Published : 17 Apr 2019 08:36 PM
Last Updated : 17 Apr 2019 08:36 PM
வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்தும், அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளராக புதிய நீதிக்கட்சி தலைவரான ஏ.சி.சண்முகமும் போட்டியிட்டனர்.
இந்நிலையில் கடந்த மார்ச் 27 அன்று காட்பாடியில் உள்ள துரைமுருகனின் வீடு மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்த் ஆகியோருக்கு சொந்தமான பள்ளி, கல்லூரியில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் கதிர் ஆனந்த் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் இருந்து ரூ. பல கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் வேலூர் தொகுதியில் தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்று நடைபெறவிருந்த தேர்தலை ரத்து செய்து குடியரசுத் தலைவர் நேற்று உத்தரவிட்டார்.
தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளரான ஏ.சி.சண்முகம் மற்றும் சுயேட்சை வேட்பாளரான சுகுமார் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை விடுமுறை தினமான இன்று அவசர வழக்காக நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்றது.
அப்போது ஏ.சி.சண்முகம் சார்பில் மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன் ஆஜராகி, ''வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளரான கதிர் ஆனந்த் பணப்பட்டுவாடா செய்ததாகத்தான் வருமான வரித்துறை புகார் அளித்துள்ளது. அவரைத் தவிர்த்து வேறு எந்த வேட்பாளர் மீதும் முறைகேடு புகார் இல்லை. ஒரு வேட்பாளர் முறைகேடு செய்தார் என்பதற்காக ஒரு தொகுதிக்கு நடைபெறவுள்ள தேர்தலை ஒட்டுமொத்தமாக ரத்து செய்வது என்பது சட்டவிரோதம்.
அதுவும் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுவிட்டால் தேர்தல் நடவடிக்கைகளில் குடியரசுத் தலைவர் தலையிட முடியாது. அசாதாரண சூழல், வாக்குச்சாவடியைக் கைப்பற்றுதல், கலவரம் போன்ற சம்பவங்கள் ஏற்பட்டால் மட்டுமே தேர்தலை ரத்து செய்ய முடியும். அப்படி எந்த சூழலும் வேலூர் தொகுதியில் இல்லை. வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துவிட்டனர். இதனால் வாக்காளர்களுக்கு பணம் சென்றடையவில்லை. எனவே ரத்து செய்யப்பட்ட தேர்தலை திட்டமிட்டபடி நாளை நடத்த உத்தரவிட வேண்டும்'' என்றார்.
இதேபோல சுயேட்சை வேட்பாளர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், ''இந்தியா முழுவதும் ரூ. ஆயிரம் கோடிக்கு மேல் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அப்படியென்றால் எல்லா தொகுதியிலும் தேர்தலை ரத்து செய்து விட முடியுமா?. திமுக வேட்பாளரான கதிர் ஆனந்த் மீது மட்டும் தான் குற்றச்சாட்டு உள்ளது எனும்போது அவர் மீது மட்டும் நடவடிக்கை எடுத்துவிட்டு தேர்தலை நடத்தலாமே? சுயேட்சை வேட்பாளரான எனது கட்சிக்காரர் ஏற்கெனவே இந்த தேர்தலுக்காக பல வகைகளில் செலவு செய்துள்ளார். இப்போது இந்த தேர்தலை ரத்து செய்வதால் அவர் பாதிக்கப்பட்டுள்ளார். அரசியல் கட்சியினர் போல ஒரு சுயேட்சை வேட்பாளர் சர்வ சாதாரணமாகப் போட்டியிட முடியாது. நாட்டிலேயே இந்த தொகுதியில் மட்டும் தேர்தலை ரத்து செய்வதை ஏற்க முடியாது'' என வாதிட்டார்.
தேர்தல் ஆணையம் சார்பில் வழக்கறிஞர் ஆர்.நிரஞ்சன் ராஜகோபாலன் ஆஜராகி, ''வேலூர் தொகுதியில் பணம் மட்டும் பறிமுதல் செய்யப்படவில்லை. வாக்காளர் பட்டியல், பூத் ஸ்லிப் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது'' எனக்கூறி ரகசிய அறிக்கையை நீதிபதிகளிடம் தாக்கல் செய்தார்.
தொடர்ந்து நிரஞ்சன் வாதிடுகையில், ''வேலூர் தொகுதியில் தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்துவதற்கான சூழல் தற்போது இல்லை. அதற்கான ஆதாரங்கள் ஆணையத்துக்கு கிடைத்த பிறகே தேர்தலை ரத்து செய்ய பரிந்துரைக்கப்பட்டது. அந்த பரிந்துரையின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் தான் இந்த தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். ஒரு தொகுதிக்கான தேர்தலை ரத்து செய்ய தேர்தல் ஆணையத்துக்கு முழுஉரிமை உள்ளது. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. ஒரு தொகுதியில் ஒரே ஒரு வேட்பாளர் முறைகேடு செய்தார் என்றாலும், அந்த தொகுதி முழுவதும் உள்ள வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடந்துள்ளது. அதன் அடிப்படையில் தான் இந்த தேர்தலை ரத்து செய்து ஆணையம் உத்தரவிட்டுள்ளது'' என்றார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இன்று மாலை பிறப்பித்த உத்தரவில், ''வருமான வரித்துறை அதிகாரிகள் அளித்த அறிக்கை, தேர்தல் செலவின சிறப்பு பார்வையாளர்கள் அளித்த அறிக்கைகளின் அடிப்படையில் தான் வேலூர் தொகுதிக்கான தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தலை அறிவிக்கும் அதிகாரம் படைத்த ஆணையத்துக்கு தேர்தலை ரத்து செய்யும் அதிகாரமும் உள்ளது. ஒரு வேட்பாளர் முறைகேட்டில் ஈடுபட்டார் என்பதற்காக தேர்தலை ரத்து செய்வது தவறு என்ற மனுதாரர்கள் தரப்பு வாதத்தை ஏற்க முடியாது. போதுமான ஆதாரங்களின் அடிப்படையில் தான் இந்த தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. அதேபோல ஒரு தொகுதிக்கான தேர்தலை ரத்து செய்வதைத் தவிர வேறு வழியில்லை என தேர்தல் ஆணையம் கருதினால், அந்த தேர்தலை ரத்து செய்து ஆணையம் பிறப்பிக்கும் உத்தரவில் தலையீடு செய்ய முடியாது'' எனக்கூறி மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT