Published : 01 Apr 2019 09:09 AM
Last Updated : 01 Apr 2019 09:09 AM
மக்களவைத் தேர்தலுக்கான எவ்வித ஆரவாரமும் இல்லாமல் அமைதியாக உள்ளது மலை மாவட்டமான நீலகிரி. சமவெளிப் பகுதியில் மட்டுமே தற்போது பிரச்சாரம் மும்முரமாக நடக்கிறது.
மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி, வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலும் வெளியிடப்பட்டு விட்டது.ஏப்ரல் 18-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ள நிலையில் அனைத்து இடங்களிலும் தேர்தல் பிரச்சாரம் களை கட்டத் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் நீலகிரி மக்களவைத் தொகுதியில் தான் மிகக் குறைவான எண்ணிக்கையில் 10 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதிலும் பெண் வேட்பாளர்கள் யாரும் இல்லை. 10 வேட்பாளர்களில் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் 5 பேரும், சுயேச்சைகள் 2 பேரும் நீலகிரி மாவட்டத்தோடு நேரடியாக தொடர்பில் இல்லாதவர்கள்.
அதிமுக வேட்பாளர் எம்.தியாகராஜன் திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதியையும், திமுக வேட்பாளர் ஆ.ராசா பெரம்பலூர் மாவட்டத்தையும், அமமுக வேட்பாளர் எம்.ராமசாமி சென்னை யையும், மநீம கட்சி வேட்பாளர் நா.ராஜேந்திரன் கோவை மாவட்டம் சிங்காநல்லூரையும், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் அசோக்குமார் கோவை மாவட்டம் ரேஸ்கோர்ஸ் பகுதியையும் சேர்ந்தவர்கள்.
சுயேச்சை வேட்பாளர்களான ஆறுமுகம் திருப்பூர் மாவட்டம் அவிநாசியையும், நாகராஜன் கோவை மாவட்டம் வையம்பாளை யத்தையும் சேர்ந்தவர்கள். எஞ்சியுள்ள 3 சுயேச்சை வேட்பாளர்களில் சுப்பிரமணி குந்தா வட்டத்தையும், ராஜரத்தினம் குன்னூர் வட்டத்தையும், கி.ராஜா உதகையையும் சேர்ந்தவர்கள்.
இந்த முறை ஆ.ராசாவைத் தவிர அனைவரும் புதுமுகங்கள். அதனால், நீலகிரி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் இன்னமும் சூடு பிடிக்கவில்லை. நகரப் பகுதி களுக்கு மட்டும் வேட்பாளர்கள் வந்து சென்றுள்ள நிலையில் கிராமப் பகுதிகளிலும், தொலைதூர எல்லையோர பகுதிகளிலும் மக்களவைத் தேர்தலுக்கான அறிகுறிகளே தென்படவில்லை. அத்துடன் வேட்பாளர்கள் குறித்து கூட பெரும்பாலானவர்களுக்கு தெரியவில்லை.
நீலகிரி தொகுதியில் போட்டி யிடும் அனைத்து முக்கிய வேட்பாளர்களுமே இந்த தொகுதிக்கு உட்பட்ட சமவெளிப் பகுதிகளான மேட்டுப்பாளையம், அவிநாசி மற்றும் பவானிசாகர் சட்டப்பேரவை தொகுதிகளையே குறி வைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதால் ஒலிபெருக்கி சத்தம் கூடகேட்காமல் மலை மாவட்டத்தின் நகரப் பகுதிகள் மிக அமைதியாக காணப்படுகின்றன.
60 சதவீத வாக்குகள் சமவெளிப் பகுதியில் இருப்பதால்,மலைப் பகுதிகளில் உள்ள வாக்குகள் குறித்து வேட்பாளர்களும் அதிகள வில் கவலைப்படாமல், தேர்தல் பணிகளைக்கூட கட்சிகளின் உள்ளூர் நிர்வாகிகளைக் கொண்டே செயலாற்றி வருகின்றனர். தலைவர்கள் வருகையின்போது தான், இங்கு பிரச்சாரம் சூடு பிடிக்கும் என உள்ளூர் கட்சியினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT