Last Updated : 15 Apr, 2019 11:46 AM

 

Published : 15 Apr 2019 11:46 AM
Last Updated : 15 Apr 2019 11:46 AM

இன்று திருநங்கைகள் தினம்: அமைதியான குடும்ப வாழ்க்கை வாழ விரும்பும் திருநங்கைகள்

ஏப்ரல் 15-ம் தேதியான இன்றைய நாளை திருநங்கைகள் நாள் என அரசு அறிவித்துள்ளது. இன்றைய நாள் தமக்கான நாள் என்று பெரும்பாலான திருநங்கைகளுக்கு தெரியவில்லை.

கூவாகம் திருவிழாவுக்காக வந்திருந்த திருநங்கைகள் சிலரிடம் அவர்களின் வாழ்க்கை முறை பற்றி கேட்டபோது அவர்கள் கூறியதாவது:

"முதலில் நாங்கள் யார் என சொல்லமாட்டோம். அப்படியே சொன்னாலும் அது பொய்யாகவே இருக்கும் என்றவர்கள் தொடர்ந்து கூறியதாவது,

வீட்டில் செல்ல பிள்ளையாக வளர்ந்து ஒரு கட்டத்தில் திருநங்கை என அறிந்தவுடன் வீட்டைவிட்டு விரட்டப்படும் திருநங்கை, சொந்த ஊரைவிட்டு வெளியேறி ஏதோ ஒரு ஊரில் உள்ள ஒரு திருநங்கையிடம் அடைக்கலமாவாள். அந்த மாவட்டத்தில் உள்ள 'நாயக்' எனப்படும் தலைவியின் கட்டுப்பாட்டில் வாழ்க்கையை ஆரம்பிப்பாள்.

எனக்கான வருவாயை நாங்களே ஈட்டவேண்டும். அதில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தொகையை 'நாயக்'கிடம் அளிக்கவேண்டும், அவருடன் தங்கி கொள்ளலாம். ஒரு வேளை உணவு உட்கொள்ளலாம், எங்கள் உடமைகளை பாதுக்காப்பாக வைத்து கொள்ளலாம். உடல்நிலை சரியில்லாமல் போனால் சிகிச்சை அளிக்கவும், சட்ட சிக்கலில் சிக்கினால் மீட்கவும், அரசின் உதவியை பெறவும் நான் அளிக்கும் தொகை எங்களுக்காக 'நாயக்' செலவழிப்பார்கள்.

அதே ஊரில் மாற்று கருத்து கொண்ட வேறு ஒரு 'நாயக்'கும் (தலைவி) இருப்பார். ஒருவேளை நாங்கள் சார்ந்திருக்கும் 'நாயக்'கிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அங்கிருந்து விலகி எனக்கு ஒத்த கருத்துடையை 'நாயக்'கிடம் இணைந்துகொள்ள என் திறமை , வருவாய் என் பெர்சனாலிட்டிக்கு தகுந்தாற்போல கணக்கிட்டு 'நாயக்' சொல்லும் ஒரு குறிப்பிட்ட தொகையை அபராதமாக செலுத்திவிட்டு அங்கிருந்து வெளியேறுவோம்..

பெரும்பாலும் திருநங்கைகள் ரயிலில் , ரோடில், டாஸ்மாக் பாரில், கடற்கரையில் கையேந்தும் நிலையிலேயே வாழ்கின்றனர். ஒரு சிலர் அதிகபட்சமாக பாலியல் தொழில் செய்கிறார்கள். ஒவ்வொரு திருநங்கையும் குடும்ப வாழ்க்கையே வாழ ஆசைப்படுகிறார். ஆனால் இச்சமூகம் அதை அங்கரிப்பது இல்லை. உயிர்கொல்லி நோய் கொண்டவரிடம் காட்டும் கரிசனத்தைக்கூட எங்களுக்கு காட்டுவதில்லை. வட மாநிலங்களில் திருநங்கைகளுக்கு நல்ல மரியாதை அளிக்கப்படுகிறது. ஆனால் தென் இந்தியாவில் அந்த நிலை இல்லை.

குடும்பத்தாரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட திருநங்கைகளை நீங்கள் எங்கேனும் கண்டாலும் உங்களால் அவர்களை உணர முடியாது. ஏனெனில் மனோரீதியாக தாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டால் தங்களது உடல்மொழி, ஆடை அலங்காரத்தில் கண்ணியம் காக்கின்றனர். ஆனால் அப்படி ஒரு சூழல் அமையாதவர்கள் தங்களை பாதுகாத்து கொள்ள உடல் மொழி, கண்ணிய குறைவாக நடந்து சராசரி மனிதனை விலக்கி வைக்கிறார்கள்.

தானும் அமைதியான குடும்ப வாழ்க்கை வாழவேண்டும் என அனைத்து திருநங்கையும் ஆசைப்படுகிறார்கள். பொய்யாககூட தன்னை விரும்புவதாக சொன்னால் (அது பொய் என தெரிந்தும்) அதற்கு உடன்படுகிறார்கள். அத்தகைய திருநங்கைகள் அவர்களே தங்கள் காதல் கணவனுக்கு வேறொரு பெண்ணைத் தானே திருமணமும் செய்துவைப்பது, அவர்களுடைய குடும்ப செலவுக்கு திருநங்கைகள் சம்பாத்தித்து கொடுத்துவிட்டு விருப்பத்துடன் ஆசை நாயகியாகவும் வாழ்கிறார்கள்.

பொதுவாக திருநங்கைகளுக்கு தாழ்வு மனப்பான்மை அதிகம். அதனால் சமூகத்திலிருந்து ஒதுங்கி வாழ்கிறார்கள். அவர்களையும் சக மனுஷியாய் மதித்து அவர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு இச்சமூகம் அரவணைத்து செல்லவேண்டும் என்றே ஒவ்வொருவரும் எதிர்பார்க்கிறார்கள்" என்றனர்.

திருருநங்கையர்களின் சமூக பாதுகாப்பு கருதியும், அவர்களின் சிறப்பை வலியுறுத்தும் வகையில் , 2008-ம் ஆண்டு ஏப்ரல் 15-ம் தேதி தமிழக அரசு திருநங்கையர்களுக்கு தனி நலவாரியம் அமைத்தது. இந்த நலவாரியம் அமைக்கப்பட்ட அந்த நாளை திருநங்கையர் தினமாக ஒவ்வொரு வருடமும் கொண்டாட தமிழக அரசு 2011-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி அரசாணை பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

இன்று (திங்கள்கிழமை) மாலை விழுப்புரத்தில் 'மிஸ் கூவாகம்' அழகிப்போட்டி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

நாளை மாலை கூவாகத்தில் கூத்தாண்டவரை கணவராக பாவித்து தாலி கட்டிக்கொள்ளும் நிகழ்வும், நாளை மறுநாள் தேரோட்டமும் நடைபெற உள்ளது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x