Last Updated : 08 Apr, 2019 06:19 PM

 

Published : 08 Apr 2019 06:19 PM
Last Updated : 08 Apr 2019 06:19 PM

சித்திரைத் திருவிழா நேரத்தில் தேர்தல்; மதுரையில் வாக்குப்பதிவு அதிகரிக்க துண்டுப் பிரசுரம், விழிப்புணர்வு ஏற்படுத்தக் கோரிக்கை

மதுரையில் முத்திரை பதிக்கும் சித்திரைத் திருவிழா மதுரை மட்டுமின்றி தென்மாவட்ட மக்களை வெகுவாக கவரும். ஆண்டுதோறும் இத்திருவிழாவுக்கான கொடியேற்றம் முதலே விழாக்கோலம் பூண்டுவிடும். அந்தளவுக்கு சித்திரைத் திருவிழாவுக்கு மதுரை மக்கள் முக்கியத்துவம் கொடுப்பர். 5 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் பொதுத்தேர்தல் சித்திரைத் திருவிழா நேரத்தில் பெரும்பாலும் வருவதில்லை.

மே மாதத்தில் நடக்கும். இவ்வாண்டுதான் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தன்று ஓட்டுப்பதிவு நடக்கிறது. மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் உட்பட தென் மாவட்டங்களைப் பொறுத்தவரையில் ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் சித்திரைத் திருவிழாவுக்கு மக்கள், பக்தர்கள் முக்கியத்துவம் அளிப்பார்கள். இச்சூழலால் மதுரை உட்பட சில மாவட்டத்தில் ஓட்டுப் பதிவு சதவீதம் குறைய வாய்ப்புள்ளது என, கருதப்படுகிறது.

ஓட்டுப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க, தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் தொடங்கியது முதல் ஓட்டுப்பதிவு வரையிலும் திருவிழா கூட்டங்களில் பக்தர்களிடம் ‘‘ஜனநாயக கடமையாற்றவேண்டும்’’ என்பதை வலியுறுத்தி துண்டுப் பிரசுங்களை விநியோகிக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து வழக்கறிஞர் முத்துக்குமார் கூறுகையில், ''உள்ளூர் மக்களின் முக்கியத்துவம் திருவிழாக்களில் இருக்கும். மதுரை சிறப்புகளில் சித்திரைத் திருவிழாவும் ஒன்று என்பதால் இந்நேரத்தில் மக்களவைத் தேர்தலில் ஆர்வம் காட்டுவர். ஏற்கெனவே கூடுதலாக இரண்டு மணி நேரம் வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிப்பு செய்துள்ளது. இருப்பினும், மதுரை நகரில் நகரில் வாக்குப்பதிவை அதிகரிக்க, தேர்தல் ஆணையம் கூடுதல் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

சித்திரைத் திருவிழா இன்று (ஏப்.8) தொடங்குகிறது. கொடியேற்றம் முதல் மாசி வீதிகளில் சுவாமி வீதி உலா, திருக்கல்யாண போன்ற நிகழ்ச்சிகளை காணும் மக்களிடம்  இவர்களிடம் தேர்தலில் தங்களது ஜனநாயகக் கடமையைப் பதிவிட விழிப்புணர்வு பிரச்சாரம், துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கவேண்டும். மக்கள் அதிமாக கூடும் இடங்களில் பிரச்சார வாகனங்களை நிறுத்த வேண்டும். தொகுதிக்கு முழுக்க, 100 சதவீத வாக்குப்பதிவுக்கு தேர்தல் ஆணையம்  ஏற்பாடுகள் செய்ய வேண்டும்'' என்றார்.

தேர்தல் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ஏற்கெனவே மதுரையில் வாக்குச்சாவடிகளுக்கு சென்று ஓட்டு போடுவது பற்றி கல்லூரிகள், தொழில் கூடங்கள் மற்றும் சட்டப் பேரவை தொகுதிகளில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளோம். திருவிழா கூட்டத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த முடியுமா என, தேர்தல் நடத்தை விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.                 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x