Last Updated : 11 Apr, 2019 12:00 AM

 

Published : 11 Apr 2019 12:00 AM
Last Updated : 11 Apr 2019 12:00 AM

மக்களவை தேர்தல் களத்தில் மக்கள் நீதி மய்யம் பிரச்சாரம் சுணக்கம்: முகம் காட்ட மறுக்கும் வேட்பாளர்கள்

தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 7 நாட்களே எஞ்சியிருக்கும் நிலையில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிகளிலும், விளாத்திகுளம் சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களின் வாக்கு சேகரிப்பு மிகவும் மந்தகதியில் இருக்கிறது.

திருநெல்வேலி தொகுதியில் எம்.வென்னிமலை, தென்காசி தொகுதியில் கூ.முனீஸ்வரன், கன்னியாகுமரி தொகுதியில் ஜே.எபினேசர், தூத்துக்குடி தொகுதியில் த.பொ.சீ.பொன்குமரன், விளாத்திகுளம் சட்டப்பேரவை தொகுதியில் டி.நடராஜன் ஆகியோர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.

இத்தேர்தலுக்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் முன்னரே, அதிமுக, திமுக, அமமுக ஆகிய முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் பிரச்சார பயண திட்டத்தை இறுதி செய்து களத்திலும் இறங்கியிருந்தனர். வேட்பாளர் பட்டியல் இறுதியான பின்னர் அவர்களது பிரச்சாரம் சூடு பிடித்தது. மதியம் சுட்டெரிக்கும் வெயில் நேரம் தவிர்த்து காலையிலும், மாலையிலும், இரவிலும் அவர்கள் பம்பரமாக சுழன்று வாக்காளர்களிடம் ஆதரவு திரட்டி வருகிறார்கள். ஆனால் இத்தேர்தலில் போட்டியிடும் முக்கிய கட்சிகளின் பட்டியலில் இருக்கும் மக்கள் நீதி மய்யம் தேர்தல் களப்பணியில் மந்தகதியில் இருக்கிறது. தேர்தலுக்கு ஒருவாரமே உள்ள நிலையில், இக்கட்சி வேட்பாளர்கள் தங்களது டார்ச் லைட் சின்னத்துக்கு ஆதரவு கேட்டு தீவிர பிரச்சாரத்தில் களமிறங்கவில்லை.

மாலை நேரங்களில் ஆங்காங்கே துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பதுடன் தேர்தல் பிரச்சார பணியை வேட்பாளர்கள் நிறைவு செய்து கொள்கிறார்கள் என்று அக் கட்சியினரே சோர்வுடன் குறிப்பிடுகிறார்கள். வேன் பிரச்சாரத்திலோ, கட்சிக்கான சின்னத்தை முதன் முதலில் வாக்களிக்க இருக்கும் கல்லூரி மாணவ, மாணவியர், இளைஞர்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் முயற்சியிலோ அவர்கள் இறங்கவில்லை.

கட்சி தொடங்கி முதல் தேர்தலை சந்திக்கும் நிலையில், மக்கள் மத்தியில் தங்களது கட்சியின் கொள்கைகள், தேர்தலில் போட்டியிடும் நோக்கம், வாக்குறுதிகள் குறித்தெல்லாம் எடுத்துரைக்கும் திறன்படைத்த பேச்சாளர்கள், மக்கள் நீதி மய்யத்தின் தலைமையிலிருந்து தொகுதிகளுக்கு அனுப்பாதது, தேர்தல் களத்தில் அக் கட்சியினரை சோர்வடைய வைத்திருக்கிறது.

இதனிடையே, திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த மக்கள் நீதி மய்யம் பொறுப்பாளர்கள் ராஜினாமா செய்ததும் அக் கட்சியின் தேர்தல் பணிகளில் பின்னடவை ஏற்படுத்தியது.

தங்களிடம் கருத்து கேட்காமலேயே வெளியூர்களில் இருந்து வேட்பாளர்களை தேர்வு செய்து கட்சி நிறுத்தியிருப்பது கமல்ஹாசன் ரசிகர்களுக்கும், கட்சியினருக்கும் பெருத்த ஏமாற்றத்தை அளித்திருந்தது. தேர்வு செய்த வேட்பாளர்களும் முக்கிய நிர்வாகிகளின் ஆலோசனைகளை கேட்பதில்லை என்பதால் நிர்வாகிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் இடையே பெரும் இடைவெளி உருவாகியிருக்கிறது. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் கட்சியின் தேர்தல் பணியில் தொய்வு ஏற்பட்டு, அது தொடர்ந்து கொண்டிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x