Published : 10 Apr 2019 12:00 AM
Last Updated : 10 Apr 2019 12:00 AM
திண்டுக்கல் மக்களவைத் தொகுதி யில் பா.ம.க. வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்ய, அக்கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் வந்து சென்ற நிலையில், அக்கட்சி மாநிலத் தலைவர் கோ.க. மணி, இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இதுவரை பிரச்சாரத்துக்கு வராதது, அக்கட்சித் தொண்டர்களை வருத்தம் அடையச் செய்துள்ளது.
திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடுகிறது. தொகுதி அறிவிப்பின்போதே, முன்னாள், இந்நாள் அமைச்சர்களின் கோஷ்டிப் பூசலால் பாரம்பரிய தொகுதியை தாரை வார்த்து விட்டதாக அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் குற்றம் சாட்டினர். பாமக சார்பில் அக்கட்சிப் பொருளாளர் திலகபாமா, மாநில நிர்வாகி சீனிவாசன் ஆகியோர் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒட்டன்சத்திரம் அருகே அரசப்ப பிள்ளைபட்டியைச் சேர்ந்த ஜோதிமுத்து வேட்பாளராக திடீரென அறிவிக்கப்பட்டார்.
இதையடுத்து அமைச்சர் திண்டுக்கல் சி. சீனிவாசன் கட்சி நிர்வாகிகள் கூட்டத்துக்கு அவரை அழைத்துச் சென்று பிரச்சாரத்தைத் தொடங்கினார். அதன்பின், தேர்தல் பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம் ஆர். விசுவநாதன் இணைந்து கொண்டார். பாமக வேட்பாளரை ஆதரித்து ஒருநாள் முழுவதும் திண்டுக்கல், கோபால்பட்டி, பழநி, ஒட்டன்சத்திரம், கன்னிவாடி, வத்தலகுண்டு ஆகிய பகுதிகளில் அந்த கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் பிரச்சாரம் செய்தார். அவரைத் தொடர்ந்து பா.ம.க. மாநிலத் தலைவர் கோ.க.மணி, இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் திண்டுக்கல் வந்து ஜோதிமுத்துக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பர் என கட்சியினர் எதிர்பார்த்தனர். ஆனால் இதுவரை அவர்கள் வராதது ஏமாற்றத்தை அளித்துள்ளது.
அதிமுக நிர்வாகிகள் நிலக் கோட்டை இடைத்தேர்தலில் கவனம் செலுத்துவதால் அந் தந்த பகுதி கூட்டணிக் கட்சி நிர் வாகிகளுடன் பாமக வேட்பாளர் பிரச்சாரம் செய்கிறார். வேட்பாளர் அறிவிக்கப்பட்டு 22 நாட்கள் ஆன நிலையில், பாமக வேட்பாளரின் களப்பணியை துரிதப்படுத்த, அக்கட்சித் தலைவர் கோ.க.மணி, இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வரவை எதிர்பார்த்து பாமகவினர் காத்திருக்கின்றனர். ஆனால், பிரச்சாரம் முடிய 6 நாட்களே உள்ள நிலையில், இருவரும் பிரச்சாரத்துக்கு வருவதற்கான அறிகுறியே இல்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT