Published : 06 Apr 2019 04:45 PM
Last Updated : 06 Apr 2019 04:45 PM
ஊதியம் தராததால் புதுச்சேரியில் அரசு சார்பு நிறுவனங்களில் பணிபுரியும் 15 ஆயிரம் குடும்பங்கள் நோட்டாவில் வாக்களிக்க முடிவெடுத்துள்ளனர். இதனால் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் அதிர்ச்சியடைந்துள்ளன.
புதுச்சேரியில் அரசு சார்பு நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்களில் பல மாதங்களாக ஊதியம் தரப்படவில்லை. ஓய்வு பெற்றோருக்கு ஓய்வூதியம், ஓய்வூதியச் சலுகைகளும் கிடைக்கவில்லை. பலமுறை போராட்டம் நடத்தியும் பலனில்லை.
சம்பளம், ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியச் சலுகைகள் பெறாமல் பாதிக்கப்பட்ட அனைத்துப் பிரிவு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் கூட்டணி என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர். இவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் விட்டல், உதயகுமார், வள்ளி, கோவர்த்தனன் ஆகியோர் கூறியதாவது:
"புதுச்சேரியில் ஊதியம் இல்லாமல் ஏராளமானோர் அரசு சார்பு நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக மகளிர் ஆணையத்தில் பணியாற்றி வந்த 28 ஊழியர்களுக்கு 96 மாதங்களாக ஊதியம் தரவில்லை. கதர் வாரிய ஊழியர்களுக்கு 8 மாதங்களாக ஊதியம் தரவில்லை. ரேஷன் கடை ஊழியர்களுக்கு 22 மாதங்களாக ஊதியம் தரவில்லை. பாப்ஸ்கோ, பாசிக் நிறுவனங்களில் நடந்த நிர்வாகச் சீர்கேடுகளால் 21 முதல் 60 மாதம் ஊதியம் இல்லை.
ஊழலை தட்டிக்கேட்ட பாசிக் ஊழியர்கள் எட்டு பேர் நிரந்தரமாகப் பணியிலிருந்து நீக்கப்பட்டனர். பல கோடி ஊழல் இங்கு நிரூபிக்கப்பட்டது. அதிகாரிகளுக்கு சாதகமாக பல கோடி ரூபாய் ஊழலை புதுச்சேரி அரசு தள்ளுபடி செய்தது. மொத்தம் 15 ஆயிரம் குடும்பங்கள் நிர்கதியாகியுள்ளோம். இது கடந்த கால என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கி தற்போதைய காங்கிரஸ் அரசு ஆட்சி வரை நீடிக்கிறது. நாங்களும் மனிதர்கள்தான் என்பதை உணர்த்தவே நோட்டாவுக்கு வாக்களிக்க முடிவு எடுத்துள்ளோம்.
பாதிக்கப்பட்டோர் அனைவரும் இணைந்து இம்முறை மவுனப்புரட்சி செய்ய உள்ளோம்" என்று குறிப்பிடுகின்றனர்.
ஊதியம் தரக்கோரி போராட்டத்திலும் தற்போதும் பாப்ஸ்கோ ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இன்று (சனிக்கிழமை) காத்திருப்பு போராட்டத்தில் தங்கள் ஊதியத்துக்காக மேற்கொண்டுள்ளனர்.
அதிர்ச்சியில் கட்சிகள்:
15 ஆயிரம் குடும்பத்தினர் கடந்த ஆட்சியில் தொடங்கி இந்த ஆட்சி வரை பாதிக்கப்பட்டுள்ளதால் நோட்டாவை நாட முடிவு எடுத்துள்ள இவ்விவகாரம் கட்சிகளிடம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஆளுங்கட்சியான காங்கிரஸ் கட்சியும், எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் கட்சியும் அதிர்ச்சியில் உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT