மட்டும் 7 குழந்தைகளை விற்பனை செய்ததாக போலீஸ் விசாணையின்போது கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதில் 5 பேரின் வீடுகளை முருகேசன் அடையாளம் காட்டியிருப்பதாகவும், இருவரின் வீடு முருகேசனுக்கு தெரியவில்லை எனவும், போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
20 குழந்தைகள் மாயமா?
கொல்லிமலையில் வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழின் உண்மைத் தன்மையை அறிய சுகாதாரத் துறையின் காவல் துறையினர் உதவியுடன் கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் 20 பிறப்புச் சான்றிதழ்களில் குறிப்பிட்டுள்ள குழந்தைகள் சம்பந்தப்பட்ட பெற்றோரிடம் இல்லை என, கண்டறியப்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாகவும் சுகாதாரத் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT