Last Updated : 14 Apr, 2019 04:58 PM

 

Published : 14 Apr 2019 04:58 PM
Last Updated : 14 Apr 2019 04:58 PM

வைகோவின் எழுச்சியும், தேர்தல் அரசியலில் மதிமுகவும்: ஓர் அலசல்

அரசியலில் நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை, லட்சியத்தில் உறுதி ஆகிய முழக்கங்களோடு கடந்த 1996, மே 6-ம் தேதி உருவாகியது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்(மதிமுக).

சிறந்த அரசியல்வாதி, எந்தத் தலைவரையும் எந்த நேரத்திலும் சந்திக்கும் வலிமை படைத்தவர்,  , சொல்லாற்றல் மிக்கவர், இலக்கியவாதி, தமிழ்- தமிழர் உணர்வு மிக்கவர், தேர்ந்த வழக்கறிஞர் என பன்முகத் தன்மைகளைக் கொண்டவர் மதிமுக பொதுச் செயலாளர் வை. கோபால்சாமி.

திமுகவின் கொள்கை, அறிஞர் அண்ணாவின் பேச்சு ஆகியவற்றால் ஈர்க்கப்பட்ட வைகோ 1964-ம் ஆண்டு கோகலே மன்றத்தில் இந்தி எதிர்ப்பு பிரச்சாரக் கூட்டத்தில் அண்ணா முன்னிலையில் பேசி அரசியல் வாழ்வில் வைகோ அடியெடுத்து வைத்தார். அண்ணாவின் அன்புத் தம்பியாகவும், கருணாநிதியின் செல்லப் பிள்ளையாகவும் திமுகவில் வைகோ வலம் வந்தார்.

திமுக சார்பில் 20 ஆண்டுகள் எம்.பி.யாக இருந்த வைகோவுக்கு கருணாநிதிக்கு அடுத்தார்போல், கட்சியிலும், தொண்டர்கள் மத்தியிலும் நல்ல மதிப்பும், மரியாதையும் இருந்தது. அதே அளவுக்கு கட்சியில் போட்டியும் உருவானது.

திமுக எம்.பி.யாக இருந்த வைகோ, 1989-ம் ஆண்டு பிப்ரவரி 6-ம் தேதி திமுக தலைமையிடம் அனுமதி பெறாமல் இலங்கை சென்று விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனைச் சந்தித்து 23 நாட்களுக்குப் பின் தாயகம் திரும்பினார். இது வைகோவுக்குப் பெரும் பின்னடைவாக அமைந்தது.

தனது தவறுக்கு வைகோ திமுக தலைமையிடமும், செயற்குழுவிடமும் மன்னிப்பு கோரினார். இந்த சம்பவத்துக்குப் பின் வைகோ, திமுகவில் இருந்து படிப்படியாக ஓரங்கட்டப்பட்டார்.

வைகோவின் விடுதலைப் புலிகள் மீதான பாசம், பிரபாகரனுடனான சந்திப்பு, திமுக ஆட்சிக் கலைப்பு, தேர்தல் பிரச்சாரத்தில் ராஜீவ்காந்தி கொலை போன்றவை திமுகவின் மேலிடத்திற்கு வைகோ மீது கடும் கசப்புணர்வை ஊட்டிவிட்டது. திமுக ஆட்சிக் கலைப்புக்கு வைகோ மறைமுகமாகக் காரணமாகிவிட்டார் என்றெல்லாம் பேசப்பட்டது. திமுக கூட்டங்களுக்கு பேசுவதற்கு கூட வைகோவை அழைப்பதில் திமுக தலைமை கட்டுப்பாடு கொண்டு வந்தது.

கடந்த 1991-ம் ஆண்டு, நவம்பர் 26-ம் தேதி திமுக செயற்குழுவில் வைகோவை நீக்க முடிவு தீர்மானம் கொண்டு வரப்பட்டு, அந்த முடிவு கைவிடப்பட்டது

திமுகவில் இருந்து வைகோ ஓரங்கட்டப்பட்டாலும் அவருக்கான செல்வாக்கு தொண்டர்கள் மத்தியில் குறையவில்லை. இந்நிலையில்தான் கடந்த 1993-ம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி தமிழகத்தின் தலைமைச் செயலாளர் கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தில் வை.கோபால்சாமியின் ஆதாயத்திற்காக உங்களைத் கொலை செய்ய விடுதலைப் புலிகள் திட்டம் வைத்திருப்பதாக மத்திய அரசுக்குக் அதிகாரபூர்வமற்ற தகவல் கிடைத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தக் கடிதமும், அதைத் தொடர்ந்து கருணாநிதியின் பேட்டியும் மதிமுக உருவாக தொடக்கப் புள்ளியாக அமைந்தன.

அரசு அளிக்கும் பாதுகாப்பை ஏற்கப்போவதாக கருணாநிதி தெரிவித்து வைகோ மீது கொலைக் குற்றம் சாட்டினார் கருணாநிதி. தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார் வைகோ. வைகோவுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

வைகோவை கட்சியில் இருந்து நீக்க எதிர்ப்பு தெரிவித்து நொச்சிபட்டி தண்டபாணி, இடிமழை உதயன், கோவை பாலன், உப்பிலியாபுரம் வீரப்பன், கோவை மேலப்பாளையம் ஜஹாங்கீர் ஆகியோர் தீக்குளித்து மாண்டனர்.

திமுகவின் 9 மாவட்டச் செயலாளர்களும், 400-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களும் வைகோவுக்கு ஆதரவாகக் கிளம்ப வைகோவுடன் சேர்த்து, அவர்களையும் திமுக தலைமை நீக்கியது.

வைகோ வெளியேறியது, திமுகவில் “செங்குத்தான பெரும்பிளவு” என்று தமிழக அரசியலில் வர்ணிக்கப்பட்டது. அந்த அளவுக்கு வைகோவின் பின்னால் தொண்டர்கள் திரண்டனர்.

1994-ம் ஆண்டு, மே மாதம் 6-ம் தேதி வைகோ தலைமையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உருவானது. சென்னை தி.நகரில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டிடத்தில் கூடிய பொதுக்குழு கட்சியின் கொடி, கொள்கைகள், குறிக்கோளை வகுத்தது.

வைகோ மதிமுக தொடங்கிய பின், இளைஞர்கள் மத்தியில் பெருத்த ஆதரவு உருவாகியது, அவர் நடத்திய மாநாடுகள், பேரணிகள் அனைத்திலும் திரண்ட தொண்டர்கள் கூட்டம் பிரமிப்பை ஏற்படுத்தியது.

அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசுக்கு எதிராக கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரையிலும், கோவை, சேலம் வழியாக என 1500 கி.மீ . தொலைவு 51 நாட்கள் வைகோ நடைபயணம் மேற்கொண்டார். இது தமிழகத்தில் வைகோவுக்கான ஆதரவை வலுப்படுத்தியது.

இந்த சூழலில் 1996-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் மார்க்சிஸ்ட், ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து மதிமுக போட்டியிட்டது. நியாயமாகப் பார்த்தால் மதிமுகவுக்கு நல்லதொரு தொடக்கமாக இருந்திருக்க வேண்டிய அந்தத் தேர்தல் ரஜினி அளித்த வாய்ஸால் கெட்டது.

ஜெயலலிதாவுக்கு எதிராக ரஜினி கொடுத்த குரல், திமுக, தமாகாவை ஆதரித்த ரஜினியின் வாய்ஸ் ஆகியவை, திமுக, தமாகா கூட்டணியை அமோகமாக வெற்றி பெற வைத்தது. மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் களமிறங்கிய மதிமுக தோல்வி அடைந்தது. 1996-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி வைத்துப் போட்டியிட்டு மதிமுக தோல்வி அடைந்தது.

ஜெயலலிதாவுக்கு எதிராக கடும் விமர்சகராக இருந்த வைகோ, 1998-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அந்தத் தேர்தலில் திமுக சிவகாசி, பொள்ளாச்சி, திருச்செங்கோடு ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றது. மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான ஆட்சி அமைய மதிமுக ஆதரவு அளித்தது.

திமுகவில் இருந்து வெளியேறிய பின் அக்கட்சியை கடுமையாக விமர்சித்து வந்த வைகோ, முதல்முறையாக 1999-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்தார்.  அந்தத் தேர்தலில் பொள்ளாச்சி, திண்டிவனம், திருச்செங்கோடு,  சிவகாசி ஆகிய தொகுதிகளில் மதிமுக வெற்றி பெற்றது. வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைச்சரவையில் இடம் பெற்றது.

2004-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் பெற்றிபெற நல்ல வாய்ப்பு இருந்தும் வைகோ போட்டியிடாமல் கட்சியைச் சேர்ந்தவருக்கு தொகுதியை விட்டுக்கொடுத்தார். நாடாளுமன்றத் தேர்தலில், திமுக கூட்டணியில் இடம்பெற்று சிவகாசி, பொள்ளாச்சி, வந்தவாசி, திருச்சி ஆகிய தொகுதிகளில்  மதிமுகவெற்றி பெற்றது. ஆட்சியில் பங்கு பெறாமல் அரசுக்கு ஆதரவு அளித்தபோதிலும் 2007 ஆம் ஆண்டு, அரசுக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெற்றுக் கொண்டது.

1998,1999 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வைகோ, 2009-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் சேர்ந்து போட்டியிட்டார். 4 இடங்களில் போட்டியிட்ட மதிமுக ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. விருதுநகரில் போட்டியிட்ட வைகோ தோல்வியைத் தழுவினார்.

2014-ம் ஆண்டு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் போட்டியிட்ட மதிமுக தோல்வி அடைந்தது,

சட்டப்பேரவைத் தேர்தலைப் பொறுத்தவரை, 2006-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 2-வது முறையாக ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்தார். பொடா சட்டத்தில் வைகோவைக் கைது செய்து 18 மாதங்கள் சிறையில் அடைத்த நிலையில், ஜெயலலிதாவுடன் கூட்டணி வைகோ கூட்டணி சேர்ந்தது விமர்சிக்கப்பட்டது. இந்தத் தேர்தலில், வாசுதேவ நல்லூர், சிவகாசி, விருதுநகர், திருமங்கலம், தொண்டாமுத்தூர், கம்பம் ஆகிய தொகுதிகளில் மதிமுக வெற்றி பெற்றது.

2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் மதிமுக போட்டியிடாது என்ற வைகோவின் அறிவிப்பு கட்சியின் தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை உருவாக்கியது. எல். கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் உள்ளிட்ட பல்வேறு மூத்த தலைவர்கள் கட்சியில் இருந்து விலகினார்கள், கட்சி பலவீனப்படத் தொடங்கியது.

2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட வைகோ தோல்வி அடைந்து, ஜெயலலிதா அலையால் அடித்துச் செல்லப்பட்டார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்ற மதிமுக  7 இடங்களிலும் தோல்வி அடைந்தது.

2016-ம் ஆண்டு  மக்கள் நலக்கூட்டணியில் இடம்பெற்ற மதிமுக 28 இடங்களில் போட்டியிட்டு, தோல்வியைத் தழுவியது.

தமிழக அரசியலில் மிகப்பெரிய போராளியாகப் பார்க்கப்படும் வைகோ தனது 50 ஆண்டுகால அரசியல் வாழ்வில் ஏராளமான போராட்டங்களை நடத்தியுள்ளார். தமிழர் நலன் சார்ந்த பிரச்சினைகளில் உடனுக்குடன் வைகோ குரல் கொடுக்கக்கூடியவர். மக்களால் பெரிதும் வைகோ மதிக்கப்பட்டபோதிலும், அந்த மதிப்பு தேர்தல் அரசியல் ரீதியாக வாக்குகளாக மாறவில்லை என்பதே நிதர்சனம்.

முல்லைப் பெரியாறு பிரச்சினைக்காக 8 ஆண்டுகள் போராட்டம், ஸ்டெர்லைட் ஆலையை மூட 18 ஆண்டுகள் சட்டப் போராட்டம் நடத்திய வைகோ, தானே நீதிமன்றத்தில் வாதிட்டார்.

இவை தவிர, மதுவிலக்குப் போராட்டம், காவிரி நதிநீர் பங்கீடு, மீத்தேன் எதிர்ப்பு போராட்டம், சீமைக் கருவேல மரங்கள் ஒழிப்பு, தனித்தமிழ் ஈழம் ஆகியவற்றில் வைகோவின் போராட்டம் மக்களால் பாராட்டப்பட்டது, கவனிக்கப்பட்டது. தேர்தல் என்று வரும்போது மட்டும் மக்கள் மதிமுகவை ஏற்க மறுக்கின்றனர்.

அரசியலில் அதிக உணர்ச்சிவசம், போதுமான சாணக்கியத்தனமின்மை, நிலைப்பாட்டை அதிகம் மாற்றுவது போன்றவை வைகோவால் அரசியலில் வெற்றி பெறமுடியாததற்கு காரணங்களாக மக்களால் பார்க்கப்படுகிறது.

பொது வாழ்வில் தூய்மை, தனி வாழ்வில் ஒழுக்கம், தமிழ் மீதும் தமிழரின் மீதும் மாறாது பற்று கொண்ட வைகோவும், மதிமுகவும் தமிழக, தேசிய தேர்தல் அரசியலில் பெரும் சக்தியாக வர முடியாதது பெரும் வருத்தமே

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x