Last Updated : 16 Apr, 2019 12:02 PM

 

Published : 16 Apr 2019 12:02 PM
Last Updated : 16 Apr 2019 12:02 PM

விருதுநகரில் வேட்பாளர்கள் இறுதிக்கட்ட பிரச்சாரம்: வெற்றிக்கனியை பறிப்பது யார்?

விருதுநகர் தொகுதியில் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் தேமுதிக சார்பில் அழகர்சாமி, காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூர், அமமுக சார்பில் பரமசிவ அய்யப்பன், மக்கள் நீதி மய்யம் சார்பில் முனியசாமி, நாம் தமிழர் கட்சி சார்பில் அருள்மொழித்தேவன் உட்பட 29 பேர் களத்தில் உள்ளனர்.

அங்கீகரிக்கப்பட்ட கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் ஒருசிலர் தவிர, மற்ற வேட்பாளர்கள், பிற கட்சிகளின் பினாமி வேட்பாளர்களே.

விருதுநகர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. தேமுதிக வேட்பாளர் அழகர்சாமி வாக்குக் கேட்டுச் செல்லும்போது ஜீப்பில் நின்றுகொண்டு கும்பிடுவது மட்டுமே அவருக்குக் கொடுக்கப்பட்ட பணியாக நினைத்துப் பிரச்சாரம் செய்கிறார். அவருடன் செல்லும் விஐபிகளே பிரச்சாரம் செய்கின்றனர்.

வேட்பாளர் அழகர்சாமிக்கு ஆளும்கட்சி பலம் இருப்பதாலும், அதிமுகவுக்கென இருக்கும் வாக்கு களைச் சிதறாமல் பெற பூத் கமிட்டி வரை 7 குழுக்கள் அமைத்துத் திட்டமிட்டு அதிமுகவினர் செயலாற்றி வருகின்றனர்.

காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளரும் முன்னாள் எம்.பி.யுமான பி.மாணிக்கம்தாகூர் தற்போது கிராமப்புறங்களில் தீவிரப் பிரச்சாரம் செய்கிறார். 100 நாள் வேலைத் திட்டம், உயர் கல்வி பயில மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கியது், சீனப் பட்டாசை இறக்குமதி செய்யத் தடை யாணை பெற்றது போன்றவை இவரது பிரச்சாரத்தின் முக்கிய அம்சங்கள்.

திமுக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சியினரின் ஆதரவும், தொகுதியில் குறிப்பாக கிராமப்புறங்களில் தனக்கென உள்ள தனிப்பட்ட செல்வாக்கும் தன்னைக் கரை சேர்க்கும் என அவர் நம்புகிறார்.

அமமுக வேட்பாளர் பரமசிவ அய்யப்பன் நிதி நிறுவன அதிபர்.இவருக்குச் சமுதாயம் சார்ந்த வாக்குகள், இளைஞர்களின் வாக்குகளைக் கவரும் வகையில் அமமுக பிரச்சார வியூகம் அமைந்துள்ளது. திராவிடக் கட்சி அதிருப்தியாளர்களின் வாக்குகள் அமமுகவுக்குக் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

நாம் தமிழர் வேட்பாளர் அருள்மொழித்தேவன், மக்கள் நீதி மய்ய வேட்பாளர் முனியசாமி ஆகியோரும் சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்விரு கட்சிகளும் கணிசமான வாக்குகளைப் பிரிக்கும் என்பதால் திராவிடக் கட்சிகளுக்கான வாக்கு வங்கி சரியும் வாய்ப்பு உள்ளது எனக் கூறப்படுகிறது.

இருப்பினும் வாக்காளர்களின் முடிவே இறுதியானது என்பதால் அவர்களின் தீர்ப்பைப் பொருத்தே முடிவு இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x