Published : 16 Apr 2019 10:43 AM
Last Updated : 16 Apr 2019 10:43 AM
"இப்பவும் தினமும் எழுதிக்கிட்டிருக்கேன். அமேசானுக்கும் நாவல்கள் அனுப்பறேன். வெகுஜனப் பத்திரிகைகள் முந்தியெல்லாம் நிறைய கேட்டாங்க. இப்ப அப்படியில்லை. மறந்துட்டாங்கன்னு நினைக்கிறேன். ஆனாலும், கதை கேளுங்க, தர்றேன்னு எல்லாம் யாரையும் கேட்டுக்கறதில்லை. எதுவா இருந்தாலும் தேடி வரணும். நம்மளா தேடிப் போகக்கூடாது. அதுதான் என் கொள்கை.
வரலாற்றுச் சம்பவங்களை எதிரொலிக்கும் கதாபாத்திரங்கள் வச்சு எழுதறேன். நிறைய கட்டுரைகள், நாவல்கள், கட்டுரை தொகுப்புனு எழுதிக்கிட்டேயிருக்கேன்.
புராணக் கதைகளுக்கு தேவையான விஷயங்களை முன்ன தேடி எடுக்கணும்ன்னா, புத்தகங்களைத் தேடணும். இப்ப அப்படியில்லை. கம்ப்யூட்டர் இருந்ததால தப்பிச்சேன். கூகுள்ல தேடித்தேடிப் பார்த்து தெரிஞ்சிக்கிறேன். அந்தக் காலத்துல கையில எழுதுவேன். இப்பவெல்லாம் டைப் செஞ்சு, மெயில்லதான் அனுப்பறேன். என்ன கொஞ்ச லேட்டாகும். கையில எழுதறது ஒரு நாள்னா, இது நாலு நாள் ஆகும். கதைய எழுதி வச்சுட்டு, அப்புறம்தானே டைப் பண்றேன்" என்ற விமலாரமணி, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பட்டம் பெற்றிருக்கிறார்.
50 ஆண்டுகளுக்கு மேலாக...
ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு மேலாக, 1,000 சிறுகதைகள், 1,000 நாவல்கள், ஏராளமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். 1977-ல் தினமணி கதிரில் சிறுகதைக்கு முதல் பரிசு, 1978-ல் குங்குமத்தில் சிறுகதைக்கு முதல் பரிசு, 1979-ல் கலைமகள் குறுநாவல் போட்டியில் முதல் பரிசு என 1970-களிலேயே நிறைய பரிசுகள் பெற்றுள்ளார். தொலைக்காட்சியில் முழு நேர நாடகங்கள், சீரியல்கள், மேடை நாடகங்கள், வானொலிக்கும் நிறைய எழுதியிருக்கிறார்.
சமூக நலத் திலகம், விஐபி விருது, எழுத்துச் சுடர், மனிதநேய மாண்பாளர், சாதனை பெண்மணி, புதினப் பேரரசி, நாவலரசி என்றெல்லாம் பட்டங்களும் பெற்றுள்ள விமலாரமணியின் நாவல்களில் உள்ள பெண் கதாபாத்திரங்களை ஆய்வு செய்து, மதுரை பல்கலைக்கழகத்தில் நான்கு பேர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.
பொள்ளாச்சி மகாலிங்கம் தந்தை நாச்சிமுத்துக் கவுண்டரின் வாழ்க்கை வரலாற்றை எழுத, ஒரு வருட காலம் தகவல்கள் சேகரித்ததை பெருமிதத்துடன் நினைவுகூர்கிறார்.
"பெண்களில் மூன்றாவது தலைமுறை எழுத்தாளராக இருக்கிறீர்கள். இப்போதைய பெண் எழுத்தாளர்களைப் பற்றி உங்கள் பார்வை எப்படியுள்ளது" என்று கேட்டோம்.
இலக்கணத்தை மீற மாட்டேன்!
"எனக்குன்னு சில இலக்கணங்கள் வச்சிருக்கேன். அந்த எல்லையை நான் மீறுவதில்லை. நாட்டுல எத்தனையோ நடக்கும். அதையெல்லாம் எழுதலாமா? அப்படி அவசியம் இல்லை.
இப்ப என்ன வேண்ணா எழுதலாம்னு வந்தாச்சு. பெண் அவயங்களை வச்சு எழுதற எழுத்தாளர்கள் நிறைய வந்துட்டாங்க. அதை தப்புனு சொன்னா, என்னை அடிக்க வருவாங்க. பெண்களுக்குனு ஒரு தார்மீகக் கடமை இல்லையா? சினிமா, டீவி சீரியல்லயும் ஒரு கட்டுப்பாடே இல்லாம போச்சு. எதிர்மறை அணுகுமுறைதான் அதிகம். சமூகத்தில் நல்லதும், கெட்டதும் இருக்கும். நல்லதை மட்டும் எடுத்துட்டு, கெட்டதை நம்ம ஒதுக்கிடணும்.
எழுத்தாளர் லட்சுமி எனக்கு முன்னோடி. அவரே என் ஆதர்ச எழுத்தாளர். தினமணியில் ‘ஒரு பறவை கூண்டைவிட்டு வெளியேறியது’னு ஒரு தொடர் எழுதினேன். இதை லட்சுமி எழுத்தோட ஒப்பிட்டுப் பேசிய ஆசிரியர், அவங்களை சந்திக்கவும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தார். என் தொடரை படிச்சுட்டு வர்றதா சொன்ன லட்சுமி, சில யோசனைகளையும் சொன்னார்.
குமுதத்தில பெண்கள் பத்திரிகை மலர் ஒண்ணு வந்துச்சு. அதோட ஆசிரியரா ஆறு மாசம் இருந்தேன். கதைகள், தலையங்
கம், கேள்வி-பதில் எல்லாம் பார்த்துப்பேன். என்னால கோவையிலிருந்து சென்னைக்கு போயிட்டு வர்றதுக்கு முடியலை. எனக்கு அப்புறம் கீதாபென்னட், சுஜாதா அதை பார்த்துக்கிட்டாங்க. பின்னாடி அந்தப் பத்திரிகை நின்னுடுச்சு.
என்னோட `கண்ணே கனியமுதே' நாவல் கதையை ஒரு சினிமா கம்பெனி வாங்கினாங்க. 1998-ல் அந்த சினிமா வெளியானது. அப்ப நான் மும்பையில இருந்ததால படத்தைப் பார்க்க முடியலை. ஒரு கேசட் அனுப்பியிருந்தாங்க. அதுல என் கதை அம்சம் எங்கேயுமே காணமுடியலை. டைட்டில்ல மட்டும் என் பேர் இருந்தது. அதுக்கப்புறமும் சினிமா வாய்ப்பு வந்தது. கதைகள் வாங்கிட்டுப் போனாங்க. அது வெளியே வரலை.
இப்பவெல்லாம் முந்தைய தலைமுறை சொல்றதைக் கேட்கிற அளவுக்கு, இளைய தலைமுறை இல்லை. நான் சொல்வதைத்தான் கேட்கணும்னு சொல்லாம இருக்காங்களே! அதுக்காக நாம சந்தோஷப்படணும்.
ஒரு பாம்புக்கிட்ட குழந்தை போச்சுன்னா, தாயார் பார்த்துட்டு இருப்பாளா? ஓடிப்போய் குழந்தையை தூக்கி, `அதுதான் பாம்பு, அது கடிச்சா விஷம்'னு சொல்லுவா. சொல்லணும். இது தாயோட கடமை. இதுபோல, ஒவ்வொரு எழுத்தாளருக்கும் கடமை இருக்கு. சமூகத்துல எவ்வளவோ நல்லது, கெட்டது இருக்கு. எது நல்லது, எது கெட்டதுனு வாசகர்களுக்குச் சொல்லணும். எப்படியோ போகட்டும்னு விட்டா, அவன் எழுத்தாளனே இல்லை. எதுக்கும் ஒரு தீர்வு தரணும்" என்று பேட்டியை முடித்துக் கொண்டார் விமலா ரமணி.
திருமணத்துக்குப் பிறகு எழுதிய முதல் கதை!
எழுத்தாளர் விமலாரமணியின் பூர்வீகம் திண்டுக்கல். அங்குள்ள செயின்ட் ஜோசப் கான்வென்ட் பள்ளியில் படித்துள்ளார். 1955-ல் கோவை சிங்காநல்லூர் நூற்பாலையில் கணக்காளராக இருந்த ரமணியுடன் திருமணம். பிறகு, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி பி.ஏ. படித்துள்ளார்.
சிறு வயதில் கல்கியின் சிவகாமியின் சபதம், அலை ஓசை, பொன்னியின் செல்வன் தொடர் கதைகளைப் படித்தபோது, எழுத்தின் மீது ஆர்வம் வந்துள்ளது. திருமணத்துக்குப் பின்னர் கதை எழுதத் தொடங்கியபோது, கணவர் ஊக்குவித்துள்ளார். 1956-ல் `அமைதி'
என்ற கதையை எழுதி, கணவரிடம் படிக்கத் தந்துள்ளார். அதைப் பாராட்டியவர், அப்போது கோவையிலிருந்து வெளி வந்துகொண்டிருந்த `வசந்தம்' இதழாசிரியரிடம் அதை தந்துள்ளார். அதுவே முதல் பிரசுரம்.
பிறகு, கலைமகள் வெள்ளி விழாவுக்காக நாடகம், கவிதை, சிறுகதை, குறுநாவல் என பல போட்டிகளை அறிவிக்க, அத்தனை பிரிவுகளிலும் கலந்துகொண்டுள்ளார். அதில், நாடகம் பரிசு பெற்றிருக்கிறது. ஆசிரியர் கி.வா.ஜ. பாராட்டுக் கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். இப்படி தொடங்கிய விமலா ரமணியின் எழுத்துப் பயணம், இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT