Published : 25 Apr 2019 10:52 AM
Last Updated : 25 Apr 2019 10:52 AM

கொடிகாத்த குமரனுக்கு மணிமண்டபம் அமையுமா?

தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா,  இப்பயிரைக் கண்ணீரால் காத்தோம், கருகத் திருவுளமோ?” என்ற மகாகவி பாரதியாரின் வரிகள், சுதந்திரப் போராட்டத்தில் தன்னுயிரை ஈந்தவர்களின் தியாகத்தை வெளிச்சம்போட்டுக் காட்டும். தமிழகத்தின் குறிப்பிடத்தக்க சுதந்திரப் போராட்டத் தியாகியான கொடிகாத்த குமரனுக்கு, சென்னிமலையில் மணிமண்டபம் கட்ட வேண்டுமென்ற எதிர்பார்ப்பு இன்னும் நிறைவேறவில்லை.

இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு ஈரோடு மாவட்டம் சென்னிமலை, இரு பெரும் தியாகிகளைத் தந்துள்ளது. படை திரட்டி, வெள்ளையரை விரட்டி, வெற்றி கண்டு, வீரமரணமடைந்த தீரன் சின்னமலையும், மகாத்மாவின் அகிம்சைத் தத்துவத்தை ஏற்று, கொடியைக் காக்க இன்னுயிரை தியாகம் செய்த திருப்பூர் குமரனும்தான் அவர்கள். தாயின் மணிக்கொடி காத்த திருப்பூர் குமரனின் தியாகத்தைப் போற்றும் வகையில், அவர் பிறந்த சென்னிமலையில் மணிமண்டபம் கட்ட வேண்டுமென்று 10 ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்தி வருகின்றனர் தேசபக்தர்கள்.

சென்னிமலையில் நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவர் குமாரசாமி என்ற இயற்பெயர் கொண்ட திருப்பூர் குமரன். நெசவுத்தொழில் நசிவால் இவரது குடும்பம் திருப்பூருக்கு இடம்பெயர, அங்கு தேசபந்து இளைஞர் மன்றத்தில் உறுப்பினரானார். அந்தக்  காலகட்டத்தில் ஐந்து முறை திருப்பூருக்கு வந்த காந்தியடிகளின் அகிம்சைப் பாதை, குமரனை வெகுவாகக் கவர்ந்தது. அவரது அழைப்பை ஏற்று கதர் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார் குமரன்.

ஆங்கிலேய அரசின் அடக்குமுறைச் சட்டத்தை எதிர்த்து 1932-ல் திருப்பூரில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற குமரனை, ஆங்கிலேயரின் குண்டாந்தடிகள் பதம் பார்த்தன. ரத்த வெள்ளத்தில் தன் தலை தரையில் சாய்ந்த போதிலும், பாரதத் தாயின் மணிக்கொடியை உயர்த்திப் பிடித்து, கொடியின் கவுரவம் காத்த குமரனின் பிறந்த நாளான அக்டோபர் 4-ம் தேதி அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. கொடிகாத்த குமரன் பிறந்த சென்னிமலையில்,  அவரது நினைவைப் போற்றும் வகையில்,  திருவுருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. நினைவு அஞ்சல் தலையும் வெளியிடப்பட்டுள்ளது.

அதேசமயம்,  தீரன் சின்னமலைக்கு ஓடாநிலையில் மணிமண்டபம் கட்டியதுபோல, திருப்பூர் குமரனுக்கு சென்னிமலையில் மணிமண்டபம் கட்ட வேண்டும் என்பதே 10 ஆண்டுகளுக்கு மேலாக தேசபக்தர்கள் முன்னிறுத்தும் கோரிக்கை.

இது தொடர்பாக, திருப்பூர் குமரனின் தம்பி ஆறுமுகத்தின் மகன் அண்ணாதுரை கூறும்போது, “திருப்பூர் குமரன் பிறந்து, வாழ்ந்த வீடு சென்னிமலையில் உள்ளது. மணிமண்டபம் கட்ட அந்த வீட்டை வழங்கத் தயாராக உள்ளோம். குமரனுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்பதற்காக தொடர்ந்து முயற்சித்து  வருகிறோம். முன்னாள் முதல்வர்களில் தொடங்கி, தற்போதைய முதல்வர் கே.பழனிசாமி வரை பலரிடமும் இந்தக்  கோரிக்கையை வலியுறுத்தியுள்ளோம்.  மணிமண்டபம் கட்ட இந்த இடம் போதாது என்றால், சென்னிமலையில் வேறு எந்த இடத்தில் மணிமண்டபம் அமைந்தாலும் மகிழ்ச்சி அடைவோம்” என்றார்.

அண்மையில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்துக்காக பெருமாநல்லூர் வந்த பிரதமர் மோடியை சந்திக்க, அண்ணாதுரை மற்றும் அவரது உறவினர்களுக்கு  வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கெடுபிடிகளால், குமரனுக்கு மணிமண்டபம் அமைக்கும் கோரிக்கையை பிரதமரிடத்தில் வலியுறுத்த முடியாத நிலை அண்ணாதுரைக்கு ஏற்பட்டுள்ளது.

காங்கயம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும், தமாகா மாநிலப் பொதுச் செயலருமான விடியல் சேகர் கூறும்போது, “திருப்பூர் குமரன் பிறந்த இடத்தை அவரது உறவினர்களிடம் இருந்து விலைக்கு வாங்குவதற்காக, என் தலைமையில்,  சென்னிமலை பேரூராட்சித் தலைவர் நடேசன், குமரன் நற்பணி மன்றத் தலைவர் ஐயப்பன் ஆகியோர், கல்வியாளர் சுத்தானந்தனை சந்தித்து கோரிக்கை விடுத்தோம். அவரும் அதற்கான நிதியை வழங்குவதாகத் தெரிவித்தார். ஆனால், அவரது மறைவால் இந்த முயற்சி கைகூடவில்லை.

காங்கயம் சட்டப்பேரவை உறுப்பினராக நான் இருந்தபோது, 2010-ல் எனது தொகுதி நிதியிலிருந்து மணிமண்டபம் கட்ட ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தேன். குமரன் பிறந்த இல்லத்தைச் சுற்றியுள்ள இடம் போதுமானதாக இல்லை என்ற கருத்து அப்போது எழுந்தது. இதையடுத்து, சென்னிமலையைச் சேர்ந்த முத்துசாமி, தனக்குச் சொந்தமான இடத்தை தானமாக வழங்க முன்வந்தார். அப்போது, அரசுத்  துறைகள் போதுமான நடவடிக்கைகளை எடுக்காததாலும், தேர்தல் அறிவிப்பாலும் அந்த முயற்சியும் கைகூடவில்லை.

திருப்பூர் குமரனின் பிறந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாடும் நிலையில், அவருக்கு மணிமண்டபம் அமைக்கும் பணியையும் அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும். ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்லும் சென்னிமலையில், குமரனின் தேசப்பற்று, தியாக வரலாற்றைச் சொல்லும் மணிமண்டபம் அமைப்பது அவசியம்” என்றார். திருப்பூர் குமரன் இளைஞர் பேரவை  சார்பில் கடந்த 2017-ல் டெல்லியில், பார்வையற்ற 25 பேர் உள்ளிட்ட 50 பேர் போராட்டம் நடத்தினர். திருப்பூர் குமரன் போராட்டக் களத்தில் மடிந்ததை நினைவுகூரும் வகையில் நடத்தப்பட்ட இந்தப் போராட்டம் பலரின் கவனத்தையும் கவர்ந்தது.

இந்த போராட்டத்தை நடத்திய திருப்பூர் குமரன் இளைஞர் பேரவை  ஒருங்கிணைப்பாளர் எஸ்.என்.சரவணன் கூறும்போது, “வாக்கு வங்கி அடிப்படையில்தான் ஒரு தேசத் தலைவரின் தியாகம் மதிப்பிடப்படுகிறது என்பது வேதனையான உண்மை. அகிம்சையின் முக்கியத்துவத்தை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய அவசியத்தில் இன்று நாம் இருக்கிறோம். அதற்கு திருப்பூர் குமரன் போன்றவர்களின் தியாகத்தைப் போற்றுவது அவசியம் என்பதை அரசு உணர வேண்டும்.  ஆண்டுதோறும் சுதந்திரப் போராட்டத்  தியாகிகளை மத்திய அரசு விளம்பரங்கள் வாயிலாக நினைவுகூர்ந்து வருகிறது. இதில், திருப்பூர் குமரனின் தியாகத்தையும், நாட்டு மக்களுக்குத் தெரியப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நாடாளுமன்ற வளாகத்தில் குமரன் சிலையை அமைத்து, அவரது தியாகத்துக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும். சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் குமரனின் வரலாற்றைச்  சேர்க்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x