Published : 23 Apr 2019 12:00 AM
Last Updated : 23 Apr 2019 12:00 AM
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உடையாளூரில் இருப்பது மாமன்னன் ராஜராஜ சோழன் சமாதியா என்பதை கண்டறிவதற்கான ஆய்வுப் பணியை தமிழக தொல்லியல் துறையினர் நேற்று தொடங்கினர்.
கி.பி.11-ம் நூற்றாண்டில் பழை யாறை சோழர்களின் தலைநகரமாக இருந்தபோது, ராஜராஜ சோழன் தங்கியிருந்த இடம்தான் இன்று சோழன்மாளிகை எனவும், சோழப் பேரரசின் படைகள் இருந்த இடங் களே இன்றைய ஆரியப்படையூர், பம்பப்படையூர், புதுப்படையூர், மனப்படையூர் எனவும் கருதப்படு கிறது. ராஜராஜ சோழன் தனது வாழ்நாளின் இறுதிக்காலத்தை உடையாளூர் பகுதியில் கழித்த போது அவர் இறந்துள்ளார். அதன்பின் அவருடைய உடலை உடையாளூரிலேயே அடக்கம் செய்துள்ளனர்.
திருக்கோயிலூரில் பிறந்த ராஜராஜ சோழன் கி.பி.985-ம் ஆண்டு சோழப் பேரரசனாக முடி சூட்டிக் கொண்டு தென்னிந்தியா முழுவதும் தனது பேரரசைப் பரப்பினார். தென்னிந்தியாவில் தனக்கு நிகர் யாரும் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் பல சிற்றரசர்களை வெற்றி பெற்று வந்தார்.
அப்போது, தன்னுடைய வாழ் நாளில் ஏதாவது சாதிக்க வேண்டும் எனக் கருதிய ராஜராஜன் தன் னுடைய தெய்வபக்தியையும், கலையை நேசிக்கும் விதத்தையும் வெளிப்படுத்தும் வகையில் தஞ்சாவூர் பெரிய கோயிலை கி.பி.1010-ம் ஆண்டில் கட்டி முடித்தார். பின்னர் கி.பி.1012-ம் ஆண்டில் ராஜராஜ சோழன் தனது பட்டத்தைத் துறந்து, தன் மகன் ராஜேந்திர சோழனுக்கு முடிசூட்டினார்.
பின்னர் மகனது ஆட்சிக் காலத் தில் தனது வாழ்நாளை பழையாறை யில் கழித்ததாக வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். அப்போது, கி.பி.1014-ல் ராஜராஜ சோழன் காலமானார்.
பின்னர் மாறவர்மன் சுந்தர பாண்டியன் தன் மூதாதையர்கள் மீது சோழர்கள் போர் தொடுத்ததை எண்ணிப், பழிவாங்கும் நோக்கத் தில் சோழப் பேரரசு மீது போர் தொடுத்து பழையாறை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை அழித்தான். அதில் எஞ்சிய இடங்களில் ஒன்றான உடையாளூர் பால்குளத்தம்மன் கோயிலில் இன்றும் ராஜராஜன் நிறுவிய கல்வெட்டு ஒன்று ஆதாரமாக உள்ளது.
உடையாளூர் கிராமத்தில் ராஜ ராஜ சோழனின் சமாதி இருப்ப தாக கல்வெட்டு ஆய்வாளர்கள் கடந்த சில ஆண்டுகளாக தெரிவித்து வருகின்றனர்.
ராஜராஜ சோழனின் சமாதி இருப்பதாகக் கூறப்படும் ஓட்டத் தோப்பு என்ற இடத்தில் புதை யுண்ட சிவலிங்கத்தின் மூன்றடி அளவிலான பகுதி மட்டும் வெளியே தெரியும் நிலையில் உள்ளது.
இந்த இடத்தில் ஆண்டுதோறும் ராஜராஜ சோழனின் சதய திருவிழாவின்போது உடையாளூர் கிராம மக்களும், வரலாற்று ஆய்வாளர்களும் பூஜை செய்து வருகின்றனர்.
ஆயிரம் படைகளை வைத்து தென்னிந்தியா மட்டுமின்றி இலங்கை, லட்சத்தீவு, மாலத்தீவு உள்ளிட்ட ஏராளமான அயல்நாடு களையும் பிடித்து, உலகத்தை முதன் முதலாக ஆட்சி செய்த தமிழன் என்ற பெருமையைப் பெற்றவர் ராஜராஜ சோழன். அவருடைய சமாதி இருப்பதாகக் கூறப்படும் இடத்தை அகழ் வாராய்ச்சி செய்ய வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்களும், தமிழ் அறிஞர்களும், உடையாளூர் பகுதி மக்களும் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதற்கிடையில் ராமநாதபுரத் தைச் சேர்ந்த வழக்கறிஞர் திரு முருகன் என்பவர் உயர் நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அதில், மகாராஷ்டிராவில் சிவாஜி சிலையும், குஜராத்தில் சர்தார் வல்லபாய் படேல் சிலையும் பல கோடி ரூபாய் செலவில் அரசால் அமைக்கப்பட்டுள்ளது.
மணி மண்டபம்
ஆனால், தென்னிந்தியா முழுவதும் ஆட்சி புரிந்து, பல நாடுகளையும் வென்ற ராஜராஜ சோழனின் சமாதி இருப்பதாகக் கூறப்படும் உடையாளூரில் தொல் லியல் துறையினர் இதுவரை ஆய்வு எதுவும் செய்யவில்லை. எனவே, தொல்லியல் துறையினர் அங்கு ஆய்வு செய்து, அரசு சார்பில் மணிமண்டபமும், இந்தியப் பெருங்கடல் அல்லது வங்காள விரிகுடா ஆகிய இடங் களில் ஏதாவது ஒரு இடத்தில் ராஜ ராஜனின் உயரமான சிலையையும் அமைக்க வேண்டும் எனக் கோரி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை கடந்த ஏப்.11-ம் தேதி விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர், உடையாளூரில் ராஜராஜ சோழன் சமாதி இருப்பது உண்மையா என நவீன முறையில் அகழ்வாராய்ச்சி செய்து அதன் அறிக்கையை 6 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.
இதையடுத்து, தமிழக தொல்லி யல் துறை துணை இயக்குநர் ஆர்.சிவானந்தம், தொல்லியல் துறை அலுவலர்கள் தங்கதுரை, ஜெ.பாஸ்கர், கல்வெட்டு ஆய் வாளர்கள் லோகநாதன், சக்தி வேல், பேராசிரியர் ரமேஷ் ஆகியோர் கொண்ட குழுவினர் உடையாளூரில் ராஜராஜ சோழன் சமாதி இருப்பதாகக் கூறப்படும் பகுதியில் 10 ஏக்கர் பரப்பளவில் நேற்று ஆய்வுப் பணியை தொடங்கினர்.
கணினி மூலம் பதிவு
அப்போது, ஹெலிகேமில் (ஆளில்லா குட்டி விமானத்தில்) நவீன கேமராக்களை பொருத்தி பூமியின் மேற்பரப்பு மற்றும் பூமிக் கடியில் 2 மீட்டர் ஆழத்தில் நீரோட் டம், பழமையான கட்டிடங்களின் தன்மை, தற்போதைய கட்டிடங்கள் ஆகியவற்றைப் படம்பிடித்ததுடன், அதன் கோணங்களையும் கணினி மூலம் பதிவு செய்து வரு கின்றனர். மேலும் உடையாளூரில் பால்குளத்து அம்மன் கோயில், கைலாசநாதர் கோயில் உள்ளிட்ட பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண் டுள்ளனர். இந்த ஆய்வு இன்றும் (ஏப்.23) நடைபெறவுள்ளது.
இந்த ஆய்வு குறித்த அறிக்கை தமிழக தொல்லியல் துறை ஆணையத்துக்கு அனுப்பிவைக்கப் பட்டு, பின்னர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும் என கள ஆய்வில் ஈடுபட்டுள்ள தொல்லியல் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT