Published : 02 Apr 2019 09:20 PM
Last Updated : 02 Apr 2019 09:20 PM

ரஜினிக்கு ஒரு பாசமலர், காவல்துறைக்கு ஒரு மைல்கல் படம்: மகேந்திரனின் வித்தியாச ஆளுமை

பாலச்சந்தர் ரஜினிக்கு பல படங்கள் கொடுத்தாலும் வித்தியாசமான பாத்திரத்தை ரஜினிக்கு அளித்து பேச வைத்தவர் மகேந்திரன், காவல்துறையில் உள்ளவர்களின் பிரச்சினையை பேசவைத்த வித்தியாசமான கதையை சிவாஜிக்காக உருவாக்கியவர் மகேந்திரன்.

‘கெட்டப்பய சார் இந்த காளி’ ஒரு கை இல்லாத கதாநாயகன் வில்லன்போல் பேசும் காட்சியை அமைக்க யாருக்கு துணிச்சல் வரும். அதுவும் அந்த நேரத்தில் கதாநாயக அந்தஸ்த்துக்கு உயரும் நிலையில் உள்ள ரஜினிக்கு அந்தப்பாத்திரம் இதுவரை இல்லாத ரஜினியை பேச வைத்தது.

ஒரு கதாநாயகன் கையை இழந்து ஒரு கையுடன் படத்தில் வளைய வரும் காட்சிக்கு ரஜினி ஒப்புக்கொண்டாலும் அவரது ரசிகர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஆனால் ரஜினி ஒப்புக்கொண்டதற்கு காரணம் மகேந்திரன் மீதுள்ள நம்பிக்கை. அது ரஜினியை எங்கோ கொண்டுச் சென்றது. என்னை இன்னொரு ரஜினியாக எனக்கு காட்டியவர் மகேந்திரன் என ரஜினி குறிப்பிடக்காரணம் இந்த படம்தான்.

பாலச்சந்தர் ஒரு விழாவில் ரஜினியை நேர்க்காணல் செய்தார் அப்போது உனக்குப் பிடித்த இயக்குனர் யார் என்று கேட்டபோது ரஜினியின் குருவான பாலச்சந்தரைத்தான் அவர் சொல்வார் என எல்லோரும் எதிர்ப்பார்த்தபோது ரஜினி சொன்னப்பெயர் மகேந்திரன்.

சிவாஜிக்கு ஒரு பாசமலர் என்றால் ரஜினிக்கு முள்ளும் மலரும். இது வித்தியாசமான பாசமலர். கிராமத்து முரட்டு இளைஞன் எப்படி இருப்பான் என ரஜினியின் ஒவ்வொரு அணுவிலும் நடிக்க வைத்திருப்பார். முள் ரஜினி, மலர் ஷோபா அதை அழகாக காட்சிப்படுத்தியிருப்பார் பாலு மகேந்திரா.

தான் வெறுக்கும் நபரை விரும்பும் தங்கை, கடைசியில் அனைவரும் தன்னைவிட்டு ஒதுங்கிப்போக தங்கை மட்டும் ஓடிவந்து அணைத்துக்கொள்ள சரதபாபுவை ஒரு வித்தியாச பார்வை பார்த்துவிட்டு தங்கைக்காக அவரை சரத்பாபுவுடன் அனுப்புவார் ரஜினி. இந்தப்படம் ஒரு வித்தியாசமான பாசமலர் கதைதான்.

அதேபோன்று வாத்தியார் பிள்ளை மக்கு, போலீஸ்காரன் மகன் திருடன் என்கிற வழக்கமான சொல்லாடலை வைத்து உருவாக்கப்பட்ட படம்தான் தங்கப்பதக்கம். நாடகமாக பலமுறை மேடையேறிய தங்கப்பதக்கத்தை பார்த்த சிவாஜி அதை படமாக்கியபோது கதை காட்சிகளை சொல்லவந்த மகேந்திரனிடம் ‘போடா எனக்குள்ளே அத்தனைக்காட்சிகளும் ஊறிப்போய்விட்டது, இவன் காட்சியை சொல்கிறானாம்’ என சொன்னதாக கூறுவார்கள்.

சிவாஜிகணேசனுக்கும், காவல்துறைக்கும் பெருமைச் சேர்த்தப்படம் தங்கப்பதக்கம். போலீஸார் ஒவ்வொருவர் மனதிலும் ஒரு தங்கப்பதக்கம் சிவாஜி கணேசனை ஆதர்ச நாயகனாக மாற்றியவர் மகேந்திரன். 1974-ம் ஆண்டு வெளியான தங்கப்பதக்கம் படத்தில் சிவாஜியை நீண்ட வசனம் பேசவிடாமல் காட்சி அமைப்பினாலேயே நடிக்கவைத்து மற்றவர்களை ரசிக்க வைத்திருப்பார்.

அதில் திறமையானவர் மகேந்திரன். அதற்கு உதாரணம் கே.ஆர்.விஜயா எப்போதும் யூனிபார்மில் வரும் சிவாஜியுடன் பேசமாட்டார். முதலில் யூனிபார்மை கழற்றிவிட்டு வாருங்கள் என்பார். இந்தக்காட்சியின் தொடர்ச்சியை கடைசிக்காட்சியில் வைத்திருப்பார் மகேந்திரன்.

அலுவலகத்தில் பதவி உயர்வை சந்தோஷப்பட சில நிமிடங்கள்கூட வாய்ப்புக்கொடுக்காமல் அடுத்து ஒரு போன்கால் வரும். மேலதிகாரி அதை பேசிவிட்டு ஒரு வருத்தமான விஷயம் உங்கள் மனைவி இறந்துவிட்டார் என தெரிவிப்பார். அடுத்தக்கணம் சிவாஜி நான் போகலாமா சார் என அனுமதி கேட்பார். அதிகாரி வருத்ததுடன் ப்ளீஸ் என்பார்.

வீட்டுக்குள் நுழையும் சிவாஜியை அனைவரும் அழுகையுடன் வரவேற்பார்கள். நிசப்தமாக காட்சி நகரும். யூனிபார்மை கழற்றிவிட்டு படுக்கையில் கிடத்தப்பட்டுள்ள கே.ஆர்.விஜயாவை நோக்கி மெல்ல நடந்து வருவார் சிவாஜி. இனி தன் மனைவி இல்லை என்ற வருத்தம் முகம் முழுதும் இருக்கும். பக்கத்தில் நின்று அழுத்தமாக ஒரு பார்வை பார்ப்பார்.

லட்சுமி நான் வந்து ரொம்பநேரமாச்சு. ஏன் ஒண்ணுமே பேசமாட்டேங்கிறே?’ என்று கேட்பார். ‘நான் யூனிஃபார்ம்ல இருந்தாத்தான் எங்கிட்ட பேச பயப்படுவே. இதோ பார், யூனிஃபார்ம் இல்லாம வந்திருக்கேன்’னு சொல்வார். பேசு ஏன் என்கிட்ட பேச மாட்டேங்கிற எனக்கேட்டு அப்படியே உடைந்து கதறுவார். இது அனைவராலும் அப்போது பெரிதாக பேசப்பட்டது.

இன்னொரு காட்சியில் தன் மகன் ஸ்ரீகாந்தையே கைது செய்யும் சூழல், வித்தியாசமாக பொறி வைத்து பிடிப்பார். அன்று ஸ்ரீகாந்த் பிறந்தநாள் கைதுக்குப்பின் வீடே இருளடைந்து கிடக்கும். சிவாஜிக்கு வீட்டுக்கு திரும்புவார். ஏன் இன்னும் சாப்பிடாம இருக்கீங்க என அழுதபடி இருக்கும் மனைவியையும், மருமகளையும் கேட்பார்.

இருவரையும் டைனிங் ஹாலில் அமரவைத்த அவர் சோறு பரிமாறுவார். சாப்பிடுங்கள் என்பார். இருவருக்கும் சிவாஜிமீது கோபம் இருக்கும். இருவரும் சொல்லிவைத்தாற்போல் ஒரு நாள் சாப்பிடவில்லை என்றால் உயிரா போய்விடும் என்று கேட்பார்கள்.

சிவாஜி மவுனமாக எதிரில் உள்ள நாற்காலியில் அமர்வார். லட்சுமி நான் என்ன தப்பு செய்தேன், என் கடமையைத்தானே செய்தேன்.  ஒவ்வொரு முறை குற்றவாளிகளை கைது செய்யும்போதும், ரிவார்டு வாங்கும்போதும் நீ சந்தோஷப்படுவாய் பெருமைப்படுவாய். காரணம் அவர்கள் யாரும் உன் சொந்தங்கள் இல்லை. ஆனால் இன்று நம் வீட்டிலேயே ஒரு குற்றவாளிய பிடிச்சவுடன் என்னை எல்லோரும் எதிரியா பார்க்கிறீங்க. காரணம் அவன் உனக்கு மகன், இவளுக்கு கணவன். ஆனால் நீங்க ரெண்டுபேரும் ஒரு விஷயத்தை மறந்துட்டீங்க அவன் எனக்கும் மகன்தான் என்று தழுதழுத்த குரலில் சொல்வார்.

தான் கணவரை காயப்படுத்திவிட்டேன் என்று கே.ஆர்.விஜயா என்னங்க என்று அழுதபடி சாப்பிடுங்க என சிவாஜிக்கு பறிமாற போவார். ஒருநாள் சாப்பிடவில்லை என்றால் உயிரா போய்விடும் என்பார் சிவாஜி. ரசிகர்களால் விரும்பி பார்க்கப்பட்ட காட்சி என்றாலும், போலீஸ் அதிகாரி கடமை தவறாமல் இருந்தால் என்னவகையான மன அழுத்தங்களை சந்திப்பார் என உணர்த்திய காட்சி அது.

இப்படி பிரேமுக்கு பிரேம் அந்தப்படத்தில் சிவாஜியை போலீஸ் அதிகாரியாக வைத்து காட்சிகளை பிணைத்து செதுக்கியிருப்பார் மகேந்திரன். சிவாஜியின் வழக்கமான காட்சிகள் படத்தில் சில இடங்களில் இருந்தாலும் மகேந்திரனின் டச் படம் முழுதும் இருக்கும்.

வசனங்களும், காட்சி அமைப்பும் இன்றைய இளம் இயக்குனர்களுக்கு பாடம் எடுக்கும் படங்கள்தான் மேற்சொன்ன இரண்டு படங்களும். சினிமாவில் தேவையற்ற விஷயங்களை வெறுத்தவர், தவிர்த்தவர் மகேந்திரன். அதனால்தான் அவரது படங்கள் காலங்கடந்து நிற்கிறது. இதில் முடிவாக சொல்லவேண்டிய ஒன்று, புகழ்பெற்ற இயக்குனர் மகேந்திரன் இன்று நடித்துத்தான் காலந்தள்ள வேண்டி இருக்குது இயக்குனராக அல்ல என வந்தவர்களில் ஒருவர் சொன்னார்.

காலம் அந்த கலைஞனை இன்னும் சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பது ரசிகர்கள் பலரின் வருத்தம், அதை இங்கு பதிவு செய்துதான் ஆகவேண்டும்.

  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x