Last Updated : 25 Apr, 2019 12:00 AM

 

Published : 25 Apr 2019 12:00 AM
Last Updated : 25 Apr 2019 12:00 AM

தேர்தல் ஆணையத்தில் கட்சியைப் பதிவு செய்வதால் அமமுகவுக்கு என்ன நன்மை?

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ‘குக்கர்’ சின்னம் ஒதுக்கக்கோரி அமமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கட்சியைப் பதிவு செய்யாததால், குறிப்பிட்டு கேட்கும் சின்னத்தை (குக்கர்) பொதுச் சின்னமாக ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதையடுத்து, அமமுக வேட்பாளர்களை சுயேச்சையாக கருதி, அவர்களுக்கு பொதுவான சின்னம் ஒதுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர், பொதுச் சின்னமாக ‘பரிசுப்பெட்டி’ ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில், அமமுகவை கட்சியாகப் பதிவு செய்வதற்கான ஆவணங்களை டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் டிடிவி தினகரன் தரப்பு தாக்கல் செய்துள்ளது.

தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த பிறகு, தேர்தலில் போட்டியிட்டு குறிப்பிட்ட சதவீத வாக்குகள் பெற்றால்தான் தேசிய கட்சி அல்லது மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை பெற முடியும். அதேபோல, தங்கள் கட்சிக்கென குறிப்பிட்ட சின்னத்தையும் கேட்டுப் பெற முடியும். இது மட்டுமின்றி, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் சில சலுகைகளை அளிக்கிறது.

கடந்த மார்ச் 15-ம் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் 2,301 கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் பல கட்சிகள் இருந்தாலும், அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகளாக அதிமுக, திமுக, தேமுதிக ஆகிய 3 கட்சிகள் மட்டுமே உள்ளன. தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப் பட்ட, ஆனால் அங்கீகரிக்கப்படாத கட்சிகள்தான் பெரும்பான்மை யாக உள்ளன. இந்தப் பட்டியலில் தான் பாமக, மதிமுக, விசிக, தமாகா, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன.

பதிவு செய்வது எதற்கு?

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும்போது, சுயேச்சையாக போட்டியிடுபவர்களைவிட தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சி சார்பில் போட்டியிடுபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் வேட்பாளர் தேர்தலில் போட்டியிட ஒருவர் மட்டும் முன்மொழிந்தால் போதும். அதேபோல, அங்கீ கரிக்கப்பட்ட கட்சியின் வேட்பாளருக்கு அவரது தொகுதியின் இறுதி வாக்காளர் பட்டியல் நகல் இலவசமாக வழங்கப்படுகிறது.

அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சிகள் பிரச்சாரத்தின் போது அதிகபட்சம் 40 நட்சத்திரப் பேச்சாளர்களை பயன்படுத்தவும், ஆணையத்தில் பதிவு செய்த கட்சிகள் அதிகபட்சம் 20 நட்சத்திரப் பேச்சாளர்களை பயன்படுத்தவும் அனுமதி அளிக்கப்படுகிறது. நட்சத்திரப் பேச்சாளர்களின் போக்குவரத்து செலவு வேட்பாளரின் தேர்தல் செலவில் சேர்க்கப்படாது.

நிபந்தனைகள் என்ன?

இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் முக்கியப் பொறுப்பு வகித்த ஓய்வு பெற்ற மூத்த அதிகாரி ஒருவர் கூறிய தாவது:

மாநில கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரம் பெற சில நிபந்தனைகள் உள்ளன. அதன்படி, சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்த தொகுதிகளில் 3 சதவீத இடங்களில் வெற்றி பெற வேண்டும். தமிழகத்தைப் பொறுத்தவரை 234 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இதில் 3 சதவீதம், அதாவது 8 தொகுதி களில் வெற்றி பெற வேண்டும்.

மக்களவைத் தேர்தலில், மாநிலத்தில் உள்ள எம்.பி. தொகுதிகளில் ஒவ்வொரு 25 இடத்துக்கும் ஒரு இடத்தில் வெல்ல வேண்டும். அதன்படி, தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத்தொகுதிகளில் 2 தொகுதிகளில் வெல்ல வெண்டும். மக்களவை அல்லது சட்டப்பேரவைத் தேர்தலில் 6 சதவீத வாக்குகளுடன், ஒரு மக்களவைத் தொகுதியிலோ, 2 சட்டப்பேரவைத் தொகுதிகளிலோ வெல்ல வேண்டும். அல்லது, 8 சதவீத வாக்குகளைப் பெற வேண்டும். இதில் ஏதேனும் ஒரு நிபந்தனையை பூர்த்தி செய்தால்தான் அங்கீகாரம் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x