Published : 10 Apr 2019 12:00 AM
Last Updated : 10 Apr 2019 12:00 AM
மதுரையில் சித்திரைத் திருவிழாக் கூட்டத்தைப் பயன்படுத்தி வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க சில கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக கிடைத்த தகவலால் தேர்தல் ஆணையம், காவல்துறை உஷாராகி உள்ளது.
மதுரை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் ராஜ்சத்யன், திமுக கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன், அமமுக சார்பில் டேவிட் அண்ணாதுரை உட்பட 26 பேர் களத்தில் உள்ளனர். அந்தந்தக் கட்சிகள் பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
திருமங்கலம் பார்முலாவைத் தொடர்ந்து தமிழகத்தில் தேர்தல் என்றாலே பணம் கிடைக்கும் என்ற மனநிலை குறிப்பிட்ட தரப்பு மக்களிடமும், குறிப்பாக ஏழைகள், பெண்களின் மனதில் பதிந்துவிட்டது. பணம் விநியோகத்தை முற்றிலும் தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தாலும், குழுக்களை உருவாக்கிச் செல்வாக்கு மிகுந்த கட்சிகள் பணம் கொடுத்தாவது வெற்றியை வசமாக்கிவிடும் முனைப்பில் உள்ளன.
மதுரை மக்களவைத் தொகுதியில் வாக்கா ளர்களுக்குப் பணம் கொடுத்து வெற்றியை வசமாக்கிக் கொள்ள முடியும் என ஓரிரு கட்சிகள் நினைக்கின்றன. அந்தந்தக் கட்சிகள் அதற்கான வியூகங்களை வகுத்து வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. பணப் பட்டுவாடாவுக்கு சித்திரைத் திருவிழாக் கூட்டத்தைப் பயன்படுத்தலாம் என சில கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.
மதுரை நகரில் சித்திரைத் திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் மக்கள் அதிகமாகக் கூடுவர். திருக்கல்யாணம், தேரோட் டம், எதிர்சேவை, கள்ளழகர் ஆற்றில் இறங்கும் முக்கிய நிகழ்ச்சிகளில் பல்லாயிரக்கணக்கானோர் திரள்வார்கள். இதுபோன்ற சமயத்தில் வாக் காளர்களுக்குப் பணம் விநியோகிக்க சில கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்தை காவல்துறை உஷார்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியது: பணம் கொடுத்தே ஆக வேண்டும் என நினைக்கும் வேட்பாளர்கள் சித்திரைத் திருவிழாக் கூட்டத்தைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளனர். ஒவ்வொரு வட்டத்திலும் பூத் வாரியாக 30 பேர் கொண்ட குழுவினர் தலா 50 வாக்காளர்களுக்குப் பணம் வழங்க இருப்பதாகவும், இதைக் கண்காணிக்க இருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், பலசரக்குக் கடைகள், பால் பூத், ஏடிஎம் உள்ளிட்ட சில வழிகளைத் தேர்வு செய்து வைத்துள்ளனர். அப்படி ஏதேனும் நடக்குமாயின் அதைத் தேர்தல் ஆணையத்துடன் இணைந்து தடுப்போம்.
திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்களைச் சந்தேகிக்க முடியாது என்றாலும், மாசி வீதிகள், கோரிப்பாளையம் என திருவிழாவில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளன. மேலும், சாதாரண உடையில் ஆண், பெண் போலீஸார், தேர்தல் அலுவலர்கள் தீவிரக் கண் காணிப்பில் ஈடுபடுவார்கள், என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT