Published : 18 Apr 2019 05:56 PM
Last Updated : 18 Apr 2019 05:56 PM
புதுச்சேரியில் பெண்களே முழுக்க நிர்வகிக்கும் 7 வாக்குச்சாவடிகளில் ஆண்கள், பெண்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர். இதைக் கேள்விப்பட்ட வாக்காளர்கள் வியப்புடன் வாக்களித்தனர்.
புதுச்சேரியில் 7 வாக்குச்சாவடிகள் பெண் அதிகாரிகளால் நிர்வகிக்கப்பட்டது. இங்கு 35 பேர் வரை பெண்களே பணிபுரிந்தனர். பெண்களே முழுக்க நிர்வகித்த வாக்குச்சாவடிகளில் சுல்தான்பேட்டை காயிதே மில்லத் அரசு மேனிலைப்பள்ளி, லாஸ்பேட்டை குளூனி, முத்தியால்பேட்டை வாசவி பள்ளி, லாஸ்பேட்டை டி.ஐ.இ.டி. நயினார் மண்டபம் அன்னை தெரசா மேனிலைப்பள்ளி, சத்தியா நகர் ஆதித்ய வித்யாசரம், காரைக்கால் அவ்வையார் பெண்கள் கல்லூரி மையங்களில் ஆண்களும், பெண்களும் ஏராளமானோர் வரிசையில் நின்று வாக்களித்தனர்.
வாக்காளர் மையத்துக்கு வெளியே பெண்களே நிர்வகிக்கும் வாக்குச்சாவடி என்று பேனர் கட்டப்பட்டிருந்தது. பெண்களே நிர்வகித்த வாக்குச்சாவடியில் பணிபுரிந்த அதிகாரிகள் தரப்பில் பேசியபோது, "பெண் காவலர்கள் தொடங்கி பெண்களே முழுக்க வாக்குச்சாவடிகளை நிர்வகிக்கும் இடத்தில் பணிபுரிவது மகிழ்ச்சி. அருகருகே வாக்குச்சாவடி இருந்தாலும் முழுக்க பெண்களை தேர்தல் நிகழ்வில் தனி வாக்குச்சாவடிகளில் பணியாற்றுவது புதிய விஷயமாக உள்ளது" என்று குறிப்பிட்டனர்.
வரிசையில் நின்றிருந்த பெண்களிடமும், ஆண்களிடமும் இது பெண்களே நிர்வகிக்கும் வாகுச்சாவடி என்பது தெரியுமா என்று கேட்டதற்கு "அப்படியா" என்று வியப்புடன் கேட்டனர். பணிபுரிந்த பெண்களுக்கு வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT