Published : 03 Apr 2019 08:23 PM
Last Updated : 03 Apr 2019 08:23 PM
தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு போன் செய்தால் எடுப்பதில்லை, வாட்ஸ் அப்புக்கும் பதில் அளிப்பதில்லை, அரசியல் தலைவர்களுக்கே இந்த நிலையா? என மத்திய தேர்தல் கூடுதல் ஆணையரிடம் கராத்தே தியாகராஜன் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.
தமிழக தேர்தல் அதிகாரியாக இருந்தவர் ராஜாஷ் லக்கானி. அவர் இருந்த காலத்தில் நடைபெற்ற தேர்தல் நேரங்களில் முறையாக அனைவர் போன் கால், வாட்ஸ் அப் மெசேஜுக்கு பதிலளித்துவந்தார். அனைத்து பத்திரிகையாளர்களை கொண்ட ஒரு வாட்ஸ் அப் குரூப்பை அவர் உருவாக்கி அதன்மூலம் ஒரு ஒருங்கிணைப்பை கொண்ட அதிகாரியாக விளங்கினார்.
அவருக்குப்பின் வந்த சத்ய பிரதா சாஹு முறையான தகவல் பரிமாற்றம் செய்வதில்லை என்கிற குறைப்பாடு உள்ள நிலையில் தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் தங்கள் குறைபாடுகளை, சந்தேகங்களை, புகார்களைச் சொல்ல தமிழக தலைமை தேர்தல் அதிகாரியைத்தான் நாடுவார்கள். ஆனால் அவர் போனை எடுப்பதில்லை என்கிற குறைபாடு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று தமிழகம் வந்த மத்திய தேர்தல் ஆணையர்கள் அரசியல் கட்சித்தலைவர்களை சந்தித்தனர். அரசியல் கட்சித்தலைவர்கள் தனித்தனியாக சந்தித்து தங்கள் புகார்கள், கோரிக்கைகளை வைத்தனர். இதில் காங்கிரஸ் சார்பில் கலந்துக்கொண்ட கராத்தே தியாகராஜன் கூடுதல் ஆணையரிடம் தமிழக தலைமை அதிகாரி சத்ய பிரதா சாஹு குறித்து புகார் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
தான் போன் செய்தால் போனை எடுப்பதில்லை, வாட்ஸ் அப்பில் மெசேஜ் செய்தாலும் அதற்கும் பதில் அளிப்பதில்லை, வாட்ஸ் அப் காலில் அழைத்தாலும் பதிலளிப்பதில்லை என்று கூறினார். பொதுமக்கள் போன் செய்தால் அதிகாரி போன் எடுக்கமாட்டார் சரி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் போனைக்கூட அட்டெண்ட் செய்யவில்லை என்றால் எப்படி என்று கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.
நான் துணை மேயராக இருந்தவன், தேசிய கட்சியின் பிரதிநிதி எனது போனைக்கூட எடுக்க மறுத்தால் அது என்ன நடைமுறை என்று கராத்தே தியாகராஜன் அப்போது அருகில் சத்ய பிரதா சாஹு இருந்துள்ளதாகவும், அவர் எதுவும் சொல்லாமல் மவுனமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து செய்தியாளர்கள் கராத்தே தியாகராஜனிடம் கேட்டபோது அவர் அதை மறுக்கவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT