Published : 24 Sep 2014 03:26 PM
Last Updated : 24 Sep 2014 03:26 PM

வைகோவுடன் கூட்டணி சேர்ந்தால் வெற்றி நிச்சயம்: திமுகவில் அரசியல் ஆரூடம்!

திமுக, வைகோ-வுடன் கூட்டணி வைத்தால் அந்தக் கூட்டணி வெற்றி பெறும் என்கிற புதிய அரசியல் ஆரூடத்தை திமுக-வின் மூத்த நிர்வாகிகள் சிலர் கணித்துள்ளனர். அவர்கள் கடந்த கால வெற்றி உதாரணங்களை சுட்டிக்காட்டி, திமுக-வை மதிமுக-வுடன் கூட்டணி சேர்ப்பதற்கான வேலைகளை தொடங்கியுள்ளனர்.

கூட்டணி அரசியல் ஆரூடம்

இதுகுறித்து திமுக-வின் மூத்த தலைவர்கள் சிலர் ‘தி இந்து’விடம் கூறியதாவது: வெளிப்படையாக காட்டிக்கொள்ளாவிட்டாலும் திமுக-வின் மூத்த நிர்வாகிகள் பலருக்கும் கடவுள் நம்பிக்கை, கைராசி, ஜோதிடம் ஆகியவற்றில் நம்பிக்கை உண்டு. அதன்படி மூத்த தலைவர்கள் சிலர் சில சென்டிமென்ட் கணக்குகளைப் போட்டுள்ளனர். இதில் வைகோவுக்கும் திமுக-வுக்கும் வெற்றி ராசி இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அவர்கள் திமுக தலைவரிடமும் ஆலோசித்துள்ளனர். ஆனால், தலைவர் கோபப்படுவார் என்பதால் கைராசி போன்ற விஷயங்களை தலைவரிடம் பகிர்ந்து கொள்ளவில்லை.

திமுக - மதிமுக கூட்டணி வெற்றி உதாரணங்கள்..

கடந்த காலங்களில் திமுக-வுடன் வைகோ இருமுறை கூட்டணி வைத்துள்ளார். அந்த இருமுறையும் திமுக கூட்டணிக்கு அமோக வெற்றி கிடைத்தது. 1999-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திமுக முதல்முறையாக மதிமுக-வுடன் கூட்டணி வைத்தது. அப்போது திமுக கூட்டணி 27 இடங்களில் வெற்றி பெற்று, வாஜ்பாய் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் முக்கிய பங்கை வகித்தது. தொடர்ந்து 2004-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் திமுக, மதிமுக-வுடன் கூட்டணி வைத்து, 40 தொகுதிகளையும் அள்ளியது.

கூட்டணி கைநழுவியதால் வந்த பின்னடைவுகள்..

அதேசமயம் இருமுறை வைகோ கூட்டணிக்கு நெருக்கமாக வந்து பல்வேறு காரணங்களால் கைநழுவி போய்விட்டார். அந்த இரு முறையும் திமுக பின்னடைவை சந்தித்தது. 2001-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது திமுக - மதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது சங்கரன்கோவில் தொகுதியை திமுக, புதிய தமிழகம் கட்சிக்கு கொடுத்ததால் கோபித்துக்கொண்ட வைகோ தனித்து நின்றார். அப்போது திமுக கூட்டணி 38 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று தேர்தலில் தோல்வி அடைந்தது.

தொடர்ந்து 2006-ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் திமுக - மதிமுக கூட்டணி நெருங்கி வந்தது. அப்போது திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக-வுக்கு 23 இடங்கள் வரை தருவதற்கு முன்வந்தார். ஆனால், மதிமுக 25 இடங்கள் வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது. அந்த நேரத்தில் இடையே புகுந்த உளவுத் துறை அதிகாரி ஒருவர் சமார்த்தியமாகப் பேசி, வைகோவை அதிமுக அணிக்கு நகர்த்திச் சென்றுவிட்டார். அந்தத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றாலும்கூட ‘மைனாரிட்டி அரசு’ என்கிற அவப்பெயரைப் பெற நேர்ந்தது. அதேசமயம், அந்தத் தேர்தலில் மதிமுக-வும் ஆறு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனை மனதில் கொண்டே ஒருமுறை சட்டசபையில் பேசிய அப்போதைய முதல்வர் கருணாநிதி ‘அண்ணனும் ஏமாந்தோம்; தம்பியும் ஏமாந்தோம்’ என்று சூசகமாகக் குறிப்பிட்டார். எனவே, வரும் சட்டசபைத் தேர்தலில் வைகோ-வுடன் கூட்டணி வைப்பதே திமுக-வுக்கு வெற்றியைத் தேடித் தரும்..” என்று சொன்னவர்கள், தற்போதைய அரசியல் நடப்புகளையும் திமுக தலைவருடன் ஆலோசித்துள்ளனர்.

கூட்டணிக்கு பச்சைக்கொடி காட்டும் மதிமுக

சமீபத்தில் கூட்டம் ஒன்றில் பேசிய ‘ஜனநாயகத்தை காக்க எந்த நண்பர்களுடனும் கூட்டணிக்கு தயார்’ என்று மட்டும் சொல்லவில்லை. கூடவே, கடந்த திமுக ஆட்சியை ஒப்பிட்டு, தற்போதைய அதிமுக ஆட்சியையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.திமுக-வுடன் மதிமுக கூட்டணிக்கு தயார் என்பதையே இது உணர்த்துகிறது. மேலும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மதிமுக ஏழு தொகுதிகளில் கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளது. குறிப்பாக, விருதுநகரில் திமுக-வை பின்னே தள்ளி இரண்டாம் இடத்தை பெற்றது. தவிர, வைகோ-வை கூட்டணியில் சேர்த்துக்கொண்டால் அவர் திமுக-வின் பிரச்சார பீரங்கியாக செயல்படுவார். சிலரைப் போல வைகோவுக்கு எதிர்ப்பு ஓட்டு கிடையாது. இவ்வாறு திமுக தலைமையிடம் தகவல் சொல்லப்பட்டுள்ளது. இவற்றை எல்லாம் கேட்டுக்கொண்ட கருணாநிதி, பரிசீலிப்பதாக சொல்லியிருக்கிறாராம்.

இந்த நிலையில் பாஜக – மதிமுக கூட்டணி என்னவாகும் என்று மதிமுக நிர்வாகிகளிடம் பேசினால், “கடந்த காலங்களில் அரசியல் ரீதியாக தங்களை வஞ்சித்த அதிமுக-வுக்கு பாடம் புகட்ட வைகோ நினைக்கிறார். மேலும், அதிமுக-வை வீழ்த்த வேண்டும் எனில் பெரிய கூட்டணி தேவை என்றும் அவர் கருதுகிறார். அதனால், பாஜக உள்ளிட்ட கட்சிகளையும் திமுக தலைமையிலான கூட்டணியில் இணைக்க அவர் விரும்புகிறார்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x