Published : 19 Apr 2014 12:00 AM
Last Updated : 19 Apr 2014 12:00 AM
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் அவருக்கு துணையாக அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் பின்தொடர்கிறார். கணவருக்கு உதவியாளராக மட்டுமின்றி அரசியல் பார்வை யாளராகவும் இருந்து களத்தை அளந்து கொண்டிருக்கிறார் துர்கா. ஆனாலும், ‘எனக்கு அரசியல் தெரியாது’ என்கிறார். அவர் ‘தி இந்து’ வுக்கு அளித்த சிறப்புப் பேட்டி.
உங்கள் கணவருடன் பிரச்சாரப் பயணத்தில் கூடவே பின்தொடர் கிறீர்கள். மக்களின் நாடித் துடிப்பு எப்படி இருக்கிறது?
செல்லும் இடமெல்லாம் மக்கள் எங்களுக்கு சிறப்பான வரவேற்பு குடுக்குறாங்க. களைப்பின் வலி தெரியாமல் நாங்கள் ஓடிக் கொண்டே இருப்பதற்கு அதுதான் முக்கியக் காரணம். இந்தத் தேர் தலில் அதிமுக அரசு மீது மக்கள் ரொம்பவே கோபமாக இருப்பது தெரிகிறது.
ஜெயலலிதாதான் அடுத்த பிரதமர் என்கிறார்கள் அதிமுக-வினர். ஒரு பெண் என்ற முறையில் ஜெயலலிதாவுக்கு பிரதமராகும் வாய்ப்பு கிடைத்தால் வரவேற்பீர்களா?
ஒரு பெண் நாட்டை ஆள்வது என்பது நல்ல விஷயம்; இன்றைய சூழலில் அது வரவேற்கத்தக்கதும் கூட. ஆனால், ஜெயலலிதா அதுக்கு தகுதியானவங்கன்னு எனக்குத் தோணலியே.
பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரத்தில் கலக்கி எடுக்கிறார். அதுபோல நீங்கள் ஏன் மைக் பிடிக்கவில்லை?
தமிழ்நாடு முழுவதும் எனது கணவர் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார். அவருக்குத் துணையாக நானும் செல்கிறேன். இந்தத் தேர்தலில் நான் பார்வை யாளராக இருந்து மக்களின் மனதை படித்துக் கொண்டிருக் கிறேன். அதனால், தனியாக பிரச்சாரம் செய்ய திட்டமில்லை.
திமுக வேட்பாளர் தேர்வில் இந்த முறை உங்கள் கணவரின் கையே ஓங்கியதாக சொல்லப்படுகிறதே?
கட்சி விவகாரங்களில் நான் தலையிடுவது இல்லை. அதனால், வேட்பாளர் தேர்வு பற்றி எல்லாம் எனக்கு எதுவும் தெரியாது.
திமுக தலைவர் கருணாநிதி 90 வயதிலும் பிரச்சாரம் செய்து வருவது பற்றி உங்கள் கருத்து?
தேர்தல் பிரச்சாரத்தில் எவ் வளவு சிரமங்கள் இருக்குன்னு களத்துல இருக்கிறவங்களுக்குத் தான் தெரியும். எங்களுக்கே இப் படினா, அவங்க எப்படி இந்த வயசுலயும் இப்படி உழைக்கிறாங் கனு ரொம்ப ஆச்சரியமா இருக்கு.
மோடி அலை வீசுகிறது, அம்மா அலை வீசுகிறது என்று பிரச்சாரங்கள் பிரமாதப்படுகிறதே?
எங்க கண்ணுக்கு அப்படி எந்த அலையும் தெரியவில்லை. நான் பார்த்த வரைக்கும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான எதிர்ப்பு அலைதான் தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT