Published : 04 Apr 2019 11:58 AM
Last Updated : 04 Apr 2019 11:58 AM
மக்களவை தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்கும் நிலையில் எல்லோரும் ஒட்டுமொத்தமாக மறந்த வெளிநாட்டில் (வாழும் அல்ல) வேலைபார்க்கும் தமிழர்கள் சார்பாக சில கோரிக்கைகள் என்று, பல்வேறு கோரிக்கைகளை வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகிறார்கள். அக் கோரிக்கைகளில் சில:
திருச்சியிலிருந்து சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகளுக்கு பட்ஜெட் கட்டண தனியார் மற்றும் அரசு விமான சேவைகள் அதிகரித்து வரும் நிலையில்,வளைகுடாநாடுகளிலிருந்தும் திருச்சி, கோவை மற்றும் மதுரைவிமான நிலையங்களைஇணைத்து நேரடி பட்ஜெட்மற்றும் ஏர் இந்தியாஎக்ஸ்பிரஸ் விமானசேவைகளைதொடங்கலாம்.
வளைகுடா இந்திய தொழிலாளிக்கும் எத்தனையோ பிரச்சனைகள், தான் பணிபுரியும் கம்பெனியுடன் ஏற்படத்தான் செய்கின்றன. ஆனால் அண்டை நாடான இலங்கை தூதரகத்துக்கும், தன் பிரஜைகளின் உரிமைகளுக்காக எந்நேரமும் வரிந்து கட்டும் பிலிப்பைன்ஸ் தூதரகத்துக்கும் இருக்கும் அக்கறையில் கொஞ்சம்கூட இந்திய தூதரகத்துக்கு இல்லை.
அனைத்து அரபு நாடுகளிலிருந்தும் மதுரை, திருச்சி, கோவை விமான நிலையங்களுக்கு தினசரி விமானம் இயக்க வேண்டும். தனியார் விமான நிறுவனங்களும் வருவாய் குறைந்த வழித்தடங்களில் சேவைகளை நிறுத்திவிட்டன.
விமான நிலையங்களில் வந்திறங்கினால் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு நாங்கள் திருடர்களாய் மட்டுமே தெரிகிறோம். நாய்கள் கடித்துக் குதறுவதுபோல் எங்கள் பொருட்களை சின்னாபின்னப்படுத்துகிறார்கள். வீட்டுத்தேவைக்கு கொண்டு வரும் பொருட்களுக்குத் தான் எத்தனை சோதனைகள்?, கட்டுப்பாடுகள்? இதை தடுத்து நிறுத்தப்போவது யார்?.
தமிழக அரசு வெளிநாடுவாழ் இந்தியருக்கு என தனியாக ஓய்வூதிய திட்டம், தனி இயக்ககம், கேரளாவில் உள்ளது போல் தனி அமைச்சகம் அமைக்க வேண்டும். தற்போது அனைத்து விமான நிலையங்களிலும், விமான சேவை நிறுவனங்களிலும் அனைத்து அறிவிப்புகளும் ஆங்கிலம் ஹிந்தியில் அறிவிக்கப்படுகிறது. தமிழில் அறிவிப்புகளை செய்ய வேண்டும்
தமிழக அரசின் வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவன பிரிவு அலுவலகத்தை மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி போன்ற நகரங்களில் அமைக்க வேண்டும். நாங்கள் 50 டிகிரி வெயிலில் நின்று வேலை செய்து அனுப்பும் காசை எங்கள் குடும்பங்கள் குடும்பச் செலவுக்காக வேண்டி வங்கியிலிருந்து எடுப்பதற்கு காலையில் சென்றால் மாலையில்தான் வீட்டுக்கு வரக்கூடிய நிலை உள்ளது. அதை நிவர்த்தி செய்வதற்கு அனைத்து தாலுகாவிலும் வெளிநாடுவாழ் இந்தியர்க்கு மட்டும் என தனி வங்கி பிரிவு அமைக்க வேண்டும்.
சொந்த பந்தங்களை காண ஆண்டுக்கு ஒரு மாதமோ அல்லது 2 ஆண்டுகளுக்கு இரு மாதமோ விடுமுறையில் வரும் நாங்கள் முன்பெல்லாம் அனைத்து நிறுவன விமானத்திலும் 40 கிலோ பயண பொதியை கொண்டு வர அனுமதிக்கப் பெற்றிருந்தோம். இப்போது அதிலும் கை வைத்து 10 கிலோவை குறைத்து விட்டார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT