Published : 28 Sep 2014 04:27 PM
Last Updated : 28 Sep 2014 04:27 PM
கர்நாடகா சிறையில் அடைக்கப்பட்ட அதிமுக தலைவர் ஜெயலலிதாவை ஜாமீனில் விடுவிக்க நாளை (திங்கட் கிழமை) கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனு செய்யவுள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.
மேலும், ஜெயலலிதா வழக்கறிஞர்கள் குழு, தண்டனையை தடை செய்யக் கோரும் உத்திகளை பரிசீலித்து வருகின்றனர்.
”நாங்கள் நாளை கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்கிறோம்” என்று ஜெயலலிதாவின் மூத்த வழக்கறிஞர் பி.குமார் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
திங்களன்று மனு செய்தாலும் உயர் நீதிமன்றத்தின் விடுப்பு அமர்வு செவ்வாயன்றே மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் என்று தெரிகிறது. ஏனெனில் உயர் நீதிமன்றம் தற்போது தசரா விடுமுறை நாளில் உள்ளது. செப்.29 முதல் அக்டோபர் 6ஆம் தேதி வரை தசரா விடுமுறை.
ஜெயலலிதாவை உடனடியாக வெளியே கொண்டு வர வழக்கறிஞர்கள் குழாம் சட்ட உத்திகளுக்கும், வாதங்களுக்கும் இறுதி வடிவம் கொடுத்து வருகின்றனர்.
தண்டனை 3 ஆண்டுகளுக்கு மேல் விதிக்கப்பட்டுள்ளதால் உயர் நீதிமன்றமே ஜாமீன் அளிக்க முடியும்.
வழக்கறிஞர்கள் கையில் உள்ள ஒரு ஆயுதம், கிரிமினல் ரிவிஷன் பெடிஷன் ஆகும். இந்த மனுவைச் செய்தால் தண்டனை மற்றும் குற்றம் என்ற தீர்ப்பிற்கும் தடை வாங்கி விடலாம் என்று கணக்கிட்டு வருகின்றனர்.
ஒருவேளை உயர் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தால் எம்.எல்.ஏ. பதவி தகுதி இழப்பு என்பது ஒன்றுமில்லாமல் ஆகிவிடும். ஆனால் உயர் நீதிமன்றங்கள் ஊழல் வழக்கில் பொதுவாக ஸ்டே ஆர்டர் கொடுக்காது என்றே கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி எம்.எல்.ஏ. அல்லது எம்.பி. ஆகியோர் வழக்கு ஒன்றில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு விட்டாலே அவரது பதவி தானாகவே தகுதி இழப்பு அடைந்து விடும். இதற்கு முன்பு இவ்வகை தீர்ப்பிற்கு பின்பு 3 மாதங்களுக்குள் மேல்முறையீடு செய்து தகுதி இழப்பை முறியடிக்கலாம். ஆனால் அது இப்போது முடியாது.
இந்த நிலையில் ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கள் இந்த வழக்கு தீர்ப்பின் நகலைப் பெற்று அதை வைத்து விவாதித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT