Published : 29 Apr 2019 09:08 AM
Last Updated : 29 Apr 2019 09:08 AM
விநாயகனே, வினை தீர்ப்பவனே, வேழ முகத்தோனே, ஞால முதல்வனே” என்றும், “வேண்டினார் விருப்பெல்லாம் நிறைவேறும் ஈச்சனாரி விநாயகர் தாள் பணிந்தால்” என்றும் முழுமுதற் கடவுளான கணபதியைப் போற்றி வணங்குகின்றனர் கோவை ஈச்சனாரி விநாயகர் கோயில் பக்தர்கள்.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை விநாயகர் வழிபாடு பரவியுள்ளது. ஒரு செயலைத் தொடங்க வேண்டுமென்றாலோ, ஒரு தொழிலை ஆரம்பிக்க வேண்டுமென்றாலோ பிள்ளையார் சுழி போடாமல் தொடங்குவதில்லை. விநாயகரைத் தொழுது தொடங்கும் காரியங்கள், எவ்வித இடையூறுமின்றிக் கைகூடும் என்பது மக்களின் நம்பிக்கை. சங்க காலப் பாடல்களில் சிவன், முருகன் பற்றிக் குறிப்பிட்டிருந்தாலும், விநாயகர் பற்றிய செய்திகள் இல்லை. ஏழாம் நூற்றாண்டில் தேவாரப் பாடல்களில் விநாயகர் பற்றிய குறிப்பு உள்ளது. இதிலிருந்து, 6 அல்லது 7-ம் நூற்றாண்டில் விநாயகர் வழிபாடு தமிழகத்தில் பரவியிருக்கக் கூடும் என்கின்றனர். எனினும், அதற்குப் பிறகு விநாயகர் வழிபாடு முழு வீச்சில் தமிழகத்தில் பரவியது. திருஞானசம்பந்தர் காலத்தில் இருந்த பரஞ்ஜோதியார் வாதாபியை வென்று, வெற்றியாய் கொண்டுவந்த பொருட்களில் வாதாபி கணபதி சிலையும் ஒன்று.
திருஞானசம்பந்தர், அப்பர் பாடல்களிலும், திருவீதி மழலைப் பாசுரம், திருவாய்மூர் பாசுரம், திருமாளிகைத் தேவர் பாசுரங்கள், திருவிசைப்பாவியம், சேரமான் பெருமான் நாயனார், திருக்கைலாய ஞானஉலா பாடல்களிலும் விநாயகர் பற்றிய குறிப்புகள் உள்ளன. கோவையைப் பொறுத்தவரை, புதிய வாகனம் வாங்குபவர்கள் முதலில் சென்று, அந்த வாகனத்துக்கு பூஜை செய்து, வழிபாடு நடத்துவது ஈச்சனாரி விநாயகர் கோயிலில்தான். கோவை மாவட்டத்தில் உள்ள முக்கியமான கோயில்களில் ஒன்றான, மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோயில் கோவை-பொள்ளாச்சி சாலையில், ஈச்சனாரி பகுதியில் அமைந்துள்ளது. கோவையிலிருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இக்கோயில் உருவான வரலாறு மிகவும் சுவாரஸ்யமானது.
ஸ்தல வரலாறு!
சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் திருமலை நாயக்கர் காலத்தில், மேலைச் சிதம்பரம் எனப் போற்றப்படும் பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் பிரதிஷ்டை செய்வதற்காக, 6 அடி உயரம், 3 அடி அகலம் கொண்ட விநாயகர் விக்ரகத்தை மதுரையில் இருந்து மாட்டு வண்டியில் கொண்டுவந்துள்ளனர். ஈச்சனாரி பகுதியில் வந்தபோது அந்த வண்டியின் அச்சு முறிந்துவிட்டது. இதனால் சிலையை எடுத்து கீழே வைத்துவிட்டு, வண்டியை சரி செய்துள்ளனர். பின்னர், பலமுறை முயற்சித்தும் விநாயகர் சிலையை அங்கிருந்து எடுக்க முடியவில்லை. இதையடுத்து, விநாயகப் பெருமான் அந்த இடத்தில் வீற்றிருக்க விரும்புகிறார் எனக் கருதி, அந்த சிலையை அங்கேயே பிரதிஷ்டை செய்துவிட்டனர் என்று கோயில் வரலாற்றை விளக்குகின்றனர் விவரமறிந்தவர்கள்.
இக்கோயிலில் 1977-ல் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இக்கோயில் மண்டபத்தில் மூலவர் விநாயகர் சன்னதி மட்டுமே அமைந்துள்ளது. விநாயகர், முருகன் உற்சவர் சிலைகள் உள்ளன. தினமும் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, ஒவ்வொரு நாளும் கணபதி ஹோமம், காலை, மாலை வேளைகளில் அபிஷேகம் செய்யப்படுகிறது. நாள்தோறும் 6 கால பூஜை நடைபெறும் இக்கோயிலில், இரவு 10 மணி வரை பக்தர்கள் தொடர்ந்து விநாயகரை தரிசிக்கலாம்.
மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி, மாத சதுர்த்தி, கிருத்திகை, பௌர்ணமி, அமாவாசை நாட்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்படுகிறது. சங்கடஹர சதுர்த்தி, கிருத்திகை, சதுர்த்தி நாட்களில் மாலையில் சுவாமி திருவீதி உலா நடத்தப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தி, தமிழ் வருடப் பிறப்பு, சரஸ்வதி பூஜை, தீபாவளி, ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம், கார்த்திகை தீபம், ஆங்கில வருடப் பிறப்பு, தைப்பொங்கல், தைப்பூசம் உள்ளிட்ட விசேஷ நாட்கள் இங்கு வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. மற்ற நாட்களில் 2,000 முதல் 3,000 பேர் வரும் நிலையில், விடுமுறை, சிறப்பு நாட்களில் 10,000 பேரும், விநாயகர் சதுர்த்தி, தமிழ் வருடப் பிறப்பின்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் இங்கு வந்து மூத்த கணபதியை தரிசித்துச் செல்கின்றனர். 27 நட்சத்திர தினத்தில் 27 வகையான அலங்காரங்கள் விநாயகப் பெருமானுக்கு செய்யப்படுகின்றன.
புதிதாக வாகனம் வாங்குபவர்கள் முதலில் ஈச்சனாரி வந்து, விநாயகரை வழிபடுகின்றனர். இதனால், விபத்துகள் ஏதும் நேரிடாமல் வாகனம் இயங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதேபோல, பெண் பார்த்தல், நிச்சயதார்த்தம், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் இங்கு நடைபெறுகின்றன. இவற்றுக்கு குறைந்த கட்டணமே வசூலிப்பது குறிப்பிடத்தக்கது. கோயில் பிரசாதமாக சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல், சுண்டல் வழங்கப்படுகிறது.
தினமும் கணபதி ஹோமம்!
இக்கோயிலின் ஸ்தல விருட்சமாக அரசும், வேம்பும் இணைந்த மரம் உள்ளது. தினமும் இரவு கோயிலில் உள்ள தங்கத் தேர் உலா நடைபெறுகிறது. ஆண்டு முழுவதும் ஒருநாள் கூட தவறாது கணபதி ஹோமமும், கோபூஜையும் நடத்தப்படுகிறது. அதேபோல, சங்குபூஜை, லட்சார்ச்சனை, கிருத்திகையில் முருகப் பெருமான் சப்பரத்தில் புறப்பாடு ஆகியவையும் உண்டு.
இக்கோயில் 3 நிலை ராஜகோபுரத்துடன், நவீன கட்டட அமைப்புடன் அமைந்துள்ளது. மகா மண்டபம் உட்பட கோயில் வளாகம் முழுவதுமே மிகத் தூய்மையாகப் பராமரிக்கப்படுகிறது. காற்றோட்டமான ஜன்னல் அமைப்புகள், கோயிலைச் சுற்றிலும் பசுமையான புல்தரை, தினப் பூஜைக்குத் தேவையான மலர்களை வழங்கும் கோயில் பூந்தோட்டம், தூய்மையான கழிப்பிட வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் தண்ணீர் வசதிகள் என பக்தர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் இங்குசிறப்பாகச் செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலான கோயில்களில் இல்லாத வகையில், இக்கோயிலில் தட்டு காணிக்கை தனியாக சேமிக்கப்பட்டு, மாத இறுதியில் அர்ச்சகர்கள், பூசாரிகள், கோயில் துப்புரவுப் பணியாளர்கள் என பிரித்து வழங்கப்படுகிறது. 2002-ல் அன்னதானதிட்டம் தொடங்கப்பட்டு, தினமும் 150 பேருக்குஅன்னதானம் வழங்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT