Last Updated : 12 Apr, 2019 08:33 PM

 

Published : 12 Apr 2019 08:33 PM
Last Updated : 12 Apr 2019 08:33 PM

ஏழைகளுக்கு ரூ.72 ஆயிரம் அளிக்க முடியாத தேர்தல் அறிக்கை; ராகுல் காந்தி ஆட்சியைப் பிடிக்க பொய் பிரச்சாரம்: முதல்வர் பழனிசாமி குற்றச்சாட்டு

காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 72 ஆயிரம் வழங்குவதாக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளார். யாருக்கும் 72 ஆயிரம் ரூபாய் வழங்க முடியாத திட்டத்தைக் கூறி, ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என திட்டமிட்டு ராகுல் காந்தி பொய் பிரச்சாரம் செய்து வருகிறார் என்று முதல்வர் பழனிசாமி விமர்சித்துள்ளார்.

தருமபுரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சேலம் மாவட்டம், மேச்சேரியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வேட்பாளர் அன்புமணி ராமதாஸை ஆதரித்து, பொதுமக்களிடம் பேசியதாவது:

''திமுக தலைவர் ஸ்டாலின் மக்களை ஏமாற்றும் விதமாக, தேர்தல் அறிக்கை நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். இந்த தேர்தல் அறிக்கையில் செய்ய முடியாததை செய்வதாகக் கூறி திட்ட மிட்டு பச்சைப் பொய் கூறி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். கடந்த திமுக ஆட்சியில் ஏழை விவசாயிகளுக்கு இரண்டரை ஏக்கர் நிலம் அளிப்பதாக கூறினார்கள். மேச்சேரியில் எத்தனை விவசாயிகளுக்கு இரண்டரை ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது.

காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 72 ஆயிரம் வழங்குவதாக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளார். யாருக்கும் 72 ஆயிரம் ரூபாய் வழங்க முடியாத திட்டத்தைக் கூறி, ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என திட்டமிட்டு ராகுல் காந்தி பொய் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த திட்டத்துக்கு  3.5 லட்சம் கோடி செலவாகும். எவ்வாறு செயல்படுத்த முடியும். மாதம் தோறும்  ஏழை எளிய தெழிலாளிகளுக்கு ஆயிரம் நிதி உதவி வழங்கி வருகிறோம். எது நடக்குமோ அதை மட்டுமே நாங்கள் சொல்கிறோம். நடக்காத, செயல்படுத்த முடியாத திட்டங்களைக் கூறி திமுக கூட்டணிக் கட்சியினர் மக்களிடம் பிரச்சாரம் செய்கின்றனர்.

தமிழக முதல்வர் மாவட்டம் என்ற அந்தஸ்தும், பெருமையும் கொண்டது சேலம் மாவட்டம். சேலம் மாவட்டத்துக்குத் தேவையான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. நங்கவல்லி-மேச்சேரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படத்தப்பட்டு கிராம மக்கள் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. மேட்டூர் உபரி நீர் திட்டம் மூலம் ஏரி, குளம், குட்டை நீர் நிரப்புவதற்கான ஆயத்தப்பணி 45 சதவீதம் பொதுப்பணித்துறையால் முடிக்கப்பட்டுள்ளது. குடிமாரமத்து பணி மூலம் 3 ஆயிரம் ஏரிகள் தூர் வாரப்பட்டுள்ளது.

மேச்சேரி வாழ் விவிசாயிகளுக்கு காய்கறிக்கு நியாயமான விலை கிடைக்க உணவுப் பூங்கா ரூ.2 ஆயிரம் கோடியில் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஓமலூர் - தாரமங்கலம் சாலையில் உள்ள காமநாயக்கன்பட்டியில் இத்திட்டத்துக்காக குளிர்சாதனக் கிடங்கு, கடைகள், விவசாயிகள் தங்க விடுதி ஏற்படுத்தப்படும். ரூ.8 கோடியில் காய்கறி மார்க்கெட் ஏற்படுத்தப்படும். மேச்சேரியில் தரமான ஆடுகளை உற்பத்தி செய்ய உரைவிந்து நிலையம் அமைக்கப்படவுள்ளது.

தலைவாசலில் ஆயிரம் ஏக்கரில் ரூ.11 ஆயிரம் கோடி மதிப்பீட்டில்  கால்நடைப் பூங்கா, பால் உற்பத்திக்கு தரமான கலப்பினப் பசு, காங்கேயம் காளை போன்ற உயர் ரக  கால்நடை இனம் உற்பத்தி செய்ய உரைவிந்து நிலையம், தரமான ஆடுகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வகையில் ஆராய்ச்சி மையம் என விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்திட தேவையான திட்டங்கள் வகுத்து, செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேட்டூர், பவானி, மேச்சேரி, தொப்பூர் வரையில் நான்கு வழி சாலை, ஓமலூர் - மேச்சேரி - மேட்டூர் வரை அகல சாலைப்பணி மேற்கொள்ளப்படவுள்ளது. கோதாவரி - காவிரி நதி நீர் இணைப்புத் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகம் முழுவதும் 8,600 கி.மீ., தரமான சாலை வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மக்கள் நலம் பெற்று வளமோடு வாழ தேவையான வசதிகளைச் செய்து கொடுக்கும் அரசாக விளங்கும் அதிமுக கூட்டணி சார்பில் தருமபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸுக்கு மாம்பழச் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்''.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x