Published : 02 Apr 2019 12:00 AM
Last Updated : 02 Apr 2019 12:00 AM
தேர்தல் காலம் என்பதால் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. இத னால், மதுக்கடைகளில் தினசரி விற்பனை 30 சதவீதம் அதிகரித்தால் உடனே தேர்தல் ஆணையத்திடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகள் மற்றும் காலியாக உள்ள 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் வரும் 18-ம் தேதி ஒரேகட்டமாக நடத்தப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் தேசிய, மாநில கட்சித் தலைவர்கள், நட்சத்திர பேச்சாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தேர்தல் காலம் என்பதால் டாஸ்மாக் கடைகளில் தற்போது கூட்டம் அலை மோதுகிறது. தமிழகம் முழுவதும் 5 ஆயிரம் மதுபானக் கடைகள் உள்ளன. இவற்றில் தினமும் சராசரியாக ரூ.90 கோடிக்கு மது விற்பனை நடக்கிறது. தேர்தல் பிரச்சாரம் மற்றும் வாக்காளர்களைக் கவர்வதற்காக அரசியல் கட்சியினர் கணிசமாக மதுபானங் களை வாங்கக்கூடும் என்பதால் மது விற்பனையை தேர்தல் ஆணையம் கண்காணிக்கத் தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக டாஸ்மாக் நிறுவனத்துக்கு தேர்தல் ஆணையம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதன்படி, ஒரு நபருக்கு ஒன்றரை லிட்டர் பீர், 750 மில்லி லிட்டர் மதுபானம் விற்கலாம் என்று ஏற்கெனவே உள்ள விதிமுறையை கடுமையாக அமல்படுத்த வேண்டும். நான்கு பேர், 10 பேர், 25 பேர் என மொத்தமாக வந்து மது கேட்டால் அவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப மது விற்கத் தடையில்லை. யாருமே இல்லாமல் ஒருவர் மட்டும் வந்து கணிசமாக மதுபானங்கள் கேட்டால் அவருக்கு விற்கக்கூடாது.
ஒரு மதுக்கடையில் தினசரி விற்பனை 30 சதவீதம் அதிகரித்தால் அதுகுறித்து அப்பகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை மேற்பார்வை யாளர் விளக்கம் அளிக்க வேண்டும். அதாவது அந்தப் பகுதியில் திருமணம், பிறந்தநாள், கோயில் திருவிழா, துக்க நிகழ்ச்சி போன்ற எவ்வித நிகழ்வும் இல்லாத நிலையில், குறிப்பிட்ட கடையில் கடந்த மாதம் விற்ற மதுபானத்தைவிட இந்த மாதம் அதேநாளில் விற்கும் மதுபானங்கள் 30 சதவீதம் அதிகமாக இருக்கும்பட்சத்தில் அதுகுறித்து தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் கூறினார்.
மதுபான விற்பனையை அந்தந்த மாவட்ட டாஸ்மாக் மேலாளர் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மதுபானங்களை மதுக்கூடங்களில் (பார்) வைத்து விற்கக்கூடாது என்பது விதிமுறை. ஆனால், அரசியல் கட்சியினர் தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தி காவல்துறையினர் மூலம் மதுபானங்களை மதுக்கூடங்களுக்கு விற்க கட்டாயப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு ஏஐடியுசி டாஸ்மாக் பணியாளர்கள் சங்க மாநிலத் தலைவர் நா.பெரியசாமி கூறும்போது, “டாஸ்மாக் மதுபானங்களை மதுக்கூடத்துக்கு விற்க வேண்டும் என்று சென்னை மணலி பகுதியில் ஒரு பெண் போலீஸ் அதிகாரி வற்புறுத்துவதாக தகவல் வந்துள்ளது. அரசியல் கட்சியினரின் அழுத்தம் காரணமாக மதுபான விற்பனையில் காவல்துறையினர் தலையிடுவதால் மதுபானக் கடை விற்பனையாளர்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
தேர்தல் நெருங்கும்போது அரசியல் கட்சியினர் டாஸ்மாக் கடைகளில் இருந்து மதுபானங்களை கொஞ்சம் கொஞ்சமாக வாங்கி இருப்பு வைத்துக் கொள்வார்கள். அந்த வேலையை போட்டி போட்டிக் கொண்டு கட்சியினர் இப்போதே தொடங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT