Last Updated : 07 Apr, 2019 12:00 AM

 

Published : 07 Apr 2019 12:00 AM
Last Updated : 07 Apr 2019 12:00 AM

வாக்காளர்களை கணிக்க முடியாமல் வேட்பாளர்கள் தவிப்பு: காங்., தேமுதிக, அமமுக இடையே கடும் போட்டி; வாக்குப்பதிவுக்கு இன்னும் 11 நாட்களே உள்ளதால் தீவிரமடைந்தது பிரச்சாரம்

திருச்சி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ், தேமுதிக, அமமுக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், சுயேச்சைகள் என 24 வேட்பாளர்கள் போட்டி யிடுகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நட்சத்திர பேச்சாளர்கள் உள்ளிட்டோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வாக்குப்பதிவுக்கு இன்னும் 11 நாட்களே உள்ளதால் காங்கிரஸ், தேமுதிக, அமமுக ஆகிய முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் தங்களின் பிரச்சார வியூகத்தை மாற்றி உள்ளனர்.

வேட்பாளர் அறிவிப்பில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, இத்தொகுதியின் பிரச்சாரக் களத்துக்கு கடைசியாக வந்தவர் காங்கிரஸ் வேட்பாளர் சு.திருநாவுக்கரசர். ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளின் ஒத்துழைப்பின்மையால் தவித்த அவருக்கு, திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கொடுத்த ஒத்துழைப்பு பெரும் நம்பிக்கையாய் அமைந்தது.

ஆனால், பூத் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் பிரச்சாரத்துக்கு உடன் வருவோரை உற்சாகப்படுத்துவதில் அவர் சுணக்கம் காட்டியதால், கூட்டணி கட்சியினர் மத்தியில் சோர்வு ஏற்பட்டது. இதை உணர்ந்த திருநாவுக்கரசர் கூட்டணி கட்சியினரை உற்சாகப்படுத்தி பிரச்சார பணிகளை தற்போது தீவிரப்படுத்தியுள்ளார்.

இதற்கு முன்புவரை தினமும் காலை 7-11 மணி, மாலை 4- இரவு 10 மணி என இருந்த திருநாவுக்கரசரின் பிரச்சார பயணத் திட்ட நேரம், தற்போது காலை 7- பகல் 1 மணி, மதியம் 3- இரவு 10 மணி என நீட்டிக்கப்பட்டுள்ளது. கூட்டணி பலம், தனது சொந்த செல்வாக்கு ஆகியவற்றை நம்பி திருநாவுக்கரசர் தொகுதிக்குள் உற்சாகமாக வலம் வருகிறார்.

அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் டாக்டர் இளங்கோவன் தர்மபுரியைச் சேர்ந்தவர் என்பதால், இங்கு வந்த புதிதில் அதிமுகவினரிடம் இருந்து போதிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. யார் செலவு செய்வது என்பதில் குழப்பம் நீடித்தது. அதனால், இவரது பிரச்சாரத்தில் சுணக்க நிலை காணப்பட்டது.

இந்நிலையில், டாக்டர் இளங்கோவனை ஆதரித்து முதல்வர் கே.பழனிசாமி அண்மையில் திருச்சி தொகுதியில் பிரச்சாரம் செய்தார். அவர் வந்து சென்றபிறகு, அதிமுகவினர் மத்தியில் எழுச்சி ஏற்பட்டுள்ளது. முதல்வரின் அறிவுறுத்தலால், தேமுதிகவுக்கு ஆதரவாக அதிமுகவினர் பிரச்சார பணிகளை துரிதப்படுத்தியுள்ளனர். இதனால், மகிழ்ச்சியடைந்துள்ள தேமுதிக வேட்பாளர், அதிமுகவின் வாக்கு வங்கியைநம்பி பிரச்சாரத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளார்.

அமமுகவின் வேட்பாளர் பட்டியலில் முறைப்படி தனது பெயர் அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே தொகுதியில் களப்பணியைத் தொடங்கியவர் சாருபாலா. ஏற்கெனவே 2 முறை தோல்வியுற்றதால் இம்முறை வெற்றி பெற்றாக வேண்டும் என்ற முனைப்பில் பிரச்சாரத்தைத் தொடங்கிய இவருக்கு சின்னம் ஒதுக்கீட்டில் தாமதம் ஏற்பட்டது பின்னடைவாக கருதப்பட்டது. மேலும், புதிதாக அளிக்கப்பட்ட ‘பரிசுப் பெட்டகம்' சின்னத்தை கிராமப்புற மக்களிடம் கொண்டு சேர்ப்பதும் சவாலாக விளங்கியது.

இந்தச் சூழலில் தனியார் அமைப்பினர் வெளியிட்ட கருத்துக்கணிப்பில் சாருபாலாவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்ததாலும், டிடிவி.தினகரனின் பிரச்சாரத்துக்கு அதிகளவில் கூட்டம் குவிந்ததாலும் அக்கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர். மேலும், அமமுக நடத்திய சர்வேயில் புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை தொகுதிகளில் அதிக வாக்குகளைப் பெற்றால் வெற்றி பெறலாம் என தெரியவந்ததால், அதற் கேற்ப தற்போது பிரச்சார வியூகத்தை வகுத்துள்ளனர். இதன்படி, புதுக்கோட்டை மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த சாருபாலா வின் மகள் ராதா நிரஞ்சனாவை 'இளவரசி' என்ற அடைமொழியுடன் பிரச்சாரத்தில் களமிறக்கி, அப்பகுதியிலுள்ள பெண்களை குறிவைத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து அரசியல் நோக்கர்கள் கூறும்போது, “திருச்சி தொகுதியில் காங்கிரஸ், அமமுக, தேமுதிக என 3 கட்சிகளுக்கும் கணிசமான அளவு ஆதரவு காணப்படுவதால் மும்முனை போட்டி நிலவுகிறது. இந்த 3 வேட்பாளர்களுக்குமே செல்லுமிடங்களில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. ஆனால், அவை வாக்குகளாக மாறுமா எனத் தெரியவில்லை. எனவே, வாக்காளர்களின் மனநிலையை கணிக்க முடியாமல் வேட்பாளர்கள் தவித்து வருகின்றனர். இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் யார் சிறப்பாக செயல்படுகிறார்களோ, அவர்களுக்கே வெற்றி வாய்ப்புள்ளது” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x