Published : 13 Apr 2019 12:00 AM
Last Updated : 13 Apr 2019 12:00 AM
கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் தேமுதிக மாநில துணைப் பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷும், திமுக முன்னாள் அமைச்சர் க.பொன்முடியின் மகன் கவுதம சிகாமணியும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளகள்ளக்குறிச்சி (தனி), ரிஷிவந்தியம், சங்கராபுரம், சேலம் மாவட்டத்தில் உள்ள தனித் தொகுதிகளான ஆத்தூர், கெங்கவல்லி, ஏற்காடு ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கியது கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி.
இதில் சேலம் மாவட்டத்தின் 3 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் கள்ளக்குறிச்சி தொகுதி ஆகிய நான்கும் அதிமுக வசம்உள்ளன. (கள்ளக்குறிச்சி எம்எல்ஏபிரபு, தற்போது தினகரன் அணியில் உள்ளார்.) ரிஷிவந்தியம், சங்கராபுரம் திமுக வசம் உள்ளன. அதிமுக கூட்டணி சார்பில் களமிறங்கியுள்ள தேமுதிக வேட்பாளர் சுதீஷ், ஏற்கெனவே இதே தொகுதியில் கடந்த 2009-ல் தனித்துப் போட்டியிட்டபோது, 1.40 லட்சம் வாக்குகள் பெற்றிருந்தார். தற்போது பலமான கூட்டணியில் களம் காண்பதால், வெற்றி பெறும் நம்பிக்கையோடு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
இவருக்கு ஆதரவாக முதல்வர்பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி, தேமுதிக பொருளாளர் பிரேமலதா ஆகியோர் பிரச்சாரம் செய்துள்ளனர்.
அதிகாலையிலேயே பிரச்சாரத்தை தொடங்கும் சுதீஷ், ‘பொய்யான வாக்குறுதிகளை அளிக்க விரும்பவில்லை. வெற்றி பெற்ற பிறகு, தொகுதி மக்களின் தேவைக்கேற்ற திட்டங்களை கட்டாயம் செயல்படுத்துவேன்’ என்று கூறி வாக்கு சேகரிக்கிறார். ‘‘இத்தொகுதிக்கு உட்பட்ட மணலூர்பேட்டைதான் என் சொந்த ஊர்.
இங்குள்ள விவசாய மக்களின் பிரச்சினைகளை நன்கு அறிந்தவன். விவசாயம் சார்ந்த வர்த்தக மையம், உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை இத்தொகுதிக்காக வகுத்துள்ளேன்’’ என்று கூறி பிரச்சாரம் செய்கிறார்.
எதிர் முகாமில், திமுக முன்னாள் அமைச்சர் க.பொன்முடியின் ஆசியோடு களம் காண்கிறார் அவரது மகன் கவுதம சிகாமணி. இவருக்குஆதரவாக திமுக தலைவர் மு.க.
ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்துள்ளனர்.
திமுக எம்எல்ஏக்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயனுடன் கிராமம் கிராமமாக சென்று வாக்கு திரட்டி வருகிறார் கவுதம சிகாமணி. ‘‘கல்வியில் பின்தங்கி இருக்கும் கள்ளக்குறிச்சி பகுதியில் கல்வித்தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுப்பேன். நவீன அரிசி ஆலைகளை மேம்படுத்துவேன். தொழிற்சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுப்பேன்’’ என்று கூறி கவுதம சிகாமணி வாக்கு சேகரித்து வருகிறார்.
கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் அமமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ கோமுகி மணியன், மக்கள் நீதி மய்யத்தின் கணேஷ், நாம் தமிழர் சார்பில் சர்புதீன் ஆகியோரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இத்தொகுதியில் சுயேச்சைகள் உட்பட 24 பேர் களத்தில் உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT