Published : 14 Apr 2019 12:00 AM
Last Updated : 14 Apr 2019 12:00 AM

நீலகிரி மக்களவைத் தொகுதியில் இருமுனைப் போட்டி: வெற்றியை தீர்மானிக்கும் அமமுக?

நீலகிரி மக்களவைத் தனி தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா, அதிமுக வேட்பாளர் எம்.தியாகராஜன் இடையே கடும் போட்டி நிலவுகிறது. அமமுக வேட்பாளர் ராமசாமிக்கு கிடைக்கும் வாக்குகளே வெற்றி யாருக்கு என்று தீர்மானிக்கும் எனக் கூறப்படுகிறது.

நீலகிரி மக்களவைத் தொகுதியில் ஆ.ராசா (திமுக), எம்.தியாகராஜன் (அதிமுக), மா.ராமசாமி (அமமுக) உட்பட 10 பேர் களத்தில் உள்ளனர். இதில், திமுக, அதிமுக இடையே தான் போட்டி நிலவுகிறது. அமமுக களத்தில் இறங்கியுள்ளதாலும், தொண்டர் பலம் கணிசமாக இருப்பதாலும் திமுக மற்றும் அதிமுகவின் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக அமமுக மாறியுள்ளது.

பொதுத் தொகுதியாக இருந்து, 2009-ம் ஆண்டு நீலகிரி தனித் தொகுதியாக மாறியது. அப்போது, திமுக கொள்கை பரப்புச் செயலா ளர் ஆ.ராசா போட்டியிட்டதால், நீலகிரி தொகுதி விஐபி அந்தஸ்து பெற்றது. 2009-ல் வெற்றி பெற்ற ராசா, 2014-ல் அதிமுக வேட்பாளர் சி.கோபாலகிருஷ்ணனிடம் தோல்வியைத் தழுவினார். தற்போது 3-வது முறையாக திமுக வேட்பாளராக ஆ.ராசா களமிறங்கியுள்ளார்.

34 ஆண்டுகளுக்குப் பிறகு, 2014-ம் ஆண்டு நீலகிரி மக்களவைத் தொகுதியை அதிமுக கைப்பற்றியது. அதிலும், ஒரு லட்சத்து 4 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் சி.கோபாலகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.

இந்த முறை சி.கோபால கிருஷ்ணனுக்கு சீட் மறுக்கப்பட்டு, பொள்ளாச்சி தொகுதி முன்னாள் எம்பியான எம்.தியாகராஜனுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு, கோபாலகிருஷ்ணன் மீதான அதிருப்தியே காரணம். அவர் வெற்றி பெற்று நன்றி தெரிவிக்கக்கூட எந்த தொகுதிக்கும் செல்லவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

இந்நிலையில், இந்த தேர்தலில் வெற்றி பெற திமுகவும், அதன் வேட்பாளர் ஆ.ராசாவும் தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே களப்பணியை தொடங்கினர். இதற்காக திமுக நடத்திய ஊராட்சி சபைக் கூட்டங்களை பயன்படுத்திக் கொண்டனர்.

அதிமுக தரப்பில் மக்களுக்கு பரிச்சயம் இல்லாத வேட்பாளர் என்ற புகார் கட்சியினரிடையே இருந்தது. ஆனால், சமவெளிப் பகுதியில் அதிமுக மற்றும் பாஜகவுக்கு உள்ள ஆதரவு அதிமுகவை சுறுசுறுப்பாக்கியது. இந்நிலையில், மலை மாவட்டத்துக்கு அதிமுக வேட்பாளரை ஆதரித்து முதல்வர், துணை முதல்வர் பிரச்சாரம் செய்தது அக்கட்சி மற்றும் வேட்பாளர் எம்.தியாகராஜனுக்கு புது உற்சாகத்தை கொடுத்துள்ளது.

அதிமுகவின் வெற்றிக்கு அமமுக தடையாக இருக்கலாம் என அதிமுகவினரே அஞ்சுகின்றனர். அதிமுக வாக்குகளை அமமுக பிரித்தால், திமுக வெற்றி எளிதாகும் என திமுகவினர் நம்புகின்றனர். ஆ.ராசா மீது தொடர்ந்து 2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து அதிமுகவினர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.

ஆ.ராசா தனது பிரச்சாரத்தில், காங்கிரஸின் தேர்தல் அறிக்கைக்கு முன்னுரிமை அளிக்கிறார். தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ள வறுமையை ஒழிக்க ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் நிதி குறித்து பொதுமக்களிடம் அழுத்தம் திருத்தமாக தெரிவிக்கிறார்.

நோட்டா தாக்கம்?

கடந்த தேர்தலில் நீலகிரி தொகுதியில் அதிமுக, திமுக-வுக்கு அடுத்ததாக 46,559 வாக்குகள் நோட்டாவுக்கு பதிவானது. நாட்டிலேயே, நீலகிரியில் தான் நோட்டாவுக்கு அதிக வாக்குகள் பதிவாகின.

நீலகிரி மக்களவைத் தொகுதியில் மொத்தமுள்ள 13.49 லட்சம் வாக்காளர்களில், மலை மாவட்டமான நீலகிரிக்கு உட்பட்ட உதகை, குன்னூர், கூடலூர் தொகுதிகளில் 5.5 லட்சம் வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர். மேட்டுப்பாளையம், அவிநாசி, பவானிசாகர் தொகுதிகளில்தான் 7.7 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதனால், சமவெளிப் பகுதியிலுள்ள வாக்காளர்களே வெற்றியை தீர்மானிக்கும் சக்திகளாக உள்ளனர்.

எனவே, யார் வெற்றி பெற்றாலும் குறைந்த வாக்கு வித்தியாசம்தான் இருக்கும் என்பதே கள நிலவரமாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x