Published : 27 Apr 2019 07:07 AM
Last Updated : 27 Apr 2019 07:07 AM

ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்த இடைக்கால தடை: அப்போலோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்த இடைக்காலத் தடை விதித்துள்ள உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக தமிழக அரசு 4 வாரத்துக்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிச.5-ம் தேதி மரணம் அடைந்தார். ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தவும், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறை சரிதானா என்பது குறித்து விசாரிக்கவும் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒருநபர் ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. இந்த ஆணையம், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள், எய்ம்ஸ் மருத்துவர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் என பலருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில் ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும், 21 மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழு அமைத்து விசாரணை நடத்த உத்தர விடக் கோரியும் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

21 மருத்துவ நிபுணர்கள் குழு

அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த ஏப்.4-ம் தேதி பிறப்பித்த உத்தரவில், ‘‘அப்போலோ மருத்துவமனையின் குற்றச்சாட்டுக்கு இடம் கொடுக்காத வண்ணம் ஆணையம் பாரபட்சம் காட்டாமல் செயல்பட்டு இருக்கலாம். ஆணையத் துக்கு மருத்துவத் தொழில்நுட்ப ரீதியாக உதவிட ஏற்கெனவே அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ள தால், 21 மருத்துவ நிபுணர்கள் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்ற அப்போலோ மருத்துவமனையின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது.

அதேநேரம் ஆறுமுகசாமி ஆணையம் தனது வரம்புக்கு உட் பட்டு விசாரணை நடத்த வேண்டும். இதுவரை 5 எய்ம்ஸ் மருத்துவர்கள், 56 அப்போலோ மருத்துவர்கள், 5-க்கும் மேற்பட்ட அரசியல் பிரமுகர்கள், செவிலியர்கள், தொழில்நுட்ப உதவி யாளர்கள் என 154 பேரிடம் ஆணையம் விசாரணை நடத்தியுள்ளது. 90 சதவீதம் விசாரணை முடிவடைந்து விட்டதால் ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்க முடியாது’’ என உத்தரவிட்டு அப்போலோ தொடர்ந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவை எதிர்த்து அப்போலோ மருத்துவமனை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மற்றும் நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று நடைபெற்றது.

அப்போது அப்போலோ மருத்துவ மனை நிர்வாகம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.ஆர்யமாசுந்தரம் தனது வாதத்தில், ‘‘நீதிபதி ஆறுமுக சாமி ஆணையம் அப்போலோ மருத்துவமனையை குறிவைத்து ஒருதலைபட்சமாகச் செயல்படுகிறது. தொழில் நிமித்தமாக ஓய்வின்றி பணியாற்றிக் கொண்டு இருக்கும் அப்போலோ மருத்துவ நிபுணர் களை வேண்டுமென்றே அலைக் கழித்து வருகிறது. சாட்சியம் அளிக்க போதுமான காலஅவகாசம் அளிப்ப தில்லை. அப்போலோ மருத்துவமனை யின் நற்பெயரைக் கெடுக்கும் வகை யில் தேவையில்லாத கேள்விகளை எழுப்பி குற்றச்சாட்டுகளை சுமத்து கிறது.

10 ஆயிரம் ஆவணங்கள்

எம்ஜிஆர் மரணமடைந்து பல ஆண்டுகளாகிவிட்ட நிலையில் தற்போது அவருக்கு அளித்த சிகிச்சை விவரங்களையும் ஆணையம் கோரு கிறது. தற்போது ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ விவரங் களைச் சரியாகப் பதிவு செய்ய ஆணையத்தில் தகுந்த மருத்துவ நிபுணர்கள் யாரும் இல்லை. தற்போது தான் 5 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளதாக ஆணையம் தெரி விக்கிறது. ஜெயலலிதாவின் சிகிச்சை குறித்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆவணங்களைச் சரி பார்க்க ஆணையம் அமைத்துள்ள மருத்துவக் குழு என்பது சரியானது அல்ல.

மேலும் எங்களது மருத்துவர்கள் அளிக்கும் சாட்சியங்களை ஆணையம் தவறுதலாகப் பதிவு செய்கிறது. ‘நொடி’ என்பதை ‘நிமிடங்கள்’ எனப் பதிவு செய்துவிட்டு தட்டச்சுபிழை என்கின்றனர். எனவே பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 21 மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழு அமைத்து விசாரித்தால் மட்டுமே உண்மை நிலவரம் புரியும். அதுவரை ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்’’ என வாதிட்டார்.

தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஸ்வநாதன், ‘‘நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் தனது 90 சதவீத விசாரணையை ஏற்கெனவே முடித்துவிட்டது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அப்போலோ மருத்துவ மனையின் கோரிக்கையை ஏற்க முடியாது எனக் கூறி நிராகரித்து விட்டது. தற்போது வழக்கை இழுத் தடிக்க வேண்டும் என்ற நோக்கில்தான் அப்போலோ மருத்துவமனை இந்த வழக்கை தொடர்ந்துள்ளது’ என குற்றம்சாட்டினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்துவரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தனர். மேலும், இதுதொடர்பாக தமிழக அரசு 4 வாரத்துக்குள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து, வழக்கு விசாரணையை தள்ளிவைத்து உத்தரவிட்டனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x