Published : 09 Apr 2019 07:14 PM
Last Updated : 09 Apr 2019 07:14 PM
மக்களுக்கான வளர்ச்சி என்று அரசு அறிவித்த திட்டத்தை அப்பகுதி விவசாயிகளே எதிர்ப்பது அரசுக்கு எவ்வளவு பெரிய அவமானம்? அதுதான் சென்னை முதல் சேலம் வரையிலான 8 வழிச்சாலைக்கு நடந்தது.
எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லை, சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி பெறவில்லை. மக்களிடம் கருத்து கேட்கவில்லை. எட்டு வழிச் சாலை என்ற பெயரில் சேலம் - சென்னை இடையே ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில், 277 கிமீ தொலைவுக்கு பசுமைச் சாலை அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்தன. 7500 ஹெக்டேர் விளைநிலங்கள், 8 மலைகள், நூற்றுக்கணக்கான கிணறுகள், குளங்கள் இத்திட்டத்துக்காக கையகப்படுத்த அரசு திட்டமிட்டது. லட்சக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டு, பல்வேறு பள்ளிகள், அங்கன்வாடிகள், மருத்துவமனைகள், வழிபாட்டு இடங்கள், குடியிருப்புகள் காணாமல் போகும் அபாயம் இருந்தது.
பள்ளி செல்லும் சிறுவர்கள் தொடங்கி தோல் சுருங்கி, நடை தளர்ந்த மூதாட்டி வரை அனைத்து மக்களுமே இத்திட்டத்தைக் கடுமையாக எதிர்த்தனர். இதை எதிர்த்து அரசியல் கட்சிகளுடன் விவசாயப் பெருமக்களும் வழக்கு தொடர்ந்தனர். கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக நடந்த வழக்கு விசாரணையில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வு, நிலம் கையகப்படுத்தியது செல்லாது என தெரிவித்து, 8 வழிச்சாலை திட்ட அரசாணையையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
வழக்கின் தீர்ப்பு எப்படிப் பார்க்கப்படுகிறது என்பது குறித்து வழக்காடு மன்றம் சென்றவர்களில் ஒருவரான பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜனிடம் பேசினோம்:
''உறுதியுடன் போராடிய மக்களுக்குக் கிடைத்த முதல் வெற்றி இது. திட்டத்துக்கான தேவை, அதைச் செயல்படுத்தும் வழிமுறை, மக்கள் நலன், பொருளாதாரப் பார்வை என எதையுமே ஆராயாமல் தன்னிச்சையாக முடிவெடுத்த அரசுக்குக் கிடைத்த அடி என்றும் சொல்லலாம். திமுக, பாமக, அமமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் மக்களின் உணர்வுகளைப் புரிந்து, எட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பான நிலைப்பாடையே எடுத்துள்ளன.
இப்போதாவது ஆளும் அதிமுக அரசு ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். தமிழகத்தில் ஏராளமான தொழில் நகரங்கள் உள்ளன, சென்னை, கோவை, திருப்பூர், ஓசூர், கடலூர், சிவகாசி என அங்குள்ள அனைத்து தொழிற்சாலைகளுமே நான்கு வழிச்சாலைகள் வருவதற்கு முன்பே உருவானவை. தமிழகத்தில் மிதமிஞ்சிய மனித வளம், மதச்சண்டை இல்லாதது, வேலையில் அர்ப்பணிப்பு, கணிதம் மற்றும் அறிவியலில் ஸ்ட்ராங்கான மக்கள் இருப்பதுதான் இங்கு ஐடி நிறுவனங்களும் தொழிற்சாலைகளும் வரக்காரணம்.
இவற்றை எண்ணிப் பார்த்து, மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு தமிழக அரசு இத்திட்டத்தைக் கைவிடவேண்டும். இல்லையெனில் அரசின் நடவடிக்கைக்குத் தகுந்த வகையில் எங்களின் சட்ட நடவடிக்கை இருக்கும்'' என்கிறார் சுந்தர்ராஜன்.
உயிரே போனாலும் நிலத்தை விட்டுக் குடுக்க மாட்டோம்: சிவகாமி, விவசாயி
எட்டுவழிச் சாலையை உணர்வுபூர்வமாக எதிர்த்தவர்கள் இல்லையில்லை எதிர்ப்பவர்கள் 5 மாவட்ட விவசாயிகள். அரசிடம் நீதி மறுக்கப்பட்ட நிலையில் 8 மாதங்களாக வழக்காடு மன்றத்தில் கால் கடுக்கக் காத்திருந்தனர். தீர்ப்பைக் கேட்ட விவசாயிகள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். அரசு சார்பில் தங்களின் நிலத்தில் நடப்பட்டிருந்த அளவீட்டுக் கற்களைப் பிடுங்கித் தூரமாக வீசினர். பூமிக்குக் கற்பூரம் காட்டி வழிபட்டனர். சில விவசாயிகள் நிலத்தைத் தொட்டு வணங்கிக் கண்ணீர் விட்டனர்.அவர்களில் ஒருவரான ராமலிங்கபுரத்தைச் சேர்ந்த சிவகாமி தன்னுடைய உணர்வுகளை நம்முடன் பகிர்ந்துகொண்டார்.
''ரொம்ப சந்தோசமாக இருக்குதுங்க. இது எங்களுக்கு மட்டும் கிடைச்ச வெற்றி இல்ல. 5 மாவட்ட விவசாயிகளுக்கும் கிடைச்ச வெற்றி. பச்சை பூமிய அதிகாரத்தால அழிக்க பார்த்தாங்க. ஆனா எங்க கண்ணீருக்கும் போராட்டத்துக்கும் கோர்ட் நல்ல வழியை காமிச்சிருச்சு.
எடப்பாடி பழனிசாமி சேலம் வரும்போதெல்லாம் எட்டுவழிச்சாலை போடுவேன்னு சொன்னாரு. ராத்திரி பகலா போலீஸ் எங்கள காவல் காத்துச்சு. 4 பேர் சேர்ந்தாப்ல கூட பேசக்கூடாது; பார்க்கக் கூடாது. மீறுனா அரெஸ்ட் பண்ணுவாங்க. சிபிஐ கூட காவல் இருந்தாங்க.
எங்களுக்கு சொந்தமா ரெண்டு ஏக்கர் நிலம் இருக்குது. தென்னந்தோப்பு வச்சு, மிச்சத்துல கம்பு, சோளம் போட்ருக்கோம். அவரு, 2 குழந்தைங்க, மாமனார், மாமியார் சொந்தக்காரங்கன்னு பெரிய குடும்பம். நெலத்தை மட்டுந்தான் நம்பியிருக்கோம். அதையும் அரசாங்கமே பிடுங்கிட்டா எங்கோ போறது?
ஏற்கனவே 2010-ல சேலம் - உளுந்தூர்பேட்ட (NH 68) ரோட்டுக்காக, ஒண்ணேகால் ஏக்கரைக் குடுத்தோம். அதுக்கு இன்னிக்கு வரைக்கும் சரியான இழப்பீடு குடுக்கல. அந்த ரோடுனால மக்களுக்கு பயன் கிடைக்கும்னு தெரிஞ்சு மனசாரத்தான் விவசாய நெலத்த விட்டுக்குடுத்தோம். ஆனா இந்தத் திட்டம் அப்படியில்ல. அடாவடியா, அதிகாரம் பண்ணி நெலத்த பறிக்கப் பாத்தாங்க.
எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்துக்கு போற இடத்துல எல்லாம் நான் விவசாயி, விவசாயின்னு சொல்றார். ஆனா எங்களுக்காக எதுவுமே செய்யல. உண்மைலயே அவர் ஒரு விவசாயியா இருந்தார்னா கண்டிப்பா மேல்முறையீட்டுக்குப் போகமாட்டாரு'' என்கிறார் சிவகாமி.
தொடர்ச்சியாகப் போராட்டங்களில் கலந்துகொள்கிறீர்களே, குடும்பத்தினர் ஆதரவு அளிக்கின்றார்களா, கணவரும் உடன் வருகிறாரா என்று கேட்டால் சிரிக்கிறார். ''அவரும் வந்துட்டார்னா சாப்பாட்டுக்கு என்ன பண்றதுங்க? அவர் வேலைக்குப் போய்ருவாரு. வீட்டுல இருக்கற பொம்பளைங்கதான் வெளிய வந்து போராடுறோம். எதையும் சந்திக்கத் தயாரா இருக்கோம். உயிரே போனாலும் நெலத்தை விட்டுக்குடுக்க மாட்டோம்'' என்று உறுதியுடன் சொல்கிறார் சிவகாமி.
கேவியட் மனு தாக்கல் செய்வோம்: எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்கம்
வெயிலையும் மழையையும் பாராமல் களத்தில் நின்று போராடிய மக்களுக்கான ஆறுதல் இந்தத் தீர்ப்பு என்கிறார் எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அருள் ஆறுமுகம். இதுகுறித்துப் பேசியவர், ’’ஆரம்பத்தில் மக்கள் மிகவும் பயந்தனர். ஆட்சியாளர்கள் மீது கோபம் இருந்தாலும் மத்திய, மாநில அரசுகளை எதிர்க்கத் தயங்கினர். அவர்களை ஒருங்கிணைத்துப் போராட்டம் நடத்தினோம்.
மக்கள் போராட்டத்துக்கு பலன் இருக்கும் என்பதை அரசியல் கட்சிகள் உணந்திருக்கும். அரசு கண்டிப்பாக மேல்முறையீட்டுக்குச் செல்லும். நாங்களும் கேவியட் மனு தாக்கல் செய்வோம்’’ என்கிறார் அருள் ஆறுமுகம்.
அதிமுகவுக்கு அரசியல் பின்னடைவா?-ஆழி.செந்தில்நாதன்
விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெறும் சூழலில் எட்டு வழிச் சாலை குறித்த நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிமுக கட்சிக்குப் பின்னடவை ஏற்படுத்தும் என்றே கூறப்படுகிறது. இந்நிலையில் அது அதிமுகவின் ஓட்டு வங்கியைப் பாதிக்குமா என்பது குறித்து அரசியல் ஆய்வாளர் ஆழி செந்தில்நாதனிடம் பேசினேன்.
’’ஆட்சி பலத்தை மட்டுமே நம்பி இறங்கினால் என்ன நடக்கும் என்பதை இந்நேரத்தில் அதிமுக அரசு உணர்ந்திருக்கும். மக்களின் ஆதரவு இல்லாமல் இனி ஸ்டெர்லைட், நெடுவாசல், கெயில் குழாய் பதித்தல் என எந்தத் திட்டத்தையும் அரசுகள் செயல்படுத்த முடியாது. எது வளர்ச்சிக்கான திட்டம், எது தனியாருக்கு லாபம் அளிக்கும் திட்டம் என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர்.
நீதிமன்றத் தீர்ப்பு நிச்சயம் தேர்தலில் எதிரொலிக்கும். எதிர்க்கட்சிகள் அனைவரும் நீதிமன்ற உத்தரவை உரிமை கொண்டாடுவர். எட்டு வழிச் சாலையை எதிர்த்த பாமக, அதை ஆதரித்த, அமல்படுத்த முயற்சித்த அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது. இந்த நெருடலை எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டும். அதுவும் அதிமுக கூட்டணிக்குப் பாதகமாக அமையும். எனினும் பெரிய அளவில் வாக்கு வங்கியில் இது மாற்றத்தை ஏற்படுத்தாது. எட்டுவழிச் சாலை திட்டத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட கிராமங்களில் வேண்டுமானால் அதிமுக எதிர்ப்பலை வீசலாம்’’ என்கிறார் செந்தில்நாதன்.
தேர்தல் என்பதால் இப்போது அடக்கி வாசிக்கும் அதிமுக அதற்குப் பிறகு என்ன நிலைப்பாட்டை எடுக்கக் கூடும் என்று கேட்டால், இத்திட்டம் தேசிய நெடுஞ்சாலை சம்பந்தப்பட்டது. டிபென்ஸ் காரிடாரும் இதில் வருகிறது. இதனால் எட்டுவழிச் சாலைத் திட்டத்துக்கு மத்திய அரசின் அனுமதி முக்கியம். மீண்டும் மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தால், நிச்சயம் இத்திட்டத்தைக் கையில் எடுக்கும். ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் எட்டுவழிச் சாலை வராமல் போகலாம் என்கிறார் ஆழி செந்தில்நாதன்.
பசுமையை அழித்துத்தான் பசுமை வழிச் சாலை வரவேண்டுமா? விவசாய நிலங்களை அழித்துத்தான் எட்டுவழிச் சாலை வேண்டும் என்றால் அந்த சாலை தேவைதானா? என்று ஆட்சியாளர்கள் யோசிக்கட்டும். விவசாயம்தான் இந்திய நாட்டின் முதுகெலும்பு என்னும் தேசப்பிதாவின் வார்த்தைகளை அவர்கள் நினைவுகூரட்டும்.
க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT