Published : 03 Apr 2019 11:01 AM
Last Updated : 03 Apr 2019 11:01 AM
சூளகிரி அருகே 4 தலைமுறையாக சேர்ந்து வாழும் கூட்டுக் குடும்பத்தில் மொத்தம் 40 வாக்காளர்கள் இருக்கின்றனர். இதனால், தேர்தல் நேரங்களில் இவர்களது வீடு களைகட்டிவிடுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியம் உல்லட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் எட்டிப்பள்ளி. இந்த கிராமத்தை சேர்ந்த தம்பதி குண்டேகவுடு (65) - கிருஷ்ணம்மாள் (55). குண்டேகவுடுவின் தம்பி பில்லேகவுடு. இவர்கள் 4 தலைமுறையாக கூட்டுக் குடும்பமாக ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.
இந்த குடும்பத்தில் மொத்தம் 60 பேர் உள்ளனர். தங்கள் குடும்பம் பற்றி குண்டேகவுடுவின் குடும்ப உறுப்பினரான விவசாயி முனுசாமி கூறியதாவது:
விவசாயம்தான் எங்கள் பிரதான தொழில், வாழ்வாதாரம். 150 ஏக்கரில் கரும்பு, வாழை, பீன்ஸ், கொத்தமல்லி, புதினா உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள், கீரை வகைகளை சாகுபடி செய்கிறோம். 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலையும் வழங்கி வருகிறோம்.
எங்கள் குடும்ப உறுப்பினர்களில் சிலர் கல்வி, வேலைக்காக வெளியூர்களிலும், வெளிநாடுகளிலும் வசிக்கின்றனர். வீட்டில் ஒரு விசேஷம் என்றால், அனைவரும் வந்துவிடுவார்கள். வீடே கலகலப்பாகிவிடும்.
வீட்டில் திருமணம் என்றால், ஒரே நேரத்தில் நாலைந்து திருமணங்களுக்கு ஏற்பாடுகள் நடக்கும். ஒரே பந்தல் அமைத்து, எல்லா திருமணங்களையும் ஒன்றாக நடத்துவோம். இந்த பகுதியிலேயே பெரிய குடும்பம் என்பதால், அனைத்து கட்சிகளின் எம்.பி.,எம்எல்ஏக்களும் கலந்துகொள்வார்கள்.
எங்கள் குடும்பத்தில் 40 வாக்காளர்கள் இருக்கிறோம். தேர்தல் சமயங்களில், அனைத்து கட்சியினரும் எங்கள் வீட்டுக்கு வந்து வாக்கு கேட்பார்கள்.
தேர்தலும் ஒரு விசேஷம்தானே. அதனால், வெளியூர்களில் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் ஒருநாள் முன்பே வீட்டுக்கு வந்துவிடுவார்கள். வீடே விழாக்கோலம் பூண்டுவிடும்.
நாங்கள் அனைவரும் ஒன்றாக கலந்து பேசி, மக்களுக்கும், விவசாயத்துக்கும் யார் நல்லது செய்வார்கள் என்று தீர்மானித்து வாக்களிப்போம். வரும் மக்களவைத் தேர்தலிலும் எங்கள் குடும்ப உறுப்பினர்கள் 40 பேரும் தவறாமல் வாக்களிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT