Published : 17 Apr 2019 09:09 AM
Last Updated : 17 Apr 2019 09:09 AM
மக்களிடம் நெருக்கமாகப் போயி ருப்பதால் இத்தேர்தலில் பெரிய மாற்றம் ஏற்படும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங் கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
தனது தேர்தல் பிரச்சார அனுபவம் குறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி:
பிரச்சாரக் களத்தில் மக்களிடம் எத்தகைய எழுச்சியைப் பார்த்தீர்கள்?
எங்களது தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடந்த இடங்களில் இளைஞர்கள், கட்சி சார்பற்ற மக்கள், நடுநிலையானவர்கள், பெண்கள் ஆகியோர் எழுச்சியுடன் வந்ததைக் காண முடிந்தது. மாற்றத்துக்கான அரசியல் எதிர்பார்ப்பு இருப்பது தெரிகிறது. தன்னெழுச்சியாக ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் எங்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.
கடந்த தேர்தலைவிட இத்தேர்த லில் எந்த அளவுக்கு மக்களின் அங்கீகாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறீர்கள்?
கடந்த தேர்தலில் மக்கள் எங்களுக்கு இன்னும் நிறைய வாக்குகள் செலுத்தியிருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தோம். அந்த தேர்தலில் மக்களிடம் அடையாளப்படாமல், அவர் களிடம் போய்ச்சேராமல் இருந் திருக்கலாம். ஆனால், கடந்த 3 ஆண்டுகளில் நிறையவே அடை யாளப்பட்டிருக்கிறோம். மக்க ளுக்கு நெருக்கமாக போயிருக் கிறோம். அதனால், இத்தேர்தலில் பெரிய மாற்றம் இருக்கும்.
கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத இத்தேர்தல் எப்படி இருக்கும்?
கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய ஆளுமைகள் இல்லாவிட்டாலும், அதே சின்னம், அதே காசு, அதே கட்டமைப்பு உள்ளது. ஆளை மாற்றி, ஆட்சியை மாற்றிப் பயனில்லை. அமைப்பை மாற்ற வேண்டும். ஒரு காலக்கட்டம் வரை மக்கள் பொறுத்திருப்பார்கள். படித்தால் வேலையில்லை, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற சூழலில் மக்கள் கொந்தளித்து வீதிக்கு வந்து புரட்சி செய்வார்கள். அந்தக் காலம் வெகுதொலைவில் இல்லை.
உங்களது அரசியல் பயணத்தின் நோக்கம்தான் என்ன?
தேசிய அளவில், மாநில அளவில் ஜனநாயகம் என்று சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள். அவர் களிடம் இருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும். அதைத் தான் ஒரு தவமாக செய்து கொண்டிருக்கிறோம். விவசாயி விதைக்கத்தான் முடியும். முளைப் பதும், விளைவதும் அது விதையின் வேலை. அதுபோலத்தான் சூழலியல் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். அவ்வளவுதான்.
இவ்வாறு சீமான் கூறினார்.
இந்நிலையில் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “நாம் தமிழர் கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ள கரும்பு விவசாயி சின்னம் வாக்குப்பதிவு இயந்திரத்தில் மிகச்சிறியதாகவும், மங்கலாகவும், எளிதில் புலப்படாத வகையிலும் அச்சிடப்பட்டுள்ளது. இதனால் எங்கள் கட்சிக்கு வாக்களிக்க விரும்பும் முதியவர்கள், படிக்காத பாமரர்கள் சின்னத்தைக் கண்டறிந்து வாக்களிப்பது மிகவும் கடினமானதாக இருக்கும். இது, ஆளும் அதிகார வர்க்கத்துக்கு அடிபணிந்து இந்தியத் தேர்தல் ஆணையம் நாம் தமிழர் கட்சிக்கு செய்துள்ள திட்டமிட்ட சதி” என்று குற்றம்சாட்டினார்.
பிரசாரத்தின் இறுதிநாளான நேற்று சென்னை தி.நகரில் சீமான் தனது இறுதிக்கட்ட பிரசாரத்தை நிறைவு செய்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT