Last Updated : 10 Apr, 2019 12:00 AM

 

Published : 10 Apr 2019 12:00 AM
Last Updated : 10 Apr 2019 12:00 AM

மண்ணில் புதையலாய் புதைந்துள்ள தமிழர் நாகரீகம்: தேர்தல் களத்தில் மறக்கப்பட்ட ஆதிச்சநல்லூர் அகழாய்வு

ஆதிச்சநல்லூரில் புதைந்து கிடக்கும் பண்டை தமிழர் நாகரீகத்தை, பண்பாட்டை வெளியே கொண்டு வந்து உலகறிய செய்வது குறித்து தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் யாரும் உறுதியளிக்காதது வருத்தமளிப்பதாக தமிழ் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் கிறிஸ்து பிறப்பதற்கு முற்பட்ட காலத்தை சேர்ந்தவை என தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது சுமார் 3,000 ஆண்டு பழமையானது எனத் தெரியவந்துள்ளது.

ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணிகள் முழுமையாக நடைபெறவில்லை. எனவே, இங்கு மீண்டும் முழுமையாக அகழாய்வு நடத்த வேண்டும். ஆதிச்சநல்லூரில் ஏற்கெனவே அகழாய்வு செய்ததன் அறிக்கையை மத்திய தொல்லியல் துறை வெளியிட வேண்டும். அகழாய்வு செய்த போது கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ளன. அவற்றை சேகரித்து ஆதிச்சநல்லூரிலேயே அருங்காட்சியகம் அமைத்து காட்சிப்படுத்த வேண்டும் என்பது தமிழ் அறிஞர்கள் மற்றும் தொல்லியல் ஆர்வலர்களின் நீண்ட கால கோரிக்கை.

மத்திய அரசு தகவல்

எழுத்தாளரான முத்தாலங்குறிச்சி காமராசு இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி உயர் நீதிமன்றத்தை நாடினார். அவர் தொடர்ந்த வழக்கு கடந்த 4-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது தான், ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் காலத்தை மத்திய அரசு தெரிவித்தது. இங்கே கண்டெடுக்கப்பட்ட இரண்டு பொருட்களை கார்பன் பரிசோதனை செய்ததில் ஒரு பொருள் கி.மு.905-ம் ஆண்டை சேர்ந்தது என்றும், மற்றொரு பொருள் கி.மு.791-ம் ஆண்டை சேர்ந்தது எனவும் தெரியவந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது. இதன் மூலம் ஆதிச்சநல்லூர் தமிழர் நாகரீகம் சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனத் தெளிவாக தெரியவந்துள்ளது. இதனை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் சமூக ஊடகங்கள் மூலம் கொண்டாடி வருகின்றனர்.

தேர்தல் களத்தில் ஒலிக்கவில்லை

ஆனால், தற்போதைய தேர்தல் களத்தில் இது விவாத பொருளாக மாறவில்லை. “தூத்துக்குடி தொகுதியை பொறுத்தவரை இரண்டு முக்கிய தலைவர்கள் களம் காண்கிறார்கள். தமிழ், தமிழர் நலன் பற்றி பேசி ஆதரவு திரட்டி வருகின்றனர். ஆனால், தமிழர் நாகரீகத்தை, பண்பாட்டை வெளியே கொண்டுவருவது குறித்து இருவரும் தற்போது வரை வாய்திறக்கவில்லை என்பது வேதனை அளிக்கிறது” என்றார் முத்தாலங்குறிச்சி காமராசு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x