Last Updated : 22 Apr, 2019 04:52 PM

 

Published : 22 Apr 2019 04:52 PM
Last Updated : 22 Apr 2019 04:52 PM

பணம் வாங்கிக்கொண்டு வாக்களிக்காதவர்களுக்கு கட்சியினர் மிரட்டல்: உறவினர் வீடுகளில் தஞ்சம்

சாதகமாக வாக்களிப்பதாக பணம் வாங்கிக் கொண்டு வாக்குச்சாவடி பக்கமே செல்லாதவர்களைத் தேடி வந்து கட்சியினர் திட்டுவதும், கொடுத்தபணத்தை கேட்கும் நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் தேனி தொகுதியின் பல இடங்களில் தேர்தல் முடிந்தும் சர்ச்சை குறைந்தபாடில்லை

தேனி தொகுதி விஐபி.தொகுதியாக மாறியதில் இருந்தே பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாத நிலை ஏற்பட்டது. காங்கிரஸ், அதிமுக, அமமுக என்று மூன்று கட்சிகளிலும் பிரபல வேட்பாளர்கள் போட்டியிட்டதால் பிரசாரம், பொதுக்கூட்டம், பேச்சாளர்களின் வருகை, பணவிநியோகம் என்று களைகட்டியது.

அதே போல் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதிலும் கட்சிகள் மும்முரம் காட்டின. ஒரு ஓட்டிற்கு ரூ.ஆயிரம், ரூ.500 என்று தங்கள் பொருளாதார பலத்திற்கு ஏற்ப பணத்தை வாரி இறைத்தன. இதற்காக ஒரு வாக்குச்சாவடிக்கு குறிப்பிட்ட நபர்களை நியமித்து, அதில் உள்ளவர்கள் வீடுவாரியாக பிரிக்கப்பட்டு பணத்தை வாக்காளர்களிடம் கொண்டு போய் சேர்த்தனர். பிரதான கட்சிகள் அனைத்தும் இதே முறையை கையாண்டன.

இது ஒருபுறம் இருக்க... ஓட்டுப்பதிவு அன்று பணம் வாங்கியவர்களை வாக்குச்சாவடிக்கும் அனுப்புவதற்கும் குழு ஏற்பாடு செய்யப்பட்டது. அவர்கள் அடிக்கடி தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளுக்குச் சென்று இது குறித்து அறிவுறுத்திக் கொண்டே இருந்தனர்.

சிலவீடுகளில் வெளியூரில் உள்ள குடும்ப உறுப்பினர்களுக்கும் சேர்த்து பணம் வாங்கி இருந்தனர். ஆனால் ஓட்டுப்பதிவு அன்று பலரும் சொந்த ஊர் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் அவர்களால் வாக்களிக்க முடியவில்லை. இன்னும் சிலரோ வாக்களிப்பதில் ஆர்வம் இல்லாமல் விட்டு விட்டனர்.

ஓட்டுப்பதிவு முடிந்ததும் பட்டியலை சரிபார்த்த கட்சியினர் பணம் வாங்கிய பலரும் வாக்களிக்காமல் இருப்பதைக் கண்டு அதிர்ச்ச்சி அடைந்தனர். எனவே பட்டியலில் உள்ளவர்களின் பெயரைக் குறித்து வைத்துக் கொண்டு வார்டுகளுக்குச் சென்று இது குறித்து கேள்வி கேட்டனர். இதனால் இருதரப்பிலும் சர்ச்சை ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது.

சில இடங்களில் வாங்கிய பணத்தை வாக்காளர்கள் கோபத்தில் கட்சியினரிடம் கொடுத்துள்ளனர். பல இடங்களில் வாக்களிக்க முடியாததிற்கு காரணம் கூறியதுடன், பணத்தை செலவு செய்துவிட்டதாக தெரிவித்தனர். இவர்களை கட்சி கிளை நிர்வாகிகள் கடுமையாக பேசி வருகின்றனர்.

இது போன்ற நிலை தேனி, ஆண்டிபட்டி, பெரியகுளம் உள்ளிட்ட தொகுதியின் பல இடங்களில் உள்ளது. இதனால் தேர்தல் முடிந்தும் கட்சிகள் வாக்காளர்களை தேடி வந்து கொண்டு இருப்பதால் சிலர் வெளியூர்க்கும், உறவினர் வீடுகளிலும் தஞ்சம் அடைந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x