Published : 18 Apr 2019 04:44 PM
Last Updated : 18 Apr 2019 04:44 PM
கடலூர் மக்களவைத் தொகுதியில், அமமுக சின்னம், வேட்பாளர் பெயர், பட்டன் இல்லாத வாக்குப் பதிவு இயந்திரத்தால், சலசலப்பு ஏற்பட்டது.
கடலூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பண்ருட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட திருவதிகை பாவடைப்பிள்ளை அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குச்சாவடிக்குள் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில், வாக்குப் பதிவு நடைபெற்றது. 356 வாக்குகள் பதிவான நிலையில், வாக்காளர் ஒருவர் அமமுக வாக்களிக்கக் கூடிய பொத்தானைக் காணவில்லை எனக் கூறியிருக்கிறார்.
இதையடுத்து அங்கிருந்த அமமுக வேட்பாளரின் முகவர், தேர்தல் அலுவலரிடம் முறையிட்டுள்ளார். இதையடுத்து வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. இதையடுத்து திருவதிகை வாக்குச்சாவடியில் துவக்கத்திலிருந்து வாக்குப்பதிவு நடத்தவேண்டும் என அமமுகவினர் கோரிக்கை விடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து போலீஸார் மற்றும் துணை ராணுவப்படையினர் வரவழைக்கப்பட்டு, பிற்பகல் 3 மணி வாக்கில் மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது. இதைக் கண்டித்து அமமுகவினர் பண்ருட்டியில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அங்கிருந்த மற்ற கட்சியைச் சேர்ந்த பிரமுகர்கள் கூறுகையில், "காலையில் மாதிரி வாக்குப் பதிவு நடைபெற்ற போது, அமமுகவின் வேட்பாளர் முகவருக்கு தெரியாமல் இருந்தது எப்படி எனவும், 356 வாக்குகள் பதிவான நிலையில் தான் கண்டுபிடிக்கப்பட்டது என்றால் அவரது வேட்பாளரின் முகவர் அஜாக்கிரதையாக இருந்தது எப்படி என்ற கேள்வியும் எழுந்துள்ளது", என்றனர்.
இதுதொடர்பாக பண்ருட்டி தொகுதி தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் கீதாவிடம் கேட்டபோது, தற்போது வாக்குப் பதிவு மீண்டும் தொடங்கியுள்ளது. பட்டன் மாயம் தொடர்பாக வாக்குப்பதிவு அலுவலரிடம் விசாரிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT