Published : 26 Apr 2019 10:13 AM
Last Updated : 26 Apr 2019 10:13 AM

கதிகலங்கச் செய்யும் விடுதி கட்டணம்!- மிரளும் சுற்றுலா பயணிகள்

ஏழைகளின் காஷ்மீர்’ என்று அழைக்கப்பட்டாலும், உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்கும் விடுதி அறைகளின் கட்டணத்தைக் கேட்டவுடனே மயக்கம் வராத குறையாக மிரட்சி அடைந்து விடுகின்றனர். இதனால், ஒருமுறை தங்குபவர்கள் மறுமுறை உதகைக்கு வர வேண்டுமா? என்று யோசிக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இந்த நிலை தொடர்ந்தால், உதகைக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்ற எண்ணமே சுற்றுலாப் பயணிகளுக்கு வராது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

சமவெளிப் பகுதிகளில் வெயில் தகிக்கிறது. இதனால், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தவுடனே, உதகை, கொடைக்கானல் போன்ற குளிர் பிரதேசங்களை நாடிச் செல்கின்றனர் சுற்றுலாப் பயணிகள். ஏழை, நடுத்தர மக்களுக்கான காஷ்மீர் என்று சிறப்பிக்கப்படும் மலைகளின் ராணியான உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 30 லட்சத்தை எட்டியுள்ளது.

உதகை படகு இல்லம், பைக்காரா அருவி, ஷூட்டிங் மட்டம், ரோஜா பூங்கா என சுற்றுலா  மையங்களில் கூட்டம் அலைமோதுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வருகையால், உதகையில் லாட்ஜ், காட்டேஜ் உட்பட தங்கும் விடுதிகள் ‘ஹவுஸ் புல்’ ஆகியுள்ளன. இரவில் தங்க அறை கிடைக்காமல், பலர் தவிக்கின்றனர். இதை தங்களுக்கு சாதகமாக்கி, சில லாட்ஜ், காட்டேஜ் உரிமையாளர்கள் 12 மணி நேரத்துக்கு, அதிகபட்சம் ரூ.5,000 வரை கட்டணம் வசூலிக்கின்றனர்.முதல் சீசன், இரண்டாம் சீசன் என இரு வகையாகப் பிரித்து, வாடகையை  உயர்த்துகின்றனர். இதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளும் அனுமதிக்கின்றன.

வழக்கமாக, சீசன்கால கட்டணம், சாதாரண நாட்களைக் காட்டிலும் சற்று கூடுதலாக வசூலிக்கப்படும். ஆனால், உதகையில் உள்ள பெரும்பாலான காட்டேஜ் மற்றும் லாட்ஜ்களில்,  பல மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கடந்த மாதம் ஓர் அறைக்கு ரூ.600 முதல் ரூ.800 வரை வாங்கிய விடுதிகள், தற்போது பல மடங்காக கட்டணத்தை  உயர்த்தியுள்ளன.  எனினும், பதிவு செய்யப்பட்ட ஹோட்டல்கள் மற்றும் லாட்ஜ்களில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், அதையே அவர்கள் வசூலிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

வரி ஏய்ப்பில் காட்டேஜ்கள்?

இந்த நிலையில், நகர் முழுவதும் உள்ள வீடுகள்,  காட்டேஜ்களாக உருமாறியுள்ளன. எவ்வித அனுமதி இல்லாமல் அத்துமீறி இயங்கும் இந்த காட்டேஜ்களில் வசூலிக்கப்படும் கட்டணம்,  சுற்றுலாப் பயணிகளை திகைக்க வைக்கிறது.  கமிஷனுக்காக சில சுற்றுலா வழிகாட்டிகள், ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்கள் ஆகியோர், சுற்றுலாப் பயணிகளை இந்த  காட்டேஜ்களுக்கு அழைத்துச் சென்று, அறைகளை எடுத்துத் தருகின்றனர்.

இதில், காட்டேஜ் மற்றும் வாடகைக்கு வீடு எடுத்துக் கொடுப்பவர்கள், சுற்றுலாப் பயணிகளிடம் கமிஷன் தொகையை வசூல் செய்கின்றனர்.  இதனாலேயே, சுற்றுலாப் பயணிகள் அறைகளின் கட்டணத்தைக் கேட்டவுடன், அங்கு  தங்குவதை தவிர்த்து விடுகின்றனர்.சில இடங்களை மட்டும் சுற்றிப் பார்த்துவிட்டு,  இரவோடு இரவாக வேறு பகுதிக்கும், அண்டை மாநிலமான கர்நாடகத்தில் உள்ள மைசூர் மற்றும் கேரள மாநிலத்துக்குச் சென்று விடுகின்றனர்.

உதகை, குன்னூர் உள்ளிட்ட இடங்களில், குடியிருப்புக்கான அனுமதி பெற்று, வீடு, பங்களா கட்டியுள்ள பலர், அவற்றை  காட்டேஜ்களாகப் பயன்படுத்தி வருகின்றனர். தினசரி வாடகையாக ரூ.5,000 முதல் ரூ.15 ஆயிரம் வரை வசூலிக்கும் இவர்கள், நகராட்சி மற்றும் மின் வாரியத்துக்கு, குடியிருப்புக்குரிய வரி மற்றும் மின் கட்டணத்தை மட்டுமே செலுத்துகின்றனர். இதனால், பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

கோடை சீசனை சாதகமாக்கி நடக்கும் இத்தகைய குளறுபடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.

மாவட்ட நிர்வாகம், உதகையில் உள்ள லாட்ஜ்கள், ஹோட்டல்கள் மற்றும் காட்டேஜ்களின் கட்டணத்தை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இதைக் கண்காணிக்க ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும்  சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துமீறும் காட்டேஜ்கள்!

கட்டணம் விவகாரம் மற்றும் அனுமதியற்ற காட்டேஜ்கள் தொடர்பாக புகார்கள் எழுந்ததால்,உரிய அனுமதி பெற காட்டேஜ் உரிமையாளர்களுக்கு அவகாசம் அளிக்கப்பட்டது. அந்த காலஅவகாசத்துக்குள் அனுமதி பெறாத காட்டேஜ்களுக்கு, உதகை நகராட்சி நிர்வாகம் சீல் வைத்தது. ஆனால், நகராட்சி நிர்வாகம் பாரபட்சமாக செயல்படுவதாக காட்டேஜ் உரிமையாளர்கள் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில், சீல் வைக்கப்பட்ட காட்டேஜ்களில் சீல் உடைக்கப்பட்டு, மீண்டும் அவை இயங்கி வருகின்றன. காட்டேஜ் உரிமையாளர்கள் இத்தகைய அத்துமீறலில் ஈடுபடுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இதுகுறித்து உதகை நகர மக்கள் விழிப்புணர்வு சங்கத் தலைவர் ஜெ.ஜனார்தனன் கூறும்போது, “சர்வதேச சுற்றுலா நகரமாக கருதப்படும் உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், இங்கு தங்குவதற்காக மிக அதிகம் செலவு செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தங்கும் விடுதிகள் தங்கள் இஷ்டம்போல கட்டணம் வசூலிப்பதால், பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் உதகையில் தங்குவதையே தவிர்த்து விடுகின்றனர்.

லாட்ஜ்களின் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்ததால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மாவட்ட நிர்வாகம்,  ஹோட்டல்கள் மற்றும் தங்கும் விடுதி உரிமையாளர்களை அழைத்து, கட்டணம் நிர்ணயம் குறித்து

ஆலோசித்தது. பதிவு செய்யப்பட்ட தங்கும் விடுதிகளில் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால், சிக்கல் எழவில்லை. ஆனால், அனுமதி மீறி செயல்படும் தங்கும் விடுதிகளில் அறை வாடகையை யாரும் கண்காணிப்பதில்லை.

கட்டணத்தை முறைப்படுத்த வழி செய்யவில்லையெனில், உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறையும், பலரும் வந்தவுடன் திரும்பி விடுவதால், உள்ளூர் வியாபாரிகளுக்கு வருவாய் இழப்பும் ஏற்படும்” என்றார்.

திட்டமிட்டு குறிப்பிட்ட தொகையுடன் குடும்பத்துடன் சுற்றுலா வருபவர்கள், அதில் பெரும்பாலான தொகையை அறை கட்டணத்துக்கே கொடுத்துவிட்டு, சாப்பிடாமலும், உதகையை முழுமையாக சுற்றிப்  பார்க்காமலும் பாதியிலேயே தங்கள் சுற்றுலாவை முடித்துக் கொண்டு ஊர் திரும்பவதும் வாடிக்கையாகி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x