Published : 10 Apr 2019 07:11 PM
Last Updated : 10 Apr 2019 07:11 PM

நேரம் காலம் பார்க்காம, யாரு பேச்சும் கேக்காம, காசு பணம் வாங்காம! - தேர்தலைப் பேசிய பொம்மைகள்!

அந்த வாரச் சந்தையில் பெரிய கூட்டம். காய்கறி, கருவாடு, பழங்கள், மளிகைப் பொருட்கள் என அலைந்து மொய்த்துக் கொண்டிருக்கும் மக்கள் காதில், ‘‘ஓட்டு போடுங்க, மக்களே ஓட்டு போடுங்க. மறக்காம, நேரங்காலம் தவறாம ஓட்டு போடுங்க!’’ என்ற ரெக்கார்டட் கானம் விழுகிறது.

தேர்தல் காலம். ஆட்டோவிலோ, வேனிலோ ஏதோ அரசியல் கட்சி தெருமுனை பிரச்சாரம் செய்கிறது என்றுதான் நினைத்து சுவாரஸ்யம் இல்லாமல் நகரும் சிலர் அந்தக் கூண்டையும், அதில் ஆடும் பொம்மைகளையும் பார்த்து அப்படியே நிற்கிறார்கள்.

அப்படி நிற்காமல் செல்பவர்களைக் கூட, அவர்கள் கையைப் பிடித்துச் செல்லும் குழந்தைகள் அந்த இடத்திற்கு அழைத்து வந்து விடுகின்றனர்.

‘‘நேரம் காலம் பார்க்காம, யாரு பேச்சும் கேக்காம, காசு பணம் வாங்காம போடுங்க ஓட்டு போடுங்க. நம்ம ஓட்டு நம்மளுது நினைப்போட போய் ஓட்டு போடுங்க!’’ ராகத்திற்கு ஏற்ப துள்ளிக் குதிக்கும் ஆண் பெண் பொம்மைகள் திடீரென்று நிற்கின்றன. 

‘‘ஏ.. மச்சான்...!’’

‘‘என்ன புள்ளே?’’

‘‘பாராளுமன்றத் தேர்தல் வருதுல்ல,!’’

‘‘ஆமாம்!’’

‘‘அதுல நம்ம எப்படி நடந்துக்கணும் தெரியுமா?’’

‘‘எப்படி நடந்துக்கணுமாம்?’’

‘‘ஜனநாயகப்பூர்வமா நடந்துக்கணும்!’’

ஜனநாயகப்பூர்வமான்னா?!’’

‘‘முக்கியமா காசு பணம் வாங்கினா ஓட்டு தப்பா ஆயிடும்!’’

பொம்மைகள் தொடர்ந்து பேசிக் கொள்கின்றன.

பெருகும் கூட்டம். கொண்டாட்டம். குழந்தைகளின் கண்களில் அளவிலா பூரிப்பு. மணிக்கணக்கில் கூட்டம் கலையாது நிற்கிறது. வெறுமனே தேர்தல் பிரச்சாரப் பாடல் மட்டும் போட்டால் அலுப்பு தட்டி விடும் அல்லவா? அதைச் சரி செய்ய சினிமா பாடல்களும் ஒலிக்கின்றன. அதற்கேற்ப விதவிதமான பொம்மைகள் ஆடுகின்றன. இப்படி இந்த மக்களவைத் தேர்தலுக்கு தேர்தல் பிரச்சாரம் ஆரம்பித்த காலத்திலிருந்து கோவையில் இதுவரை சுமார் 20 இடங்களில் தன் பொம்மைகள் மூலம் பிரச்சாரத்தை செய்து விட்டார் பொம்மலாட்டக்கலைஞர் சீனிவாசன். ரிட்டயர்டு தலைமை ஆசிரியர். கோவைவாசி. தன் ஊரில் மட்டுமல்லாது ஈரோடு, நாமக்கல், திருப்பூர், நீலகிரி என  ஆறாண்டுகளுக்கு மேலாக பள்ளிகளில் நூற்றுக்கணக்கான பொம்மலாட்ட நிகழ்ச்சிகளை நடத்தியவர். கோவை அருகே உள்ள கோவைபுதூரில் பொம்மலாட்ட தேர்தல் பிரச்சாரத்தை நடத்திக் கொண்டிருந்தவரைச் சந்தித்தேன்.

‘‘நூலகத்தில் வாசிப்பு , மழைநீர் சேகரிப்பு, டெங்கு, சத்துணவு, சுகாதாரம், வீட்டு வாரியம்னு இப்படி நிறைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நான் இந்த பொம்மலாட்டம் மூலம் செஞ்சிருக்கேன். 1-ம் வகுப்பு முதல் 6-ம் வகுப்பு வரைக்குமான பாடத்தில் உள்ள பாடல்கள், கதைகளை ஆங்கிலம், தமிழ்னு தனித்தனியா ரைம்ஸ் பண்ணி பள்ளிக்கூடங்கள்ல செஞ்சிருக்கேன். அதெல்லாமே நானே எழுதின பாட்டு. அதை இசையோட ரெக்கார்டு பண்ண உள்ளூர்ல ஒரு தம்பி கிட்ட கொடுத்து வாங்கிடுவேன். இந்த வருஷம் தேர்தலுக்கு மக்களிடம் ஓட்டு போட வேண்டிய அவசியத்தை கொண்டு போலாம்னு திட்டமிட்டு ரெண்டு மாசம் முன்னாலயே கோவை மாவட்ட ஆட்சியருக்கு ஒரு மனு எழுதினேன்.

ஒரு நாள் டிஆர்ஓ ஆபீஸ்லயிருந்து எனக்கு போன் பண்ணினாங்க. பேரூர் தாலுக்கா ஆபீஸ்ல போய் தாசில்தாரை பாருங்கன்னாங்க. அவங்க என் பாட்டைக் கேட்டுட்டு, ரெண்டு இடத்துல அதை போட அனுமதி கொடுத்தாங்க. அதே மாதிரி மதுக்கரையில கூப்பிட்டாங்க. கோயம்புத்தூர்ல மொத்தம் 15 தாலுக்கா வருது. அதுல எல்லாம் கூப்பிட்டு ஒவ்வொருத்தரும் ரெண்டு ரெண்டு இடங்களில் போடச் சொல்லியிருக்காங்க. அதைத்தான் இப்ப செஞ்சுட்டு வர்றேன். இதுக்கு ரூ.1000 அரசாங்கம் தந்துடுது. போக்குவரத்து செலவு தனியா தந்துடறாங்க. இதுல பணம் முக்கியமில்லைய்யா. இந்த குழந்தைகளை, பெரியவங்களை சந்தோஷப்படுத்தறோம்ல அதை விட வேறென்ன இருக்கு!’’என்று சொல்லும் சீனிவாசன் தன் மனைவியை மட்டுமே உதவியாளராக வைத்துக் கொண்டு ஊர் ஊராகச் செல்கிறார்.

‘‘கோவை மாவட்டத்தையும் தாண்டி சுத்தணும்னுதான் ஆசை. வயசான காலத்துல எங்கே முடியுது? இருந்தாலும் ஆசைப்பட்டு கூப்பிட்ட இடத்துக்கு கண்டிப்பா போயிடறேன்!’’ என்கிறார்.

சீனிவாசனிடம் 50 பொம்மைகள் இருக்கின்றன. ஆண் பாதி, பெண்பாதி. எல்லாமே வேஸ்ட் துணிகளை வைத்து அவரே செய்து கொள்கிறார். பொம்மை செய்ய பலருக்கு பயிற்சியும் கொடுத்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x