Published : 03 Apr 2019 08:13 PM
Last Updated : 03 Apr 2019 08:13 PM
அதிமுக பொதுசெயலாளர் மறைந்த ஜெயலலிதா நீட் தேர்வை அமல்படுத்த மறுத்தார். அதன்பின்னர் அமைந்த அவர்களது அரசு அதை அனுமதித்தது. தற்போது காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் நீட் இல்லை என்ற அறிவிப்பு பலராலும் வரவேற்கப்படும் நிலையில் அதிமுகவுக்கு இது நெருக்கடியாக பார்க்கப்படுகிறது.
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு தமிழகத்தில் பிளஸ்டூ பாட தேர்வு முறைமூலம் நடுத்தர, கிராமபுறத்தில் உள்ள திறமையான மாணவர்கள் எளிதில் தேர்வாகினர். ஆனால் நீட் எனும் மருத்துவ நுழைவுத்தேர்வு அமல்படுத்த குழு அமைக்கப்பட்டது. அந்த குழு அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையில் நீட் தேர்வு தமிழகத்தில் வரவாய்ப்பில்லை என அனைவரும் நினைத்திருந்தனர்.
ஆனால் அதை அமல்படுத்த மத்திய அரசு முயற்சி எடுத்தது. தமிழகத்தில் நீட் மருத்துவ நுழைவுத்தேர்வுக்கு அனுமதில் இல்லை என அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உறுதியாக இருந்தார்.
2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது அதிமுக தேர்தல் அறிக்கையிலும், அதன் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் பிரச்சாரத்திலும் தமிழகத்தில் நீட்டுக்கு அனுமதி இல்லை என்பதில் உறுதியாக இருந்தார். ஆனால் அவர் மறைந்தப்பின்னர் மாநிலத்தில் பொறுப்புக்கு வந்த எடப்பாடி பழனிசாமி அரசு அவர் வழியில் ஆட்சி செய்வதாக தெரிவித்தது.
நீட் அனுமதில் இல்லை என அறிவித்துக்கொண்டே நீட் கொண்டு வரப்பட்டபோது அதை எதிர்த்து மேல் முறையீடு செய்யாமல் அறிமுகப்படுத்தியது. விளைவு அனிதா, பிரதீபா, சுபஸ்ரீ போன்றோர் தற்கொலைக்கு காரணமாக அமைந்தது. நீட் நுழைவுத்தேர்வால் சிபிஎஸ்இ மற்றும் மேல்தட்டு மாணவர்களே பயனடைந்தனர்.
ஜெயலலிதா கடுமையாக எதிர்த்த ‘நீட்’ குறித்து அதிமுகவோ, அதை திணித்த பாஜகவோ பேசாத நிலையில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் நீட் விரும்பாத மாநிலங்களில் அமல்படுத்தப்படாது என அறிவித்ததன்மூலம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இது தேர்தல் நேரத்தில் அதிமுகவுக்கு நெருக்கடியை தருமா? கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
இந்த அறிவிப்பு அதிமுக பாஜக கூட்டணிக்கு நெருக்கடியாக இருக்குமா?
நிச்சயமாக இருக்கும். மறைந்த ஜெயலலிதா 2016-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் பாளையங்கோட்டையில் நடந்த ஒரு பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் நான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நீட் நுழைவுத்தேர்வு இல்லாமல் மருத்துவர் மாணவர் சேர்க்கையை நடத்துவேன். அதற்கான வலுவான சட்டத்தை உருவாக்குவேன் என தெரிவித்திருந்தார்.
ஜெயலலிதா 2016-ம் ஆண்டு மக்களுக்கு வாக்குறுதி கொடுத்து வாக்குப்பெற்று அமைந்த அரசு, அவர் மறைவுக்குப்பின் இரண்டு ஆண்டுகளாக ஏன் அதை செய்யவில்லை என்பதுதானே இப்போதுள்ள கேள்வி. இதை அவர்கள் வாக்குறுதியாக மட்டுமல்லாமல் அறிக்கையாக கொடுத்திருந்தார்கள்.
எங்கள் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத உங்களுடன் நாங்கள் எப்படி கூட்டணி வைத்துக்கொள்ளமுடியும்? என்கிற கேள்வியை பாஜகவிடம் அதிமுக தலைமை எழுப்பியிருக்கணும் அல்லவா?, அதை செய்யாமல் கூட்டணி வைத்து வாக்கு கேட்கும் அவர்கள் இதற்கு நிச்சயம் மக்களிடம் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும். அந்த நெருக்கடி அவர்களுக்கு உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நீட் மருத்துவ நுழைவுத்தேர்வில் மாநில பாடத்திட்டத்தில் பயின்று தேர்வு எழுதிய 75000 மாணவர்களில் 300 பேர் மட்டுமே தேர்வு பெற முடிந்தது. அதாவது அதாவது .5%-க்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே தேர்ச்சிப்பெற முடிந்தது.
இது பெரும்பான்மையான மாணவச்சமுதாயத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி. அதே நேரம் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயின்று தேர்வு எழுதிய 9000 மாணவர்களில் 4500 பேர் தேர்வுப்பெற்றனர். இது 50 சதவீதமாகும். இதன்மூலம் நீட் தேர்வு சிபிஎஸ்இ மாணவர்கள், வசதியுள்ளோருக்கு என்பதே நடைமுறை உண்மை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT